November 22, 2024
  • November 22, 2024
Breaking News
October 17, 2021

அரண்மனை 3 திரைப்பட விமர்சனம்

By 0 566 Views

ஒரு படம் வெற்றியடைந்தால் அதே தலைப்பில் இரண்டாம் முறை எடுக்கலாம். அதே தலைப்பில் அதுவும் முதல் இரண்டு படங்களை எடுத்த அதே இயக்குநர் மூன்றாம் முறையும் எடுக்கத் துணிவதென்றால் அந்த டைட்டில் மீது அந்த இயக்குநருக்கு எப்படி ஒரு அபார நம்பிக்கை இருக்கும் பாருங்கள். 

அப்படித்தான் சுந்தர்.சிக்கு அரண்மனை மீது அப்படி ஒரு ‘பேய் நம்பிக்கை’ ஏற்பட்டு அதில் முப்பெரும் வெற்றியும் அடைந்திருக்கிறார். அதுவும் அரண்மனையில் தங்கியிருக்கும் பேய்களென்றால் அவருக்கு அப்படி ஒரு ‘பாண்டிங்’. 

ஜமீன் சம்பத்தின் பிரமாண்ட அரண்மனைக்குள் இருபது வருடங்களுக்கும் மேலாக ஓர் ஆவி சுற்றிக்கொண்டிப்பதாக நம்பப்பட அதனால் அவர் மகளான நாயகி ராஷிகண்ணாவுக்கும் இன்னொரு நாயகி சாக்‌ஷிஅகர்வால் குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.

இதற்கிடையே அரண்மனைக்கு மின்சாரப் பணிகளை மேற்கொண்டு வரும் ஆர்யாவும், சம்பத்தின் உறவினர் சுந்தர்.சியும் அரண்மனைப் பேய்களை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை திகிலும் நகைச்சுவையும் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் இது.

எதிர்பார்த்ததைப் போலவே எதிர்பாராமல் அரண்மனைக்கிளி ராஷிகண்ணா மீது ஆர்யாவுக்குக் காதல் என்றொரு கிளைக்கதையும் இருக்கிறது.

வித்தியாசமாக நடிக்க முடியாவிட்டாலும் வித்தியாசமான வேடங்கள் கிடைப்பது ஆர்யாவின் பலம். இரண்டு பாடல்கள் இரண்டு சண்டைகள் என்று ஹேன்ட்சம்மாக வந்து போகிறார். இடைவேளையின் திடீர் திருப்பத்துக்கு அவர் காரணமாக இருப்பது எதிர்பாராத திருப்பமும் கூட.

நடிக்க முயற்சித்திருப்பதற்கே ராஷி கன்னா போன்ற நடிகைகளுக்கு நற்சான்றிதழ் தரலாம். ஆனால், அவரோ கிளாமர் ஏரியாவில் டாக்டரேட் முயற்சியில் ஈடுபட்டிருப்பது காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் உத்தி. 

ஆர்யாவின் அறிமுகத்துக்கு இணையாக அரண்மனைக்கு திடீரென வரும் சுந்தர்.சியின் அறிமுகமும் திரைக்கதைக்கு விறுவிறுப்பைச் சேர்க்கிறது. எந்த வேடத்துக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று உணர்ந்து அதற்கேற்ற நடிக நடிகையரைத் தேர்வு செய்திருக்கும் சுந்தர்.சி தனக்கு ஏற்ற வேடத்தையும் கவனமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத இந்தப்படத்தில் விவேக் அந்த வேலையைத் தனக்கே உரிய பாணியில் செய்திருந்தாலும் அவர் இப்போது இல்லையே என்ற எண்ணம் கண்ணீர் ததும்ப வைக்கிறது. அவரை வைத்து முரட்டு சிங்கிள் என்பதற்குப் படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் வேறானது. அவருடன் நகைச்சுவைக்குப் பொறுப்பேற்கும் யோகிபாபு, மனோபாலா ஆகியோரும் சிறப்பாகவே பங்களித்திருக்கிறார்கள். 

இந்தப்படத்தில் பேயாக ஆகியிருக்கும் ஆண்ட்ரியாவை மிஷ்கின் தன் படத்தில் பிசாசாகவும் ஆக்கியிருப்பதில் ஆன்ட்ரியாவை இப்படிப் பார்ப்பதில் இயக்குநர்களுக்கு என்ன கொண்டாட்டம் என்பது தெரியவில்லை. சாக்‌ஷி அகர்வால், நளினி, மைனா நந்தினி, சம்பத், வேலராமமூர்த்தி, மதுசூதனராவ், விச்சுவிஸ்வநாத், வின்சென்ட் அசோகன் உட்பட அரண்மனை கொள்ளாத ஒரு கூட்டமே நடித்திருக்கிறது.

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, கம்ப்யூட்டர் காட்சிகளுடன் இணைந்து களைகட்டி இருக்கிறது. இந்த சிஜி காட்சிகளாலேயே முதல் இரண்டு பாகங்களைவிட இந்த மூன்றாம் பாகம் பிரமாண்டமாகி இருக்கிறது.

ஐந்து பாடல்களை ஐந்து வகையாக இசையமைத்திருக்கிறார் சி.சத்யா. அவை கேட்கவும் பின்னணி இசை படத்தைப் பார்க்கவும் துணை செய்திருக்கிறது. 

நகைச்சுவை ததும்பும் திரைக்கதையும், பேய் நம்பிக்கைகளும் இருக்கும் வரை சுந்தர்.சி இதில் எத்தனை பாகங்கள் வேண்டுமானாலும் இயக்குவார்.

அரண்மனை 3 – ஹேட்ரிக்..!