July 9, 2026
  • July 9, 2026
Breaking News
July 10, 2026

முதற்கனல் திரைப்பட விமர்சனம்

By 0 5 Views

திரைப்படத்தை வெறும் பொழுது போக்கு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல் அதை சமுதாய மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தும் நோக்கம் உள்ள இயக்குனர் ஆர். வெங்கடரமணன் இதற்கு முன் இயக்கிய படத்தில் மதுப் பழக்கத்தின் தீமைகளைச்  சாடியிருந்தார். 

அதைப்போலவே இந்த படத்தில் போதைப் பொருள் எந்த அளவுக்கு இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது என்பதை நெற்றி பொட்டில் அறைந்தது போல் சொல்லி இருக்கிறார்.

அதையும் பிரச்சார நோக்கில் சொல்லாமல் ரசிக்கக்கூடிய வகையில் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாகவும் சொல்லியிருப்பது அவரது திறமைக்குச் சான்று.

சாதிக்கும் நோக்கங்களுடன் வாழும்  திறமையான ஒரு இளைஞன், தவறான நட்பு கொண்டு போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழக்கும் சூழலுக்கு செல்கிறான். 

அதிலிருந்து மீண்டு தனது எதிர்காலத்தை வெல்ல அவன் மேற்கொள்ளும் போராட்டத்தை உணர்வுபூர்வமாக சொல்வதுதான் இந்த படத்தின் கதை. 

நாயகனாக நடித்துள்ள அஸ்வின் விஸ்வநாதன், தனது பாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி அதை உணர்ச்சிகளாக வெளிக் காட்டியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

தன் கனவுகள், தான் செய்யும் தவறுகள், அதன் காரணமான மனவேதனை, தவற்றிலிருந்து மீண்டு வருவதற்கான போராட்டம் எல்லாவற்றையும் தன் நடிப்பில் கடத்தி இருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் அவர்.

அவருடன் படத்தில் இடம்பெற்றிருக்கும் ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரிகரன், யோகேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கூட படத்தின் தன்மை உணர்ந்து நடித்திருப்பதால்,  காட்சிகளுக்கு வலிமை கூடுகிறது. 

எல்லோரும் புதுமுகங்களாக இருந்தாலும் தேர்ந்த நடிகர்கள் போல் நடித்திருப்பது அவர்களின் திறமை மட்டுமல்லாது அவர்களை வேலை வாங்கியிருக்கும் இயக்குனரின் பெருமையும் ஆகும்.

ஒரு திரில்லர் படத்துக்கு எந்த விதமான கோணங்கள் வைப்பது அந்த உணர்ச்சிகளை காட்சிகளின் மூலம் எப்படி சொல்வது என்பதில் ஒளிப்பதிவாளர் கந்தசுவாமி கோபால், தெளிவாக செயல்பட்டு தன் பெயரை காப்பாற்றிக் கொள்கிறார்.

அதேபோல் படத்தின் உணர்ச்சிகளை புரிந்து இசைத்திருக்கும் இசையமைப்பாளர் மீரா லாலின் திறமை பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலமாக வெளிப்பட்டு இருக்கிறது.

நல்ல செய்தி சொல்லும் படமாக இருந்தாலும் எடிட்டர் திஸ்யன் சாரதி காட்சிகளை கவனமாக தொகுத்திருப்பதால் படத்தில் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது.

சஸ்பென்ஸ் படமாக மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பை அடிநாதமாக வைத்து வெகுஜன சினிமா ரசிகனின் நாடியையும் பிடித்து படத்தைக் கொடுத்திருப்பதால் இயக்குனர் ஆர் வெங்கட்ரமணனின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

முதற்கனல் – காலம் அறிந்து கூவிய சேவல்..!

– வேணுஜி