May 14, 2026
  • May 14, 2026
Breaking News
May 9, 2026

’29’ திரைப்பட விமர்சனம்

By 0 24 Views

டீன் ஏஜ் முடிவடையும் 19 வயதிலிருந்து இருபதாவது வயதிற்கு மாறுவது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமான கட்டமாகும். அதற்குப்பின் 29 வயது முடிந்து 30 ஆகும்போது அவன் முழுமை பெற்று இருக்க வேண்டும்.

அந்த வகையில் 29 வயது என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இருக்கிறது.

அந்த வயதில் இருக்கும் நாயகன் விது, தான் யார் என்ற அடையாளத்தை அடையாமலேயே இருப்பதாக உணர்கிறார். அதைத் தேடி சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்தும், ரசனை இல்லாத வறட்சியாகவே வாழ்க்கை சென்று கொண்டிருக்க, நாயகி ப்ரீத்தி அஸ்ரானியின் நட்பு கிடைக்கப்பெறுகிறார். 

அந்த நட்பு காதலாக மாற, வாழ்வில் இன்பத்தை முதன்முறையாக சுகிக்கும் அவர், தனக்கான அடையாளம் என்ன என்பதில் ப்ரீத்தி தெளிவுடன் இருப்பதை கவனிக்கிறார்.

அப்படி இல்லாமல் இருக்கும் விதுவின் போக்கை ப்ரீத்தி சுட்டிக்காட்ட, அதுவே அவர்களுக்குள் ஒரு பிரிவினையை உண்டாக்குகிறது.

ஒரே ஆறுதலான காதலியும் தன்னை விட்டு விலகிய நிலையில் தனக்கான அடையாளத்தை அவர் அடைந்தாரா என்பதுதான் மீதிக் கதை.

’ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நமக்கு அடையாளம் தெரிந்த விது, இதில் நாயகனாக இன்னொரு முகம் காட்டி இருக்கிறார். அதற்கு மிக்கப் பொருத்தமானவராகவும் இருக்கிறார்.

சினிமா உலகில் எளிமையான ஹீரோக்கள் எப்போதுமே வலிமையான இடத்தைப் பெறுவார்கள். அந்த வகையில் நாம் பழகிய ஒரு நபர் போலவே இருக்கும் விது, நடிப்பிலும் கெட்டிக்காரராக இருப்பதால் விரைவில் உயரத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

தன்னைவிட குள்ளமாக இருக்கும் ப்ரீத்தி அஸ்ரானியிடம் தன் காதலை சொல்லும் போது, “காலம் முழுக்க என்னை நீ அண்ணாந்து பார்க்கத் தயாரா..?” என்று கவித்துவமாக கேட்பதில் அவர் மட்டுமல்லாமல் இயக்குனரும் பளிச்சென்று அடையாளம் தெரிகிறார்கள்.

ஏற்கனவே சசிகுமாரின் படத்தில் அறிமுகமாகி நடிப்பில் கவர்ந்த நாயகி பிரீத்தி அஸ்ரானி, இந்தப் படத்தில் விதுவின் காதலியாகி நம் இதயத்தைக் கவர்கிறார்.

வழக்கமாக படங்களில் காதலன்தான் தன் காதலை மெய்ப்பிக்கப் போராடுவான். ஆனால் இதில் அந்த வேலையை பிரீத்தி எடுத்துக்கொண்டு, பாலியல் உறவு கூட இயல்பான ஒரு விஷயம்தானே தவிர கொண்டாடப்பட வேண்டிய பெரு நிகழ்வு இல்லை இல்லை என்பதை ‘செயல்முறை’யாகவே விதுவுக்கு புரிய வைப்பதில் அனைத்து இளைஞர்களையும் கவர்ந்து விடுகிறார்.

ஆனால் அவரது கேரக்டரைசேஷன் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதை இயக்குனர் கவனித்து திருத்தி இருக்கலாம்.

விதுவின் நண்பராக வரும் அவினாஸ், வழக்கமான காமெடி நண்பனாக இல்லாமல் கொஞ்சம் அறிவுபூர்வமாகவும் சிரிக்க வைக்கிறார்.

வில்லன் போல உருவெடுக்கும் மாஸ்டர் மகேந்திரன் பாத்திரத்தின் முடிவும் காற்று போன பலூன் ஆகி விடுகிறது.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டிய லஷ்மி, மகனுடன் பேசாமல் இருப்பதற்கு வலுவான காரணம் இல்லை.

சிங்கிள் பேரண்டாக இருக்கும் நாயகியின் அம்மா சிந்து ஷியாம், பாத்திர அளவில் பிரீத்தியை எந்த கண்காணிப்பும் கண்டிப்பும் இன்றி வளர்ப்பது பொருந்தவில்லை.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்தின் உயிராகி இருப்பதுடன் இந்தக் கதையை நம்பகமாக இருப்பதாக உணர வைக்கிறது.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் வழக்கமான பாணியில் இல்லாமல் சற்றே புருவத்தை உயர்த்த வைக்கும் அளவில் புதுமையாக ஒலிக்கின்றன.

மேற்படி ஒளிப்பதிவு, இசை ஆகியவற்றுடன் ஆர்.எஸ்.சதீஷ் குமாரின் படத்தொகுப்பும் பக்காவாக அமைந்திருப்பதில் இயக்குனர் ரத்ன குமாரின் ஆளுமை நமக்குப் புரிகிறது.

ஒரு நாவலை படித்து முடித்த உணர்வை நமக்குள் ஏற்படுத்தினாலும், கதை நெடுக நாயகன் விது, நமக்கு அந்த கதையை அவர் வாய்மொழியாகவே சொல்லிக் கொண்டிருப்பது ரொம்பவும் அலுப்பை ஏற்படுத்துகிறது.

உரையாடல்களில் மிகுந்த தேர்ச்சி இருந்தாலும், தன் அறிவை எல்லாம் கொட்டி விட வேண்டும் என்று நினைத்து எழுதியிருப்பது இயல்புத் தன்மையை பாதிக்கிறது.

ஆனாலும் நமக்கு ஒரு வித்தியாசமான காதல் அனுபவத்தை படம் தரத் தவறவில்லை.

29 – தேடலின் முகவரி..!

– வேணுஜி