July 4, 2026
  • July 4, 2026
Breaking News
July 4, 2026

டார்க் திரைப்பட விமர்சனம்

By 0 7 Views

ஹாரர் படங்களில் இரண்டு வகை – ஒன்று சீரியஸ் ஆக கதை சொல்வது… இன்னொன்று அதையே காமெடியாக சொல்வது… இது படு சீரியஸ் ரகம்..!

வாடகை வீட்டில் குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை திடீரென்று கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஆனால் அந்த வீட்டுக்கு குறைந்த வாடகை என்பதால் அந்த வீட்டில் குடி வருகிறார் நாயகன் அஜய் கார்த்திக். ஆனாலும் வீட்டு உரிமையாளரான கே பாக்யராஜ் வீடு பற்றிய உண்மையை சொல்லியே அவரை குடி வைக்கிறார்.

இருப்பினும் குறைந்த வாடகை என்பதால் தைரியத்துடன் அந்த வீட்டில் குடியேறும் அஜய் கார்த்திக் சில அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர் கொள்வதுடன் ஒரு கட்டத்தில் தன்னைத் தானே கொடூரமாக தாக்கிக் கொண்டு இறந்து போகிறார். 

அவர் மட்டுமல்லாமல் வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும் மாரடைப்பில் இறந்து போகிறார்.

இந்த சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டு துப்பு துலக்க வரும் காவல்துறை அதிகாரி நட்டி, தடயங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து போன அஜய் கார்த்திக் திடீரென்று எழுந்து, அவரை எச்சரித்து விட்டு மீண்டும் கீழே விழுகிறார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்கும் நட்டி தன் விசாரணையை தீவிரப்படுத்தும் போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் ஏதேனும் தொடர்பு உள்ளதா… இதற்கான காரணம் என்ன என்பதை திகிலூட்டும் வகையில் சொல்கிறது ‘டார்க்’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்திக், ஆரம்பத்தில் ஜாலியான இளைஞராக அறிமுகமாகி பின்னர் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் தெரிந்து அதற்கு அச்சப்படும் போதும், தன்னுள் நேரும் மாற்றங்கள் குறித்து கவலை கொள்ளும் போதும் மிகச் சரியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ் படத்திலும் மாரடைப்பில் இறந்து போவது நம் கவலையை அதிகரிக்கிறது.

விசாரணை செய்ய வரும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி, தன் வில்லத்தனமான வழக்கப்படியே, சம்பவ இடத்தில் இருக்கும் சிகரெட்டையும் தான் புகைத்து விட்டு அதையும் கொலை கொண்டவரின் கணக்கிலேயே எழுதிக் கொள்ள சொல்வது அசத்தல். பின்னர் அமானுஷ்யம் தெரிந்து வெளிப்படுத்தும் நடிப்பும் நன்று..!

இந்த முக்கியமான பாத்திரங்களுடன் அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கதையின் முக்கிய பாத்திரங்கள் இடம் பிடித்து கவனம் பெறுகிறார்கள்.

ஒழிப்பதில் சிரமமான வேலை ஒரே வீட்டுக்குள் படம் எடுப்பதும் இருட்டுக்குள் படம் எடுப்பதும் தான். அந்த சவாலை ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, திறமையுடன் பங்காற்றி நிறைவு செய்து இருக்கிறார்.

திகிலை மேம்படுத்தி தருவதில் மனு ரமேஷின் பின்னணி இசைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இயல்பான ஹாரர் படம் போல் இல்லாமல் வித்தியாசமான செய்தி தந்து வியக்க வைக்கிறார்.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் கல்யாண் கே.ஜெகன், ஒரு அமானுஷ்யம் நிறைந்த கதையாக அதை ஆரம்பித்து பின்னர் சைக்காலஜிக்கல் திரில்லர் ஆக மாற்றி இருப்பது வித்தியாசமான உத்தி. 

படம் ஆரம்பிக்கும் போது கதை இப்படி போகும் என்று நாம் நினைத்தால் அதற்கு நேர் எதிராக இன்னொரு கோணத்தில் கதை நகர்கிறது.

இப்படிப்பட்ட படங்கள் எல்லாமே சிறு சிறு லாஜிக் மீரல்களுடன் இருப்பது வழக்கம். ஆனால் அதையெல்லாம் நாம் பெரிது படுத்த தோன்றாமல் படத்தில் லயிக்க வைப்பது தான் ஒரு இயக்குனரின் சாமர்த்தியம்.

அந்த வகையில் இந்த டார்க் மௌனமாகவே நம்மை பயமுறுத்துகிறது..!

– வேணுஜி