April 24, 2024
  • April 24, 2024
Breaking News
August 1, 2022

லெஜண்ட் ‘ சரவணனுக்கு ஒரு கடித விமர்சனம்…

By 0 356 Views

நீங்க டாம் குரூஸா இல்ல டாம் அண்ட் ஜெர்ரியா..?

சரவணன் அண்ணாச்சி… வணக்கம்… வாழ்த்துக்கள்..! நான் உங்க லெஜண்ட் படம் பார்த்தேன். அந்த ஆர்வம் தாள மாட்டாமதான் இந்தக் கடிதத்தை எழுதறேன்…

நீங்க ஜெயிச்சிட்டீங்க… உங்க கனவை… ஆசையை… பெரிய திரையில்… உங்க பாணியிலேயே சொல்லப்போனா பிரம்மாண்டமாய்… அதுவும் உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்ததில நீங்க ஜெயிச்சிட்டீங்க…

அதே மாதிரி எங்க எதிர்பார்ப்பையும் பூர்த்தி செஞ்சிட்டீங்க… அதாவது உங்களுடைய விளம்பர படங்கள்ள உங்கள ஹீரோவா பார்த்து, அடுத்து உங்க பட ட்ரெய்லரையும் பார்த்து ” இந்த படம் இப்படித்தான் வரும்னு எப்படி எதிர்பார்த்தமோ அதுல கச கசா அளவுக்கு கூட வித்தியாசம் இல்லாமதான் இருந்தது படம்..!

குறை சொல்றவங்க சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க. அதுவும் முகத்தைப் பார்த்து, உங்க உருவத்தை பார்த்து கேலி பேசுறவங்க இன்னைக்கு நேத்தா இருக்காங்க..? இப்படித்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க வந்தப்ப அவர ‘ குதிரை மூஞ்சி’ ன்னாங்க. ஆனா அவர் நடிப்பில் லெஜண்ட் ஆனார். அடுத்து விஜய் நடிக்க வந்தப்ப அவருக்கு ‘ அணில் மூஞ்சி’ன்னாங்க… அவர் இன்னைக்கு வசூல்ல லெஜண்டா நிற்கிறார். 

இதெல்லாம் பாத்து அஜண்டாவிலயே லெஜண்டா வந்து நின்னீங்க பாருங்க… அங்க நின்னுட்டீங்க..!

படத்துல நீங்க சவுக்க எடுத்து விளாசும் போது எங்களுக்கு எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் ஞாபகத்துக்கு வந்தார். இந்த ஊருக்கு நல்லது செய்யப் போறேன் அப்படின்னு சொன்னப்ப சிவாஜி படத்து ரஜினி ஞாபகத்துக்கு வந்தார். உங்க முகத்தை ‘ மேக்கப்பி’ ஒரு மேட் பினிஷ் எபக்ட்டோட நீங்க வந்து நின்னப்ப தசாவதாரம் படத்து கமலும், படம் முழுக்க நீங்க பெர்பார்ம் பண்ணியதைப் பார்த்து ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரிச்சப்ப மைக்கேல் மதன காமராஜன் கமலும் ஞாபகத்துக்கு வந்து போனாக.. இந்த அத்தனை லெஜண்டுகளையும் ஒரே படத்துல நினைக்க வச்சதுல சத்தியமா நீங்க ‘ நித்திய லெஜண்ட்’ தான்.

உங்க வயசை வச்சு கிண்டல் பண்றவங்களுக்கும் ஒண்ணு சொல்லி வையுங்க. உலக சூப்பர் ஸ்டார் டாம் குரூஸுக்கே 60 வயசு ஆகுதுன்னு.

அப்புறம் பர்பாமன்ஸ்ல சொல்லணும்னா உங்க நண்பர் ரோபோ சங்கர் இறந்தப்பவும், உங்களுடைய காதல் மனைவி கார்ல குண்டு வெடிச்சு செத்துப்போனப்பவும் அழுகைன்னு ஒரு பர்பாமன்ஸ் கொடுத்தீங்க பாருங்க… தியேட்டரே கொல்லுனு சிரிச்சது. நடிகர் திலகம் கூட அழுது நடிச்சிருக்கார், சிரிச்சு நடிச்சிருக்கார், சிரிச்சுக்கிட்டே அழுதும், அழுதுகிட்டே சிரிச்சும் நடிச்சிருக்கார். ஆனா நீங்க அழுகும் போதும் சிரிக்கிற மாதிரியே அழுதீங்க பாருங்க… அந்த எஃபெக்டை இதுவரைக்கும் யாரும் கொடுத்ததில்லை. இனி கொடுக்கவும் போறதில்லை. 

சிவாஜி உயிரோடு இருந்திருந்தார்னா இந்த விஷயத்தை கம்பேர் பண்ணி கிரிட்டிக்ஸ் எழுதி இருப்பாங்க. நல்லவேளை சிவாஜி செத்துட்டார்.

படத்துல விவேக் இருந்தாரு… யோகி பாபு இருந்தாரு… ரோபோ சங்கர் இறந்தாரு… ஆனா அதுக்கெல்லாம் சிரிக்காத ஆடியன்ஸ் நீங்க அழும்போது வெடிச்சு சிரிச்சாங்க பாருங்க… அதுல விவேக், யோகி பாபு எல்லாம் காணாம போயிட்டாங்க… இதெல்லாம் பாக்குறதுக்கு விவேக் இல்லை அப்படிங்கிறது சந்தோஷத்திலும் ஒரு துக்கம். துக்கத்திலும் சின்ன சந்தோஷம். இட் வாஸ் அ மேஜிகல் மொமெண்ட்.

அப்புறம் அந்த வாத்து மடையன்களான ஸ்டூடண்ட்ஸ் உங்களுடைய லவ்வர் வாத்து மேய்க்கிற வாத்தியோட முந்தானையை இழுக்கும்போது கார்ல சவுக்கோட வந்து இறங்கி பளீர் பளீர்ன்னு அவங்களை பின்னுனிங்க பாருங்க. அப்ப உங்க சவுக்கில அடி வாங்கினவங்க எல்லாம் ஸ்டூடண்ட்ஸா எனக்கு தெரியல. ‘ அடடா நம்ம சரவணன் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டாரு. நாமளும் நடிக்கலாம்’ன்னு நினைச்சுக்கிட்டு இருந்த சோ கால்டு பிசினஸ் மேன்கள் எல்லாத்துக்கும் நீங்க கொடுத்த சவுக்கடி அது. இந்த லெஜன்ட் பாத்துட்டு ஆடியன்ஸோட ரியாக்ஷனையும் பார்த்துட்டு இனி ஒரு பய நடிப்பான்..?

ஒருமுறை கமல் இது மாதிரி மூஞ்சிய மறைச்சுகிட்டு மேக்கப் போட்டு நடிச்சதைப் பார்த்த சிவாஜி கணேசன் கூட ” இப்படி முகத்தை முழுக்க மறச்சுகிட்டு வர்றதில்ல நடிப்பு எங்க இருக்கு..?”ன்னு கேட்டார். ஆனா இருக்குன்னு நீங்க நிரூபிச்சிட்டீங்க இல்ல..?

உங்களுக்கு மேக்கப் போட்டதில… இல்லல்ல ‘ மேக் ஓவர்’ பண்ணியதுல உச்சந்தலை முதல் உள்ளஙகால் வரைக்கும் டிபார்ட்மென்ட் டிபார்ட்மெண்ட்டா வேலை பார்த்ததுல உங்க டோட்டல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்க்கும் வேலை இருந்ததை நினைச்சா பெருமையா இருக்கு.

களிமண்ணையும் நடிக்க வைப்பேன்னு சொன்ன பாரதிராஜா கூட மூக்கு மேல விரல் வைக்கிற அளவில தைரியமா செஞ்சு காட்டி இருக்காங்க பாருங்க ஜேடி ஜெர்ரி… அவங்களுக்கு கண்டிப்பா ஒரு ஆஸ்கர் தரலாம்.

அப்புறம் சொல்ல மறந்துட போறேன். அத்தனை பெரிய விக்கை தலையில வெச்சும் தலைக்கனம் ஏறாம நீங்க நடிச்சது ஒருபுறம் இருக்கட்டும்… அந்த விக்கே சின்னதுதான் அப்படிங்கற அளவுக்கு நாசருக்கு ஒரு சேவல் கொண்டை விக்கும், சுமனுக்கு ஒரு கம்பளிப் புழு தாடியும் செஞ்சி இருந்தார் பாருங்க. அந்த ஹேர் ஸ்டைலிஸ்டுக்கு கண்டிப்பா ஒரு ஸ்பெஷல் ஜுரி அவார்ட் கொடுத்தே ஆகணும். 

அதோட நீங்க படத்துல வந்து நிற்கிறப்ப எல்லாம் “நீங்க நூறு வயசு வாழணும்…”, “உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும்…”, “இந்த நாடு உங்களை நம்பிதான் இருக்கு…” அப்படிங்கிற மாதிரி வசனம் எழுதின பட்டுக்கோட்டை பிரபாகரை மறந்துடாதீங்க.

உங்க வீட்டு சோத்தை சாப்பிட்டுதான் கொழுத்ததா… இல்லாட்டி வாழ்ந்ததா தம்பி ராமையாவே ஸ்டேட்மெண்ட் கொடுத்தாலும் அவர் வீடு எரிஞ்சு போய் நின்னப்ப அவரைக் கூட விடாம பிடிச்சு நிறுத்தி, “ஆறு பெருக்கெடுத்து ஓடினாலும் வெறும் மணலா வறண்டு இருந்தாலும் காவேரி காவேரிதானப்பா..?”ன்னு ஒரு வசனத்தை போட்டு, தம்பி ராமையாவையே மிரள வச்ச பட்டுக்கோட்டையாருக்கு நீங்க ஒரு பிஎம்டபிள்யூ காராவது வாங்கி கொடுத்தே ஆகணும். 

நீங்க நிக்கிறதை, நடக்கிறதை, குனியறதை, நிமிர்ரதை, திரும்பறதை, கைய தூக்குறதை, கால தூக்குறதை எல்லாம் எடிட் பண்ணி ஒரு நடனமாவும், சண்டையாவும் மாற்றி காண்பிச்ச எடிட்டருக்கு கண்டிப்பா ஒரு பிளாட் வாங்கித் தரலாம்.

அப்புறம் அந்த அனிமேஷன் பண்ணிய டீம்… மேக்கப் மேன் தொட்ட குறை… விட்ட குறையை எல்லாம் சுத்தமா தொடச்சு எடுத்து சிஜில ஒரு டாம் அண்ட் ஜெர்ரி அளவுக்கு உங்களை அனிமேஷன்ல மாற்றிக் காட்டிய அவங்களுக்காகவாவது இந்தப் படத்தை நீங்கள் அனிமேஷன் பிரிவில ஆஸ்கருக்கு அனுப்பியே ஆகணும். கண்டிப்பா பைனல்ல வால்ட் டிஸ்னிக்கும் உங்க படத்துக்கும் பெரிய போட்டியே நடக்கும். அப்படி இல்லைன்னாலும் அந்த அனிமேஷன் டீமுக்கு வால்ட் டிஸ்னி ப்ரொடக்ஷன்ஸ்ல கண்டிப்பா வேலை கிடைக்கும்.

சுகர்னு ஒரு சித்தர் இருந்தார். அவர் கூட யோசிக்காத அளவுல சுகருக்கு மருந்து கண்டுபிடிக்க நீங்க கிளம்பினதுல, சுகரோட வாழற ஜனங்களோட மனசுல சுகுரா இடம் பிடிச்சுட்டீங்கன்றது புரிஞ்சுடுச்சு.

இதுல போட்ட 30 கோடியை பிசினஸ்லயே போட்டு இருக்கலாம்ன்னு உங்க போட்டியாளர்கள் கேலி பேசுவாங்க. அது பற்றி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம். அது வயிற்றெரிச்சல் பொறாமை… என்ன, மூணு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குற அளவுக்கான பணம்தானே அது..? ஆனா அதுல உங்களுக்கு கிடைச்ச பப்ளிசிட்டி, புர்ஜ் கலிபா டவர் அளவுக்கு உயர்ந்து நிக்குதே… அதை அண்ணாந்து பார்க்க சொல்லுங்க.

இதுக்கெல்லாம் மிரண்டு போய் சினிமாவை விட்டுறாதீங்க. இனி நீங்க விட்டாலும் சினிமா உங்களை விடாது. மாடியில் இருந்து உங்க வாசல் பக்கம் எட்டி பாருங்க… இந்நேரம் உங்க வீட்டு வாசல்ல 100 டைரக்டர்ஸ் கதையோட காத்துகிட்டு இருப்பாங்க.

அதுல 101வது ஆளா என்னை நினைச்சுக்கோங்க. என்கிட்ட உங்களுக்கு அருமையான ஒரு கதை இருக்கு. தலைப்பே அசத்திடும் ‘ எல்ஜிஎப்’… எப்படி..? கேஜிஎப் மாதிரியே இருக்கேன்னு நினைச்சா அது கரெக்ட்தான். கேஜிஎப் படத்தோட நாலாவது பாகம் தான் இந்த எல்ஜிஎப்.

ஏன்னா மூணாவது பாகத்தை ஏற்கனவே யாஷ் எடுக்க ஆரம்பிச்சிருப்பாரு. ஆனால் அவர் அதை வெளியிடுறதுக்கு முன்னாடியே நாம நாலாவது பாகத்தை வெளியிட்டு இன்னொரு சாதனை படைக்கலாம்.

இதுல உங்களுக்கு 15 கெட்டப் இருக்கு. இந்த விஷயத்தை வெளியில சொல்லிட வேண்டாம். தசாவதாரம் கமல் தடுமாறிப் போயிடுவார். 15 விதமா விக் செய்யறோம். 15 விதமா கோட் சூட் தைக்கிறோம். 15 சைஸ்ல ஹை ஹீல்ஸ் ஷூ வாங்குறோம். முகத்துக்கு நெரோலாக் பெயிண்ட்ல அத்தனை ஷேடையும் கொண்டு வரச் சொல்லி 15 ஷேடு புதுசா உருவாக்குகிறோம்.

லைன் இதுதான். கவர்மெண்ட் சூறையாடிய கேஜிஎப் தங்க சுரங்கத்தை தனி ஒரு ஆளா 15 கெட்டப்பில் போயி நீங்க மீட்கறீங்க. அதோட பேரை ‘ லெஜன்ட் கோல்ட் பீல்டு ‘ ன்னு மாத்தறீங்க… இதைத் தடுக்க அமெரிக்க எப்பிஐ, ரஷ்ய கேஜிஎஃபை எல்லாம் உள்ளே கொண்டு வந்து இதை ஒரு பேன் உலக படமா மாத்தறோம்.

ஆனா வில்லன் மட்டும் நம்ம உள்ளூர்தான். யார் தெரியுமா..? கேட்டீங்கன்னா துள்ளி குதிப்பீங்க. லலிதா ஜுவல்லர்ஸ் ஓனர் திருவாளர் மொட்டை தான் அந்த வில்லன். தலையில விரல்களால் ‘ட்ரகட்டக்க, ட்ரக்கட்டக்க ‘ ன்னு தாளம் போட்டுக்கிட்டு வர்றவர், உங்களைப் பார்த்து “டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு தங்க சுரங்கத்தில் என்ன வேலை..?”ன்னு கேட்கிறார்.  

அதுக்கு நீங்க, “நீ எல்லாம் தங்க சுரங்கத்தில் தங்க வந்தவன்தான். ஆனா நானே ஹால்மார்க் 916 சொக்கத்தங்கம்தான்டா..!”னனு பஞ்ச் அடிக்கிறீங்க. தியேட்டர் எப்படி ரண களமாகும்னு இப்பவே கற்பனை பண்ணிப் பாருங்க.

இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் வேணாம். அனிருத்தை பிக்ஸ் பண்றோம். யூத் ஆடியன்சை எல்லாம் ‘ யு டர்ன்’ போட வச்சு தூக்கறோம்.

அதெல்லாம் வேண்டாம். எனக்கு ஜேடி ஜெர்ரி டீம் போதும்ன்னு நீங்க முடிவு எடுத்தா நீங்க கடைசி வரை டாம் குரூசா ஆக முடியாது. டாம் அண்ட் ஜெர்ரியாவே இருங்க..!

எனிவே, உங்களுக்கு இனி ‘ ஒன் வே’ தான். அது சினிமாதான்..! யோசிச்சு முடிவு எடுங்க..!

பி.கு. ‘ லெஜண்ட் ‘ங்கற பேரை யாராவது நல்ல நியூமராலஜிஸ்ட்கிட்ட கொடுத்து மாத்த முடியுமான்னு பாருங்க. ஏன்னா அதிலேயே (LEG ‘END’) காலை வாரும் ‘எண்டு கார்டு ‘ இருக்கு.

உங்கள் மற்றும் சினிமாவின் எதிர்காலம் கருதி சுதாரிப்புடன் பரிதவித்து சிந்திக்கும்…

– வேணுஜி.