மொழி, இன, பேதங்கள் இல்லாத சினிமாவுக்குள் வடக்கிலிருந்து தெற்குக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் கலைஞர்கள் சிறகடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி பூனாவில் இருந்து கோலிவுட் நோக்கி சிறகடித்து வந்திருக்கிறார் திருப்தி அனுமந்த் போஸ்லே.
நடிக்கும் ஆர்வத்தில் வந்திருப்பதால் நாம் அவரை நடிகை என்றே கொள்வோம்.
அண்ணன் கலெக்டர், அப்பா புரபஸர் என்பதுடன் டாக்டர்களும் எஞ்சினியர்களுமாக நிறைந்த குடும்பத்திலிருந்து முதல் முதலில் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டு கோலிவுட்டில் இரங்கியிருக்கிறார் திருப்தி.
படித்த குடும்பம் என்பதால் அதற்கு மதிப்பு கொடுப்பது போல் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்து முடித்துவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார் இவர்.
“கம்ப்யூட்டர் கல்வி தராத உயர்வை சினிமா தந்து விடுமா..?” என்று ஒரு கேள்வியைப் போட்டால்…
“எனக்கு வகுப்பில் பாடம் சொல்லித் தரும்போதெல்லாம் என் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது சினிமா மட்டுமே. எனவே கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முடித்தாலும் வேறு எந்த வேலைக்கும் அப்ளிகேஷன் போடாமல் நேராக மும்பை கிஷோர் நமித் கபூர் ஆக்டிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அப்ளை செய்து விட்டேன்..!” என்று சிரிக்கிறார் திருப்தி.
அப்பாவிடம் சினிமாவுக்கு சம்மதம் வாங்கிய ஒரே காரணம் அவருடைய அப்பா ரஜினி ரசிகர் என்பதுதானாம்.
“நடிப்பில் கற்றுக் கொண்டது என்ன..?” என்றால்…
“கிஷோர் நமித் கபூர் சாரே நேரடியாக எனக்கு நடிப்பை சொல்லித் தந்திருக்கிறார். நடிப்பின் எல்லா நிலைகளிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல், நடனம், பாடலுக்கான அசைவுகள், ஆக்சன் என்று ஒட்டுமொத்த சினிமா நடிப்புக்கான எல்லாவற்றையும் அங்கே கற்றுத் தந்து விடுகிறார்கள். அது எனக்கு நடிப்பின் மீதான பயத்தையும் பதட்டத்தையும் போக்கிவிட்டது.!” என்கிறார்.
தேர்வின் போது ஒரு சிச்சுவேஷனைக் கொடுத்து அதில் நடிக்க சொல்வார்கள். அப்படி திருப்திக்கு கிடைத்த சிச்சுவேஷன், அவருடைய அம்மாவை யாரோ கொலை செய்து விட மகளின் ரியாக்ஷன் என்ன என்பதுதான்..!
அதில் திருப்தி நடித்த நடிப்பைப் பார்த்து அத்தனை பேரும் கைதட்டி இருக்கிறார்கள். அத்துடன் “போதும்… நிறுத்துமா.!” என்று சொல்லியும் ஆற்ற மாட்டாத அழுகையை நிறுத்த முடியாமல் தேம்பி இருக்கிறார் திருப்தி.
“சரி சினிமாவுககுள் உங்களை இழுத்தது யார்..?” என்று கேட்டால்… “அல்லு அர்ஜுன்..!” பெயரைச் சொல்லி உதட்டைக் கடிக்கிறார்.
அல்லு அர்ஜுனின் ஆர்யா படத்தை பார்த்ததிலிருந்து எப்படியாவது இப்படியெல்லாம் நடித்து விட வேண்டும் என்கிற வேகம் இவருக்குக் கிளம்பி இருக்கிறது.
சொல்லி வைத்தாற்போல் இவர் படித்த அதே கிஷோர் நமீத் கபூர் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் மாணவரான அல்லு அர்ஜுன், நமீத் கபூரைப் பார்க்க அந்த இன்ஸ்டிடியூட்டுக்கு விஜயம் செய்திருக்கிறார்.
ஆதர்ச ஹீரோவை அருகில் இருந்து பார்த்ததும் புல்லரித்துப் போய் இருக்கிறது திருப்திக்கு. அவரிடம் கேட்டு ஒரு செல்பி எடுத்துக்கொண்டு அல்லு அர்ஜுனின் வாழ்த்துக்களை ‘ஆன் தி ஸ்பாட்’ ஆக அப்போதே பெற்றிருக்கிறார்.
ஆக… அல்லு அர்ஜுனுடன் நடிப்பதுதான் திருப்தியின் கனவாக இருக்கிறது.
தெலுங்கும், தமிழும் பக்கத்துப் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் என்ற நிலையில் தெலுங்கிலும் தமிழிலும் கால் பதிக்க ஆசைப்பட்டிருக்கும் திருப்தியை முன்னணி தமிழ் நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை அளவில் ஓகே செய்திருக்கிறது.
“அவர்களாக அதைச் சொல்லட்டும்… இப்போதைக்கு சஸ்பென்ஸ்..!” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டுக்கொண்டார் திருப்தி.
(‘பெண்கள் கெஞ்சினால் நமது மனது தாங்குமா… எனவே அவர் சொன்ன அந்தக் கம்பெனியின் பெயரை இப்போது உங்களுக்கு சொல்ல இயலவில்லை…. ஸாரி கைஸ்..!)
“யாரைப்போல் வரவேண்டும்..?” என்றால் “தமிழில் நயன்தாரா போலவும், தெலுங்கில் சமந்தா போலவும் கொடிகட்டிப் பறக்க வேண்டும்..!” என்கிறார்.
திருப்தியின் ‘ஆத்ம திருப்தி’ அதுவாக இருக்க வாழ்த்தி விட்டு வருவதுதானே சரி..?!
– வேணுஜி