November 20, 2026
  • November 20, 2026
Breaking News
October 4, 2026

ஏழுகடல் ஏழுமலை திரைப்பட விமர்சனம்

By 0 111 Views

இயக்குனர் ராமின் படைப்புலகம் அலாதியானது. பேரன்புக்குள் நம்மை ஆட்படுத்துவது. இதே விஷயங்கள்தான் பிரதானமாக இருக்கின்றன வெளியாகி இருக்கும் அவரது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திலும்.

ஒரு நவீன ஓவியம் எப்படி பார்ப்பவரின் மனதுக்குள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல விளைவுகளை ஏற்படுத்துகிறதோ அப்படியே ராமின் படங்களும் பார்வையாளர்களின் மனதுக்குள் அவரவர் ரசனைக்குத் தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

படைக்கப்பட்ட ஓவியத்தின் பொருள் குறித்து படைத்த ஓவியனின் கருத்து என்னவாக இருக்கிறதோ அதிலிருந்து பார்வையாளன் புரிந்து கொள்ளும் கருத்து மாறுபட்டு இருக்கலாம். ஆனால் விளைவுகளை ஏற்படுத்துவதுதான் ஓவியத்தின் உயரிய நோக்கம்.

அப்படி நான் புரிந்து கொண்ட ஏழு கடல் ஏழுமலை இப்படி இருக்கிறது..!

தலைப்பே சொல்லி விடுகிறது இது கதை சொல்லி வாயிலாகக் கடத்தப்படும் கதை  என்பதை. ‘ஒரு மந்திரவாதியின் உயிர் ஏழு கடல் ஏழுமலை தாண்டி வாழும் ஒரு கூண்டுக்கிளிக்குள் இருக்க அதைக் கொன்றால்தான் மந்திரவாதி இறப்பான்..!’ என்பதான கதைகளை நாம் கர்ண பரம்பரையாகக் கேட்டிருக்கிறோம்.

அப்படியான ஒரு கதைப்போக்கை, அதிலிருந்து எதிர்ப்பட்டு இப்போது நம் அருகிலே இருக்கும் எல்லா உயிர்களையும் ஒன்று போல நினைக்க வைப்பதுதான் ராமின் இந்த முயற்சி – இதன் உள்ளே உயிர்களின் உன்னதத் தேவையான காதலின் தேடலும் இருக்கிறது. 

இந்த உலகின் உயிர்கள் யாவும் மனிதனின் தேவைக்காகப் படைக்கப்பட்டவை என்ற கருத்தை மாற்றி பிற உயிர்களை… முக்கியமாக அவற்றின் உணர்வுகளைக் காப்பதே மனிதனின் கடமை என்பதை அழுத்தமாகச் சொல்வதுடன், காதல் இரந்து பெறுவதல்ல… சுரந்து பெறுவது… அதற்காக எத்தனை யுகங்களும் காத்திருக்கலாம் என்பதையும் இதில் முன்னெடுத்திருக்கிறார் ராம்.

பெரும்பாலும் காலம் காலமாகக் கடந்து வந்த மனிதனின் தேடல் நிலைகளை… அவன் ஆற்றாமைகளை… அவனுடைய அறச் சீற்றத்தை… அவன் ஆற்ற நினைப்பதை ஒரு பாத்திரத்துக்குள் வடிவமைத்து விடுவது ராமின் வழக்கம். அப்படித்தான் அமைந்திருக்கின்றன இந்தப் படத்தின் பாத்திரங்களும். 

மேற்படி உணர்வுகளின் வீரியத்தைப் பிரித்து எடுத்தால் அது நாயகன் நிவின் பாலி. அதன் வடிகட்டிய எஞ்சிய பகுதிகள் இரண்டாவது நாயகன் சூரி. 

நிவின் பாலியின் பாத்திரம் கைவிட்டுப் போன காலங்களின் எச்சம் என்றால்… சூரியின் பாத்திரம் நிகழ்கால இயலாமை நிலையின் மிச்சம்..!

இவை தவிர ஆதிக்க உலகம் கசக்கிப் பிழிந்து தூக்கி எறிந்த கருணையின் சொச்சமாக ஒரு சிறுவனும், காலங்கள் தோறும் மிதிபட்டுச் சாகும் நிலையற்ற அச்ச உயிரின் அடையாளமாக ஒரு எலியும், அதன் குட்டிகளும்…

ஒரு மழைக்கால ரயில் பயணத்தின் ஊடே ஒரு யுகப் பயணத்தை… ஒரு வாழ்க்கைப் பயணத்தை… ஒரு நிலையற்ற பயணத்தை… ஒரு நிச்சயமற்ற பயணத்தைப் பரிமாறி பந்தி வைப்பதுதான் இந்தக் கதை.

8000 ஆண்டுகள் வயதுடைய(தாக சொல்லிக் கொள்ளும்) நிவின்பாலியும், 40 நிறையாத நவயுக இளைஞன் சூரியும் சந்தித்துக் கொண்டால் புரிந்துகொள்ளல் எப்படி நிகழும்..?

அப்படித்தான் போகிறது முதல் பாதிப் படம் முழுவதும். நிவின் பாலி சொல்லும் அனைத்து உயிர்களின் சமத்துவம் எப்படி சூரிக்குப் புரியவில்லையோ, அப்படியே எட்டு வயதாகியும் தன் மகனின் முகத்தை இதுவரை பார்த்தறியாத சூரியின் பதைபதைப்பு பற்றியும் புரிந்துகொள்ள பாலிக்கு அவசியமின்றிப் போகிறது. 

கதைப்படி நினைத்திருந்தால் சூரியை தண்டிக்க நினைக்கும் நிவின் பாலி ஒரு நிமிடத்தில் அவரைக் கொன்று போட்டு இருக்க முடியும். ஆனால் கொல்வது அவர் நோக்கமல்ல – புரிந்து கொள்ள வைப்பது என்பது நமக்குப் புரியும்போது பாதிப் படம் தாண்டி விடுகிறது. 

மீதிப் படத்தில் தன் காதலை… அதன் ஆதாரப் புள்ளியான காதலியை யுகங்கள் தோறும் நிவின் பாலி தேடிச் செல்வதைச் சொல்கிறது. 

காலம் காலமாக ஒரே காதலியைத் தொடர்ந்து தேடிச் செல்லும் நிவின் பாலிக்கு அவள் ஏன் அகப்படாமலே போய்க் கொண்டிருக்கிறாள்..? –  மிக முக்கியமான கேள்வி இது. 

நிவின் பாலியே சொல்வது போல், “அவள் வாழ்க்கையில் எனக்கான இடம் இல்லாதிருக்கலாம்..!” என்பதைத் தாண்டி இன்னொன்றும் புலனாகிறது.

பெண் என்பவள் எப்போதும் ஒரு ஆணைத் தேடி அலைவதே இல்லை. அவள் தன் தேடலை, தன் ஆசையை, தனக்கான வாழ்க்கையில் மட்டுமே தேடிக் கொள்ள விரும்புகிறாள். ஆணின் தேவை எப்போதும் அவளுக்கு இல்லை.

ஆனால் ஆணின் நிலை அப்படியல்ல. ஒரு பெண் இல்லாமல் அவனுடைய வாழ்க்கை முற்றுப்பெறுவதில்லை. அதற்காகவே காலங்கள் தோறும் அவளை ஆட்படுத்தி… அடிமைப்படுத்தி…கொடுமைப்படுத்தி… கருணைப்படுத்தி… பெருமைப்படுத்தி… காதலைத் தந்து, கற்பைத் தந்து தாயாக்கி, தெய்வமாக்கி அழுது, தொழுது அவள் அன்பைப் பெற முயற்சித்துக் கொண்டே இருக்கிறான்.

இதில் எங்கோ ஓரிடத்தில் அவன் வெற்றியும் பெற்று விடுகிறான். இந்த ஆணின் தவிப்பு எப்போதும் ஒரு பெண்ணை சந்தேகக் கண்கொண்டே பார்க்கும் நிலைக்குத் தள்ளுகிறது. எனவே அவள் எப்போதும் அவனை சந்தேகித்துக் கொண்டே, சோதித்துக் கொண்டே இருக்கிறாள்.

ஆனால், இங்கே நெருக்கடி எதுவும் கொடுக்காமல் ஒரு பெண்ணின் மனதைப் புரிந்த ஒரு புனிதமான ஆணின் தேடல் பயணமாகதான்தான் நிவின் பாலியின் பாத்திரமும், இன்னமும் அதைப் புரிந்து கொண்டு அகப்படாத காதலியின் பாத்திரமும் நமக்குப் புலனாகிறது.

இயக்குனர் ராம் படங்களின் ஆதாரப்புள்ளி எப்போதுமே அஞ்சலியாக இருந்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவரேதான். பாலி விரட்டிச் செல்லும் அழகி அஞ்சலி காலங்கள் தோறும் கிளியோபாட்ராவாக, மேரி மகதலீனாவாக… குறிஞ்சிப்பூவாக, நெய்தல் நிலவாக என்று பல முகங்களில் தோன்றுகிறார். 

அந்தந்தக் காலங்கள் திரையில் தோன்றும் போது நாம் இப்போதுள்ள உலகை மறக்கிறோம். கனவுலகில் நம்மை இட்டுச் செல்லும் முயற்சியாக அந்தந்தக் காலத் தேடலுக்கு ஒளிப்பதிவாளர் ஏகாம்பரமும், இசையமைப்பாளர் யுவனும் ராமின் விழிகளாகி, செவிகளாகி நம் விழிகளுக்குள்ளும் செவிகளுக்குள்ளும் அந்த தேடலைக் கடத்துகிறார்கள்.

அதிலும் யுவனின் பங்களிப்பு, காலங்கள் தாண்டியும் நம் நினைவுகளில் நிலை கொள்ளும்.

படத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு பாத்திரம் அஞ்சலியின் பருத்த மார்பகத்தை பார்த்து ஏங்கும் ஒரு பித்தனுடையது. அதை கவனித்த அஞ்சலி அவனிடம் “என்ன..?” என்று கேட்கிறார். அவன் “ஒன்றும் இல்லை..!” என்றபடி தலையைக் குனிந்து குறுகுகிறான். வெகுஜனப் பார்வைக்கு அந்த முலையின் மேல் அவன் மோகம் கொண்டதாகப் புரியலாம்.

ஆனால் குத்திட்டு நிற்கும் அந்த முலையைக் கொஞ்சம் கூட தளர்த்தாமல் அவனை அழைத்து மண்டியிடச் செய்து அவன் தலையை அதன் மேல் சாய்த்துக்கொள்ளும் அஞ்சலியின் செயலில் மருகி அவன் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகும் போதுதான் புரிகிறது தாய்மைக்கு ஏங்கிய பிள்ளையான அவனது ஆற்றாமையை… அந்த ஆறுதலைப் புரிந்து அவனுக்குத் தந்த அஞ்சலியை..!

படத்தின் இறுதியில் தன் காதலியைத் தேடி மீண்டும் நிவின் பாலி புறப்படும்போது அந்தப் பிள்ளை மனசுக்காரனும் அவருடனான பயணத்தில் விரும்பி இணைவது காவியம்.

ரயிலுக்குள் சூரிக்கு நிவின் பாலி விடை கொடுக்கும் போது “இப்படி மீண்டும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் நீ அந்த அபாய சங்கிலியை இழுத்தால் போதும்…” என்று சொல்வது பகடியாகத் தோன்றலாம். ஆனால் அதன் தத்துவம் பதற்றத்தில் தேடும்போது அருகில் இருக்கும் சாவி அகப்படாது என்பதுதான்.

இப்படி மனித இனத்தின் யுகப் பயணத்தில் காலங்கள் தோறும் வெளிப்பட்ட சர்வாதிகாரம், ஆண் ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், அதிகார வர்க்க சுரண்டல், சூழ்ச்சி, காமம், வஞ்சகம், பரிதாபம், அச்சம், வாழ்தலின் தேவை, சீற்றம், இயலாமை,  உள்ளிட்டவற்றுடன் நம்முடன் உயிர் வாழப் போராடும் அனைத்து உயிர்களின் பதற்றத்தையும் கூட ஒரு வாழ்க்கைப் பேரேடாக பதிவு செய்திருக்கிறார் ராம். 

இப்படித்தான் படங்கள் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் படங்கள் எப்போதும் வந்து கொண்டிருக்க, எதிர்பாராமல் இப்படிப்பட்டச் செறிவுடன் வரும் கலைப்படங்களையும் நாம் கருவூலத்தில் மட்டுமல்லாமல் கருத்திலும் ஏற்கத்தானே வேண்டும்..?

அந்த வகையில்…

ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒவ்வொரு தத்துவம் தென்படும் வல்லமை கொண்ட ராமின் இந்த ‘ஏழு கடல் ஏழுமலை…’

புரியாதவர்களுக்கு புதிர் – புரிந்தவர்களுக்கு விடை..!

– வேணுஜி