எல்லா உணவுகளிலும் ஒரே வகை உணவுப் பொருள்கள்தான் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அதனதன் அளவு தெரிந்து, உணவைச் சமைக்கும் போது அது அறுசுவை உணவாகவோ சுவையற்ற உணவாகவோ மாறுகிறது.
அப்படி, சரியான விகிதத்தில், சரியான சுவைகளைச் சேர்த்து சரியான பதத்தில் தயாரிக்கப்பட்ட அறுசுவை உணவாகி இருக்கிறது இந்த அந்தகன்.
கொஞ்சம் இடைவெளி விட்டு டாப் ஸ்டார் பிரசாந்தை இந்தப் படத்தில் பார்க்கிறோம். நடனம், சண்டை என்று அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர் என்றாலும் இந்தப் படத்தைப் பொருத்தவரை கதைதான் நாயகன் என்பதால் அடக்கி (பியானோ) வாசித்திருக்கிறார். அதுவே அவருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.
பியானோ இசையும் கற்றவர் என்பதால் மெத்தப் பொருத்தமாக இருக்கிறது அவரது வேடம்.
ஆரம்பத்தில் அவரைப் பார்வையற்றவர் என்று நினைக்கிறோம். ஆனால், ஒரு கட்டத்தில் பார்வையுள்ள அவர் பார்வைத் திறனாளி போல நடிக்கிறார் என்பது புரிகிறது. அதற்குப் பின்னால் இன்னொரு திருப்பம் ஏற்பட, அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார் பிரசாந்த்.
அவர் பயணத்தில் இந்தப் படம் முக்கியமான அடையாளமாக அமைகிறது.
பிரசாந்துக்கு ஜோடியாக பல படங்களில் சிம்ரன் நடித்திருந்தாலும் இதில் அவர் பாத்திரத்திற்கு எதிர்மறையான வேடம். காதல், சீற்றம், இயலாமை, வெறித்தனம் என்று பன்முகம் காட்டி அடங்காத வில்லத்தனம் காட்டியிருக்கிறார் சிம்ஸ்.
பிரியா ஆனந்த் பிரசாந்தைக் காதலிப்பதால், அந்தக் காதல் உணர்வில் ஒருநாள் கலவி இன்பமும் அனுபவிப்பதால்… மட்டுமே நாயகி ஆகியிருக்கிறார்.
பார்வைத் திறனாளி என்று பிரசாந்த்தை நினைத்து அவர் முன்னாலேயே ஆடை மாற்றி சூடு ஏற்றுபவர், கதை சூடு பிடித்ததும் பின்தங்கி விடுகிறார்.
எல்லாப் படங்களிலும் வீணாகக் கைகளை விரித்துக் கொண்டு வந்து நிற்கும் சமுத்திரக் கனி இதிலும் விறைத்துக்கொண்டு வந்தாலும் அந்த விறைப்பு ரசிக்க வைத்திருக்கிறது.
ஊருக்கு வில்லனாக இருந்தாலும் மனைவி வனிதா விஜயகுமார் முன்னிலையில் விழி பிதுங்கும் கணவராக நிற்கும் காட்சிகள் தியேட்டரைக் கலகலக்க வைத்திருக்கின்றன.
இவர்களுடன் கடந்த தலைமுறை நவரச நாயகனாக தமிழ் உள்ளங்களைக் கவர்ந்த கார்த்திக், அவரது இயல்பான அடையாளத்துடன் நடிகராகவே வருகிறார். ஆனால், இப்படி ஒரு வேடத்தில் நடித்த அவரது துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும்.
முதல்பாதி விறுவிறுவென்று கடக்க, இரண்டாம் பாதியில் கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு கூட்டணி அடிக்கும் லூட்டி ஹைலைட். லாஜிக்கெல்லாம் பார்க்காமல் அவர்களது நகைச்சுவையை ரசிக்கலாம்.
ஓரிரு காட்சியில் வந்தாலும் மனோபாலா வரும்போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது.
ஒரே காட்சியில் வந்தாலும் படத்தை ஆரம்பித்ததும், முடித்தும் வைக்கிறார் பெசன்ட் ரவி.
இப்படி இத்தனை நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து படத்தைத் தொய்வில்லாமல் இயக்கி இருக்கும் தியகராஜன்தான் படத்தில் முகம் தெரியாக நாயகன். ஆனால், ஒரு காட்சியில் தன் முகத்தைக் காட்டியும் விடுகிறார்.
கதையும், திரைக்கதையும்தான் படத்தின் உயிர்நாடி. பதினைந்து நிமிடப்படம் இயல்பாகக் கடக்க, கார்த்திக் வீட்டுக்கு பிரசாந்த் வரும் நொடியிலிருந்து வேகமெடுக்கிறது.
அங்கிருந்து அடுத்தடுத்து வரும் சஸ்பென்சும், திருப்பங்களும் நாம் சற்றும் கணிக்க முடியாதவை. எப்படித்தான் இந்தப்படத்தை முடிப்பார்கள் என்ற ஆச்சரியத்துடன் விரைந்து நச்சென்று முடிகிறது படம்.
ரவியாதவின் ஒளிப்பதிவும் சரி, சந்தோஷ் நாராயணனின் இசையும் சரி… இயக்கத்துக்கு இசைந்தே பயணித்து இருக்கின்றன.
இடையிடையே வரும் இசைஞானியின் இசையும், ஆதித்யன் இசைத்த பாடலும் எக்ஸ்ட்ரா டிரீட்.
இந்தியிலிருந்து தழுவல் பெறப்பட்டாலும், இந்தப் படம் ஆரம்பித்து சில வருடங்கள் ஆனாலும் இப்போது பார்க்கும்போது புத்தம் புதுப் படம் போலவே இருப்பது இதன் தனிச்சிறப்பு.
அந்த வகையில் இதன் மூலமான அந்தாதூன் பார்த்தவர்களுக்கும் சரி, அந்தப் படம் பற்றி தெரியாதவர்களுக்கும் சரி சுவாரஸ்யம் குறையாத படமாக இருக்கிறது இந்தப் படம்.
அந்தகன் – ராஜ பார்வை..!
– வேணுஜி