படம் தொடங்கியதும் முரளி ராதாகிருஷ்ணன் ஒரு தற்கொலை முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.
அதிலிருந்து சின்ன பிளாஷ்பேக் போனால் உழைப்பால் உயர்ந்த தொழிலதிபராக முரளி ராதாகிருஷ்ணன் இருக்கிறார். ஆனால் அவருக்கு காதல் உள்பட சுயநலம் எதுவும் இல்லை. இருந்தாலும் அவரிடம் வேலை செய்யும் நாயகி அவரை தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், எதையும் கண்டுகொள்ளாத முரளி தன் நண்பன் விஜய் கிருஷ்ணா ஒரு இசையமைப்பாளராக மாற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். அது மட்டுமே அவர் குறிக்கோளாக இருக்கிறது. அதன்படி விஜய் கிருஷ்ணா ஒரு கட்டத்தில் இசையமைப்பாளராக மாற… அப்படி ஒரு ஆனந்தம் முரளிக்கு. அங்கிருந்து இன்னொரு பிளாஷ்பேக் போகிறது கதை.
நிற்க… இதுவரை கடந்த கதை ஒரு சாதாரண எதிர்பார்ப்பையே இந்த படத்தின் மேல் ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த இரண்டாவது ஃப்ளாஷ் பேக்கில் இருந்து கதையில் ஏற்படும் மாற்றம் நம்மை வியப்புக்குள்ளாக்கி விடுகிறது. அதிலும் அப்படி ஆரம்பித்த படம் இப்படி ஒரு பாதையைப் பிடிக்கும் என்று யாராலும் எதிர்பார்க்க முடியாது.
அதிலும் இதுவரை நாம் பார்த்த படங்களில் இல்லாத முயற்சியாக தன் தந்தை விஜய் கிருஷ்ணாவின் (அதுதான் சஸ்பென்ஸ்) ஏமாற்றம் மிக்க மாணவப் பருவத்தைப் பற்றி கேள்விப்படும் அவரது மகன் மாஸ்டர் ராகவன் அப்பாவின் கடந்த காலக் கண்ணீரைத் துடைக்க விரும்புகிறார். அதுவும் கடந்த காலத்திலேயே அவரை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் அவரது விருப்பமாக இருக்க அது எப்படி சாத்தியமானது என்பதுதான் கதை.
நடிகனுக்கு உரிய எல்லா இலக்கணங்களும் அமையப்பெற்ற முரளி ராதாகிருஷ்ணன் படத்தின் நாயகனாகி இருக்கிறார். ஆனால் நாடக பாணியிலான அவரது எக்ஸ்பிரஷன்களை கொஞ்சம் சினிமாவுக்காக குறைத்துக் கொள்வது நலம். ஆனாலும் நண்பனின் காதலியைத் தாய்ப்பாசத்துடன் அவர் பார்க்கும்போது ஒரு மகனாக ஸ்கோர் செய்து விடுகிறார். இவரது தியாகம்தான் படமே..!
அவரது நண்பனாகவும் இன்னொரு நாயகனாகவும் வரும் விஜய் கிருஷ்ணாவும் தன் பாத்திரம் உணர்ந்து சோக முகத்துடன் வருகிறார். நடிப்பில் பெரிய குறை எதுவும் தெரியவில்லை.
தொடக்ககால ப்ரியாமணி சாயலில் இருக்கும் நாயகி தீபா உமாபதிக்கு அப்பழுக்கு இல்லாத அழகு முகம். காதலுக்குத் தோதான வயதும் கூட. அதன்படியே முரளியைத் துரத்தித் துரத்தி காதலிக்கிறார். ஆனால், அதைத் தவிர வேறெந்த வேலையும் அவருக்கு இல்லை. இந்த இளமைக்கும், வனப்புக்கும் ஏற்ற பாத்திரங்கள் அமையும்போது தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருவார் தீபா..!
விஜய் கிருஷ்ணாவின் மனைவியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணனும் கொள்ளை அழகு. ஒரு சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருக்கும் அவரைத் தமிழ் சினிமா இவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.
மாஸ்டர் ராகவன் நடிப்பும் இயல்பாக இருக்கிறது. தந்தைக்காக இப்படி ஒரு தியாகத்தை செய்யும் மகனை இதுவரை திரைக்கதை கண்டதில்லை.
முரளி ராதாகிருஷ்ணனின் நண்பன், விஜய் கிருஷ்ணாவின் பெற்றோர் என்று ஏனைய பாத்திரங்களில் நடித்திருப்போரும் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை இத்தனைக் குறைவான பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் எழுதி இயக்கியிருக்கும் சுந்தர் கிரிஷ் பாராட்டுக்குரியவர். இதே படத்தை பெரிய நட்சத்திரங்களை வைத்துப் பெரிய பட்ஜெட்டில் இயக்கி இருந்தால் பான் இந்தியக் கவனம் பெற்றிருக்கும்.
ஆனால், மெதுவாகச் செல்லும் ட்ரீட்மென்ட், நீளமான எக்ஸ்பிரஷன்கள் என்று இருப்பதை மாற்றி விறுவிறுப்பாக்கும்
வித்தையை அவர் கற்றுக் கொள்ள வேண்டும். அதை மட்டும் மாற்றி விட்டால் குறிப்பிடத் தக்க இயக்குநராக மாறிவிடுவார்.
ரேஹானின் இசை குறிப்பிடத் தக்க அளவில் உள்ளது. அதுவும் ஒரு இசையமைப்பாளரின் கதை என்பதால் கொஞ்சம் ஏறியே அடித்துக் கிளப்பி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வினோத் காந்தியும் படத்தின் பட்ஜெட் குறை தெரியாத நேர்த்தியில் கடமை ஆற்றியிருக்கிறார். புதுச் சேரியைக் கூட புத்தம்புதுச் சேரியாகக் காட்டியிருக்கும் அவரைப் பாராட்டலாம்.
ஆனால், இப்படி ஒரு விஞ்ஞான அற்புதம் கூட இறைவன் அருளால் நடப்பதாக காட்டியிருப்பது முரண்.
அதேபோல் தங்களிடையே வாழ்ந்த ஒரு மனிதன் திடீரென்று காணாமல் போகும்போது அதைச் சமுதாயம் எப்படி எதிர்கொள்ளும்..? அதுவும் அவர் ஒரு தொழிலதிபராகவும் இருக்கிறார். குறைந்தபட்சம் அவர் தொழிலை காதலி வசம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்று அங்கு இறந்து போனதாக நம்ப வைத்திருக்கலாம்.
அதேபோல் சமஸ்கிருதம் தொடாத நல்ல தமிழ்த் தலைப்பையும் வைத்திருக்கலாம்.
இந்த லாஜிக்கையெல்லாம் தாண்டிப் பார்த்தாலும் ஆச்சரியம் குறையாமல் இருப்பது படத்தின் சிறப்பு.
அனுக்கிரகன் – மகன் தந்தைக்கு ஆற்றிய உதவி..!
– வேணுஜி