தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100 நாள்களாக நடந்த போராட்டத்தின் உச்சமாக கடந்த மாதம் 22-ந்தேதி கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை வெடித்ததாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
தொடர்ந்து அரசு உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக சில அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பைச் சேர்ந்த கடையநல்லூர் கலில்ரகுமான் அவரது மகன்கள் முகமது அனாஸ், முகமது இர்ஷாத் மற்றும் உசிலம்பட்டியைச் சேர்ந்த கோட்டயன், கோவில்பட்டி சரவணன், நெல்லை ஆலங்குளம் வேல்முருகன் ஆகிய 6 பேரை நெல்லை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதானவர்களில் முகமது அனாஸ் கன்னியாகுமரியில் ஓமியோபதி மருத்துவ படிப்பும், அவரது சகோதரர் முகமது இர்ஷாத் நெல்லை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பும் படித்து வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் கலில் ரகுமானின் மனைவி நசீபா பானு, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.
அத்துடன் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் நிர்வாகி காளியப்பன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் போராட்ட சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.