September 12, 2025
  • September 12, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நவ’ரசவாதி’ அர்ஜுன் தாஸ்..!
September 12, 2025

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நவ’ரசவாதி’ அர்ஜுன் தாஸ்..!

By 0 21 Views

திரையில் முகத்தைப் பார்த்ததுமே கைத்தட்டலும் விசிலும் பறக்க வேண்டும் என்றால் அது மக்களிடம் அபிமானம் பெற்ற நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த சாத்தியத்தை சமீபகாலமாக தனதாக்கிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸ், பின்னர் நாயகனாகி போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’யில் மிரட்டினார். அவை அனைத்துமே ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப்பின் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘தலை’ க்கே வில்லனாக வந்து மாஸ் காட்டினார்.

ஆனால், சும்மா வந்தோம் ஹீரோவை மிரட்டினோம் என்றெல்லாம் இல்லாமல் ஹீரோவுக்கு ஈடாக நவரசங்களையும் காட்டி சகல திறமைகளையும் காட்டி அவர் அதில் நடித்து இருந்தது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அவருக்கு பெற்றுத் தந்து இருக்கிறது.

அதை இன்று வெளியாகும் அவரது ‘ பாம்’ படத்தில் நேரடியாகவே காண முடிந்தது. அவர் அறிமுகமாகும் காட்சியிலேயே தியேட்டர் அதிரி புதிரியாக அல்லோல கல்லோலப் பட்டது.

விஷால் வெங்கட் இயக்கத்தில், தீண்டாமையை வித்தியாசமாக அணுகி இருக்கும் பாம் படத்தில் கதையைத் தாங்குவதோடு, நட்புக்கும் தோள் கொடுத்து அதில் நண்பன் காளி வெங்கட்டையும் ‘தாங்கி’ நடித்திருக்கிறார்.

காளி வெங்கட்டின் கனமான உடலை நான்கு பேர் சேர்ந்தும் தூக்க முடியாத சூழலில் அர்ஜுன் தாஸ் ஒருவரே அவரை தோளில்  தூக்கிக்கொண்டு செல்வது வேதாளத்தை விக்ரமாதித்தன் முதுகில் சுமந்த கதைகளை ஞாபகப்படுத்துகிறது.

நடிப்புடன் அவரது காந்தக் குரலும் ஒரு பேசும் பொருள் ஆக இருக்கிறது. அதை முன்னிலைப்படுத்தியே இயக்குனர் விஷால் வெங்கட்டும், “உன் குரலை முன்வைத்து நீ மக்களிடம் பேசினால் நல்ல மாற்றத்தை உருவாக்கலாம்…!” என்று காளி வெங்கட் பேசுவது போல் ஒரு வசனத்தையும் எழுதி இருக்கிறார்.

அந்த வசனம் படத்தில் வரும் போதும் ரசிகர்களின் விசில் காதைப் பிளப்பது அவர் மக்களிடம் ஒரு வாய்ஸ் உள்ள நடிகர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

“நான் நாயகன்… இப்படித்தான் நடிப்பேன்..!” என்றெல்லாம் தனக்கு ஒரு அளவுகோல் வைத்துக் கொள்ளாமல் ஏற்கும் பாத்திரத்திற்கு ஏற்ப அதற்குள் தன்னை புகுத்திக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ் விரைவில் தமிழ்ப் பட உலகின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்..!

– வேணுஜி