‘மக்களுக்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல… அரசியல் மாற்றம்..!’ என்கிற வலுவான விஷயத்தை நீட்டி முழக்கி நிமிர்ந்து குனிந்து வளைந்து படுத்தெல்லாம் சொல்லி இருக்கும் படம்.
பெண்ணியவாதியான அஞ்சனா கீர்த்தி, தன்னுடன் ஒரு செம்படையைத் தயார் செய்து கொண்டு அரசியலில் மாற்றம் நிகழ்த்தப் போகிறேன் என்று கிளம்புகிறார். அவரது குடும்பம் சட்ட வல்லுநர்களைக் கொண்டிருக்க அப்பாவே நீதிபதியாக இருந்தும், அத்தனை பேரின் அறிவுரையையும் மீறி தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறார் அஞ்சனா. சட்டமன்றத்தை முற்றுகையிடப் போகிறோம் என்று கிளம்பும் அவரது போராட்டம் என்ன ஆனது என்பது ஒரு லைன்.
இன்னொரு பக்கம் கதை நாயகன் போலவும் களம் இறங்கி இருக்கும் இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் மருத்துவக் கல்லூரி மாணவராக இருக்கிறார். அவர் படிக்கும் மருத்துவக் கல்லூரியை தனியார் வம்சம் ஒப்படைக்கப் போவதை அறிந்து அதைத் தடுக்கப் பலவகையிலும் போராடிப் பார்த்தும் முடியாமல் நண்பர்கள் சிலருடன் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இது இன்னொரு லைன்.
இந்த சமுதாய போராட்டங்கள் வெற்றி பெற்றனவா… இவற்றின் விளைவுகள் என்ன என்பதுதான் கதை.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு (உஸ்ஸ்ஸ்… அப்பாடா…) கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதனின் தன்னம்பிக்கையும், துணிச்சலும் பாராட்டத் தகுந்தவை. துணிச்சலின் உச்சகட்டம் நடுத்தர வயதைத் தாண்டிய அவர் இதில் கல்லூரி மாணவனாக நடித்திருப்பது. அத்துடன் காதலி மேகாலியுடன் டூயட் குத்துப் பாட்டு என்றும் இன்னொரு பக்கம் லவ்ஸ் வேலையும் பார்த்து இருப்பது.
அவருடன் உற்ற தோழனாக வருபவர் லொள்ளு சபா ஜீவா. ஆனால் இதில் காமெடி எல்லாம் பண்ணாமல் சீரியஸ் ஆகவே வந்து போகிறார்.
படம் முழுவதும் வியாபித்திருப்பவர் அஞ்சனா கீர்த்திதான். மூன்று மணி நேரப் படம் முழுவதும் இவர் வசனம் பேசி நடித்திருக்கிறார். அதையெல்லாம் மனனம் செய்து நடித்தாரா அல்லது பிராம்ட் முறையில் பேசி நடித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் எந்த இடத்திலும் தடுமாறாமல் அட்சர சுத்தமாகப் பேசி நடித்திருப்பதில் மிரள வைத்திருக்கிறார் அஞ்சனா.
இந்தப் படத்தில் நடிப்புக்காக ஏதாவது விருது கிடைத்தால் அது அஞ்சனாவுக்காக இருக்கலாம். உயரம், மிடுக்கு, அழகு என்று திரை ஆளுமையாக அசத்துகிறார் அஞ்சனா கீர்த்தி.
இவர் மட்டும் இந்த படத்தில் இல்லை என்றால் மூன்று மணி நேரத்தைக் கடத்துவது மூச்சைப் பிடித்து கடலுக்குள் பாய்ந்து முத்துக் குளிப்பதைப் போல ஆகியிருக்கும்.
பாலு வைத்தியநாதனின் காதலி மேகாலி, காதலனுக்காக உண்ணாவிரதத்தில் உட்காருவது சரி ஆனால் உண்ணாவிரத மேடையிலும் காதலனைப் பார்த்துக் கொண்டே நினைவில் டூயட் பாடி கொண்டிருப்பதெல்லாம் ஓவர்.
இவர்களுடன் ஜாக்குவார் தங்கம், பயில்வான் ரங்கநாதன் போன்றவர்களும் இடையிடையே வந்து போகிறார்கள்.
ஆனால் மேடை நாடக பாணியில் ஒவ்வொருவரும் அவர்கள் நின்ற இடத்தில் நின்று கொண்டு மணிக்கணக்காக வசனங்களை பேசிக்கொண்டிருப்பது நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.
படத்தின் உரையாடல்கள் என்னவோ நாட்டுக்குத் தேவையான புரட்சிக் கருத்துகள் தான். ஆனால் அவற்றில் எது வேண்டும் எது வேண்டாம் என்று எடிட் செய்து வேண்டியவற்றை மட்டும் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எழுதியதை எல்லாம் சொல்லியாக வேண்டும் என்று நினைத்திருக்கும் இயக்குனரின் சர்வாதிகாரம் கண்டிக்கப்பட வேண்டியது.
கடைசியில் ஆளைக் காட்டும் போதுதான் இந்தப் படத்துக்கு இசை ஸ்ரீகாந்த் தேவா என்று தெரிகிறது. வழக்கமாக பின்னணி இசையில் வெளுத்து வாங்குபவர் இந்தப் படத்தில் எல்லோரும் நின்று கொண்டே வசனங்களை பேசிக் கொண்டிருப்பதில் என்ன செய்வதென்று யோசித்து யோசித்து அங்கங்கே இசைத்திருக்கிறார்.
படத்தின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு நறுக்குத் தெரிந்தால் போல் சினிமா மொழியில் இந்தப் படத்தை எடுத்திருந்தால் கண்டிப்பாக கவனிக்கத்தக்க படமாக உருவாகி இருக்கும்.
நீட் தேர்வுக்காக தற்கொலை செய்து கொண்ட அனிதா போன்ற ஒரு பாத்திரத்தை அனிதாவின் பெயரிலேயே காட்டி நீட் தேர்வில் தோற்றாலும் தற்கொலை செய்து கொள்ளாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகிவிட்டதாக சொல்வது பாராட்டத்தக்க விஷயம்.
ஆனால் மூச்சு விடாமல் தம் கட்டிப் பேசியே நம் பொறுமையை சோதித்ததில்…
அளவுக்கு மிஞ்சிய இந்த அறமும் நஞ்சாகி விட்டது..!
– வேணுஜி