சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்து உள்ளார்.
அதில், “நடிகர் சூர்யா வெளியிட்ட நீட் தேர்வு குறித்த அறிக்கையை ஊடகங்கள், சமூக ஊடக வலைத்தளங்கள் செய்தியாக வெளியிட்டன. அது குறித்து முழுமையாக அறியாமல் எந்த புரிதலும் இல்லாமல், பதிவுகளை முறையாக ஆராயாமல், நீதித்துறை நிர்வாக மனப்பான்மை சிறிதும் இன்றி ஒரு தன்னிச்சையான முடிவில், மலிவான விளம்பரத்திற்காக நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிபதி சுப்பிரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்…” என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதில், “நீட் நுழைவுத் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட குறிப்பை டி.வி மற்றும் யூடியூபில் பார்த்ததாகக் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து அக்கறையை வெளிப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த வகையில் தனது உரிமையில் நடிகர் சூர்யா குரல் கொடுத்து உள்ளார்.
அதில், நீதிபதிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணை நடத்தி நீதியை வழங்கும் சூழலில், மாணவர்கள் மட்டும் எப்படி கோவிட் 19 பரவல் குறித்து அச்சமின்றி நீட் தேர்வு எழுத முடியும்? என கேள்வி எழுப்பி இருந்தார்” என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், “சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தாக்கல் செய்துள்ள மனுவில், நீதிமன்ற அவமதிப்புக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றும், மனித நேய அடிப்படையிலும், மாநில உரிமை அரசியல் பார்வையிலும் நீதித்துறை அதன் அரசியலமைப்பு ரீதியாகப் பலரால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகளைத் தான் நடிகர் சூர்யாவும் வெளிப்படுத்தி உள்ளார்.
அதுவே அவரது நோக்கமாகும். ஆனால், இதை உணராமல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு என கூறுகிறார்.
அத்துடன், உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் எழுதிய கடிதம் ஊடகங்களில் எவ்வாறு வெளியானது? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தைச் சட்ட விதிமுறைகளை மீறி பொதுவில் வெளியிட்டதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
நீதித்துறை கொள்கைகளுக்கு எதிராகச் சட்டவிரோதமான, தன்னிச்சையான, நியாயமற்ற, அதிகார துஷ்பிரயோகமாகவே இதனைக் கருத வேண்டும். அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.