சிறகடிக்க ஆசை டிவி தொடர் புகழ் ஸ்ரீ தேவா நாயகனாகி இருக்கும் படம். ஊரைச் சுற்றியும் கடனை வாங்கி அவர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார் என்பதற்கே முதல் பாதிப்பட காட்சிகள் போய்விடுகின்றன.
சரவணன் என்ற பாத்திர பெயர் கொண்ட அவரை அவ்வூர் மக்கள் அல்வா சரவணன் என்று அழைக்கிறார்கள். கூடவே அவரது மாமன் குட்டிப்புலி சரவண சக்தியம் இணைந்து பண்ணாத லொள்ளு வேலைகளைப் பண்ணுகிறார்கள்.
அதில் ஹைலைட், கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸ் பந்தோபஸ்து கேட்டு பெறுவது.
இன்னொரு பக்கம் பல தொழில்களில் பணம் கொட்டும் பெரிய மனிதர் வேலராமமூர்த்தி மகள் நாயகி நிவேதாவுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்காக காக்கி சட்டை கமல் போல போலீஸ் உடை அணிந்து கொண்டு ‘போலி போலீசாக’ சுற்றிக் கொண்டிருக்கிறார்.
மூன்றாவது கதையாக காவல் அதிகாரி சரவண சுப்பையா நேர்மையான பத்திரிகையாளர் ஒருவரின் கொலையை துப்புத் தொலைக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.
ஸ்ரீ தேவாவை நிவேதா ஒரு புள்ளியில் சந்திக்க, அவரையும் ஏமாற்றும் ஸ்ரீ தேவாவின் உண்மை முகம் தெரிந்து, தான் போலீஸ் ஆனதும் என்கவுண்டரில் உன்னைத்தான் போடுவேன் என்று சபதம் மேற்கொள்கிறார் நிவேதா.
அத்துடன் இடைவேளை வந்து விடுவதால் இனி அதுதான் கதையாக நகரும் என்று பார்த்தால் அந்த சவாலுக்கெல்லாம் சம்பந்தமே இல்லாமல் வேறொரு ரூட்டில் கதை போய் வழக்கமாக வந்து முடிகிறது.
ஏற்கனவே பல நூறு எபிசோடுகளுக்கு சீரியல்களில் நடித்து விட்டதால் ஸ்ரீ தேவாவுக்கு நடிப்பது மிகவும் இயல்பாக வருகிறது. அதுவும் ஏமாற்றி லந்து கொடுக்கும் வேலைகளில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
சரவண சக்தியின் லந்து பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. ஒரு கட்டத்தில் காவலுக்கு வரும் போலீசின் துப்பாக்கியை பிடுங்கி அவர் பண்ணும் அலப்பறைக்கு என்கவுண்டரிலேயே அவரைப் போடலாம்.
நாயகி நிவேதா பளிச்சென்று இருப்பதால் சரியாக ரியாக்ட் பண்ண முடியாவிட்டாலும் அவரை ரசிக்க முடிகிறது. போலீஸ் வேலைக்கான பயிற்சிகளில் ஓட்டம் தாண்டுதலில் எல்லாம் டூப் போடாமல் நடித்து அசத்தி இருக்கிறார்.
தன் வழக்கப்படியே கேமராவிற்கு ஒரு ஆங்கிளில் முகம் காட்டி வில்லத்தனம் செய்கிறார் வேல ராமமூர்த்தி.
அத்தனை பெரிய வில்லனைக் கடைசியில் சாதாரணமாக பொறி வைத்து பிடித்து விடுகிறார்கள்.
ஸ்ரீ தேவா ஏன் அப்படி கடன் வாங்கினார் என்பதற்கான காரணம் அத்தனை வலுவில்லாதது. அதற்காக ஊரை எல்லாம் அப்படி ஏமாற்ற வேண்டியதில்லை.
பரணியின் இசையில் பாடல்கள் பளிச்சென்று மனதை கவர்கின்றன.
ஒளிப்பதிவும் இந்த மீடியம் பட்ஜெட் படத்தை சற்று பெரிய படம் போல காட்ட உதவி இருக்கிறது.
தேக்கமில்லாத திரைக்கதையில் படத்தை நகர்த்தும் வித்தை தெரிந்த இயக்குனர் வேல் குமரேசன் இதே லைனை இன்னும் கூட நம்பகமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருந்தால் கண்டிப்பாக நன்றாக இருந்திருக்கும்.
ஊரில் அத்தனை பேரை ஹீரோ ஏமாற்றிய விஷயத்துக்கு குறைந்தபட்சம் அவர் வருந்துவதாகவாவது கதையை முடித்து இருக்கலாம்
வசூல் மன்னன் – தியேட்டரிலும் நடந்தால் நலம்..!