சிறைச்சாலையில் இருந்து கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கைதியை வழியிலேயே மடக்கிக் கொல்ல முயற்சி நடக்கிறது.
அந்தக் கைதி நாயகன் உதயா. அவரை பத்திரமாக கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல, உதவி கமிஷனர் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் இரண்டு கான்ஸ்டபிள்கள் பொறுப்பேற்கிறார்கள்.
அதில் ஒருவர் அஜ்மல். பயிற்சிக் காவலராக அசிஸ்டன்ட் கமிஷனரின் பணியாளராக இருந்து வருபவர் ஏசியின் உத்தரவுப்படி அந்தப் பணியை ஏற்கிறார். போகப் போகத்தான் அதெல்லாம் திட்டமிட்ட சதி என்று தெரிகிறது.
அடுத்தடுத்து கொலையாளிகள் மட்டுமல்லாமல், காவல் துறையினரும் உதயாவைக் கொல்லக் குறி வைக்க, அதில் அஜ்மல் உயிருக்கும் ஆபத்து இருக்க, அவர்களால் கோர்ட்டுக்கு செல்ல முடிந்ததா என்பது மீதிக் கதை. அத்துடன், அந்தப் பயணத்துக்குள் உதயா யார், எப்படி அந்த சதி வலைக்குள் சிக்கினார் என்பதெல்லாம் பிளாஷ் பேக்குகளாக சொல்லப்படுகின்றன.
சீரியஸான பாத்திரத்தை ஏற்றிருந்தாலும் ஜாலியான ராபராகத்தான் அறிமுகமாகிறார் உதயா. ஜெயில் பறவையாக வருபவர் கணக்காக திட்டமிட்டு காரியத்தை முடிப்பதால் ‘ கணக்கு ‘ என்றே அழைக்கப்படுகிறார், நாயகி ஜான்விகா கலக்கேரியைக் கணக்கு பண்ணும் போது உற்சாகம் தூக்கலாக நடித்தும் இருக்கிறார்.
ஒரு கள்வன் என்று தெரிந்தே அவரைக் காதலிக்கும் அவசியம் என்ன என்றே தெரியவில்லை ஜான்விகாவுக்கு. கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் ஜான்ஸ், அந்தக் காதலுக்கு நேர்மையாக இருந்திருக்கலாம்.
இன்னொரு நாயகனாக வரும் அஜ்மல், தன் வழக்கப்படியே பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். வீடியோ காலில் வரும் தன் காதலியைக் கூட உடன் இருப்பவர்களிடம் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அப்பாவியாக இருப்பதாலேயே அவரை சிக்கலுக்குள் மாட்டி விட நினைக்கிறார்கள்.
ஆனால் சில இடங்களில் அப்பாவித்தனம் ஓவராகிப் போய் அசடாக இருக்கிறாரோ என்று தோன்றுகிறது.
அதை யோகி பாபுவின் வசனங்களில் இருந்தே புரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு யோகிபாபு உதயாவையும் அஜ்மலைலயும் ஓட்டு ஓட்டு என்று ஓட்டுகிறார். அந்த இடங்கள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன என்பது கூடுதல் ஆறுதல்.
வழக்கமாக மெயின் வில்லனாக வரும் பவனை இதில் நல்ல அரசியல்வாதியாக மாற்றி இருக்கிறார்கள். அதனாலேயே அவர் கொல்லப் படுகிறாரோ?
அந்த நல்ல வேலையை ஏற்கும் வில்லனாகவும், அவர் தம்பியாகவும் ஸ்ரீதர் வருகிறார். அவரும் அவரது அண்ணியாக வரும் சுபத்திராவும் நரித்தனத்தை நயமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ரொம்பவும் டீடைலாக ஸ்கிரிப்ட் ஒர்க் செய்திருப்பது போல் தோற்றமளித்தாலும்… அந்தக் காரணத்தாலேயே அங்கங்கே தொக்கி நிற்கிறது திரைக்கதை.
எழுதி இயக்கியிருக்கும் பிரபு ஸ்ரீநிவாஸ் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இதே லைனை இன்னும் கூட சிறப்பாக சொல்லி இருக்கலாம்.
ஒரு சில போலீஸ் தவறு செய்யலாம். ஆனால் ஒரு கட்சியைச் சேர்ந்த பதவி இல்லாத பிரமுகரைக் காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த போலீஸ் டீமுமா வேலை செய்யும்..?
நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்கள் பழுதில்லாமல் ஒலிக்கின்றன. ஆனால் பின்னணி இசையில்தான்… குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகள் வரும் போது ரொம்பவும் சோதிக்கிறார் மனிதர்.
மருதநாயகத்தின் ஒளிப்பதிவில் எந்தக் குறையும் இல்லை.
பஸ் கவிழும் காட்சியில் தன் அனுபவத்தைக் காட்டுகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ‘ ஸ்டன் சில்வா..!’
கடைசியில், ‘ ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் இந்த சமுதாயம்தான் காரணம்…’ என்கிற பொருளில் ஸ்லைடு போட்டு படத்தை முடிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
அக்யூஸ்டு – அக்னாலட்ஜுடு..!
– வேணுஜி