விவசாயத்தின பெருமையைச் சொல்ல, “அவர்கள் சேற்றில் கை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள். அதேபோல் ராணுவத்தின் பெருமையை சொல்ல, “அவர்கள் கண் விழித்து நாட்டைக் காக்க வில்லை என்றால் நாம் நிம்மதியாக கண் மூடி தூங்க முடியாது…” எனலாம்.
அந்த வகையில் தீவிரவாதிகள் இடம் இருந்து நாட்டை காப்பாற்ற இன்னுயிரை நீ்த்து இந்தியாவின் உயரிய அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பயோபிக்காக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக இணைந்து, பின் கேப்டனாக பதவி ஏற்ற முகுந்த், தொடர்ந்து 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக உயர்கிறார்.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதத்தைக் களை எடுக்க முயலும் முகுந்த், அதன் முக்கிய கட்டமாக, அல்டாஃப் பாபா என்ற பயங்கரவாதியை சுட்டுக் கொல்ல, அதன் விளைவு அவரை எப்படி பாதித்தது என்பதுதான் மீதிக் கதை.
இந்தக் களை எடுப்புகளுடன் கல்லூரியில் படிக்கையில் இந்து ரெபேக்கா வர்கீஸ் – உடனான முகத்தில் காதல் திரைக்கதையில் முக்கியத்துவம் பெறுகிறது.
இதுவரை நாம் பார்த்த சிவகார்த்திகேயனை இதில் பார்க்க முடியாதது கண்டிப்பாக நமக்கு ஏமாற்றம் அல்ல. அவருக்கு நடிப்பில் இந்தப் படம் அவருக்கு ஏற்றம்தான்.
எப்படி கப்பலோட்டிய தமிழனையும், வீரபாண்டியக் கட்டபொம்மனையும் நினைத்தால் நம் மனதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முகம் வருகிறதோ, அப்படி இனி மேஜர் முகுந்தின் முகம், சிவகார்த்திகேயனுடையதாக நம் மனதில தோன்றும்.
உடலை உறுதியாகியது மட்டுமல்லாமல், நடிப்பிலும் அடுத்த பரிமாணத்தைத் தொட்டிருக்கிறார் எஸ்.கே.
அவரது காதல் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீசாக வரும் சாய்பல்லவி நடிப்பை சொல்லியே ஆக வேண்டும். தான் போரில் இருந்து விட்டால் நீ எனக்காக அழக்கூடாது என்று முகுந்த் அவரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டதற்காக, அவர் இறந்த செய்தி வந்ததும் அதைக் கேட்டு உடைந்து அழுது, கொடுத்த சத்தியம் நினைவுக்கு வந்து சட்டென்று அந்த அழுகையை நிறுத்தி முகுந்த் சிதைக்கு போகும் வரை ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் சத்தியத்தை காப்பாற்ற ும் சாய்பல்லவிக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதுகள் கிடைக்கலாம்.
இவர்களுக்கு அடுத்து முகுந்த்துக்கு இராணுவ நடவடிக்கைகளில் பக்கபலமாகத் துணை நிற்கும் விக்ரம் சிங் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த பூவன் அரோராவையும் பாராட்டியே ஆக வேண்டும்.
ஐந்து தலைமுறையாக ராணுவத்தில் அவர் குடும்பம் இருப்பதை சொல்லி, எனக்கு பின் என் மகனும் ராணுவத்தில் இருப்பான் என்று பெருமை பூக்கும்போது நமக்குப் புல்லரிக்கிறது.
தன் வழக்கமான எந்த அடையாளங்களும் இல்லாமல் ஒரு சர்வதேச படம் போல் இசையமைத்திருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் படத்தில் இன்னொரு ஹீரோ ஆகிறார். அதே சர்வதேச தரம் ஸ்டீபன் ரிச்சர்டின் ஒளிப்பதிவிலும்.
பெரும்பாலும் துப்பாக்கிகளை வெடிக்கும் ஆக்ஷன் கதையில் அங்கங்கே கைச்சண்டையும் போட நேர்ந்திருப்பது ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவின் அடையாளம் ஆகிறது.
காஷ்மீருக்கு சென்று, நம் இந்திய ராணுவத்தின் பெருமையான முகத்தை நம் மக்களுக்கு அடையாளப்படுத்தி இருப்பதில் மணிரத்தினத்துக்கு அடுத்து சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. அதிலும் காஷ்மீர் பகுதி காட்சிகளில் உண்மையான காஷ்மீரிகளையே நடிக்க வைத்திருப்பது படத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து இருக்கிறது.
படத்தின் குறையாக ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால், உண்மையான முகம் சமுதாயத்தில் எந்த ஈனப் பிரிவை சார்ந்தவரோ அதன் அடையாளத்தை மாற்றி இருப்பது. ஒரு பயோபிக்கில் இப்படிப்பட்ட தவறைச் செய்யலாமா ராஜ்குமார்..?
ஆனாலும், இந்த வருடம் வெளிவந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகி இருக்கிறது அமரன்.
இந்தப் படத்தை தயாரித்ததற்காக கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் இன்னொருமுறை பெருமை கொள்ளலாம்.
அமர(ன்) காவியம்..!
– வேணுஜி