மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் வந்துவிட்டாலே உயிர்ப்பலி கேட்பது வழக்கமாகி விட்ட நிலையில் நீட்டின் தேர்வு முடிவுகளும் உயிர்களை பலி வாங்க ஆரம்பித்துவிட்டன.
2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதில் தோல்வியடைந்த தமிழ்நாடு விழுப்புரத்தைச் சேர்ந்த எச்.ப்ரதீபா மனம் விரக்தியடைந்து எலிக்கு வைக்கும் விஷத்தை அருந்தி உயிர்விட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் 12ம்வகுப்பில் 1200 க்கு 1125 எடுத்துத் தேர்வானவர் என்பது குறிப்பிடத் தக்கது
இரண்டாவது பலியாக டெல்லியைச் சேர்ந்த பர்னவ் மெஹன்டிரடா என்ற 19 வயது மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பர்னவ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வருவதாகவும், ஆனால் தொடர்ந்து தோல்வியுற்றதால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிகிறது.
பிரனவ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தூக்கு போட்டுக்கொள்ள முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
உயிர்களைக் காக்கும் புனிதத்துறையான மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் இந்த நீட் தேர்வு தரும் அழுத்தத்தால் தொடர்ந்து உயிரை விட்டுவருவது மிகுந்த வேதனையளிக்கும் நிகழ்வாக உள்ளது.