October 9, 2026
  • October 9, 2026
Breaking News
October 9, 2026

ஆல் பாஸ் திரைப்பட விமர்சனம்

By 0 9 Views

படத்தின் தலைப்பை பார்த்து விட்டு இது ஏதோ கல்வி சம்பந்தப்பட்ட படம் என்று நினைத்து விட வேண்டாம். ஆனால், மனிதர்களுக்கு உழைத்து சம்பாதிக்கிற காசுதான் ஒட்டும் என்று ஒரு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் மைதீன். 

கஷ்டப்படும்போது எல்லா மனிதர்களுக்குள்ளும் புரிந்து கொள்ளலும் நெருக்கமும் இருக்கும். ஆனால் அதுவே கையில் நாலு காசு வந்து விட்டால் அது இருக்காது என்ற ஒரு உண்மையையும் இதில் சொல்லி இருக்கிறார். 

படத்தின் ஹீரோ என்று பார்த்தாலே ஜெயபிரகாஷ்தான். ரொம்ப நல்ல மனிதரான அவர் திருமணங்களுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவருடைய மனைவி பிரசவத்துக்கு போயிருந்த அதே நேரம் அரசு மருத்துவமனையில் பெயிண்டர் சுப்பிரமணிய சிவாவின் மனைவியும், சைக்கிள் கடைக்காரர் பிரசன்னா பாலச்சந்திரன் மனைவியும் பிரசவத்திற்கு வந்திருக்க அவர்களுக்குள் ஒரு நட்பு பூக்கிறது.

அந்த நட்பின் காரணமாக வட சென்னையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பக்கத்து பக்கத்து வீடுகளில் குடி ஏறுகிறார்கள். அவர்களுடைய நட்பைப் போலவே அவர்களது மனைவிமார்களான செந்தி குமாரி, வினோதினி, மோகனா.ஆர் மூவரும் கூட உடன்பிறவா சகோதரிகளாக பழகி வருகிறார்கள். 

பெரும்பாலும் மூன்று குடும்பத்தினரும் ஜெயபிரகாஷ் வீட்டிலேயே இருந்து, சாப்பிட்டு ஒன்றோடு ஒன்றாக பழகி வருகிறார்கள். ஒரே நேரத்தில் பிறந்த அவர்களது மூன்று பிள்ளைகளும் இப்போது பள்ளி இறுதி படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அந்த ஏரியா எம்எல்ஏவாக இருக்கும் சரத் லோகித்ஷவாவின் 5 கோடி ரூபாய் பணம் ஒரு குழப்பத்தில் அந்த சிறுவர்கள் கைக்கு வந்து சேர்கிறது. 

அவர்களும் அந்த பணத்தை அப்படியே வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார்கள். எல்லோருக்கும் இருக்கும் பணக்கஷ்டத்தை முன்வைத்து அதை மூன்று பேரும் சமமாக பிரித்துக் கொள்வதாக இருக்கும் நேரத்தில், தன் பணம் காணாமல் போன கோபத்தில் வில்லன் சரத், அந்த வீட்டு வசதி வாரியதுக்குள் பணம் வந்ததை மோப்பம் பிடித்து அங்கு குடியிருக்கும் கவுன்சிலரான சத்யாவை வைத்து வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார். 

அவர் கையில் சிக்கினால் இவர்கள் கதி அதோ கதி தான் என்கிற நிலையில் அந்தப் பணத்தை இவர்களால் காப்பாற்ற முடிந்ததா அல்லது சரத் தன் பணத்தை மீட்டாரா என்பதெல்லாம் விறுவிறுப்பான மீதி படத்தில்.

கதையின் நாயகன் போல நடித்திருக்கும் ஜெயபிரகாஷ் அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். உதவி என்றால் முதல் ஆளாக ஓடோடி வந்து நிற்பவர் அதன் காரணமாகவே அனைவரின் அன்பையும் பெற்றிருப்பது பொருத்தமாக இருக்கிறது.

சரக்குள்ள பெயிண்டராக வரும் சுப்பிரமணிய சிவா, சரக்கு உள்ளே போய்விட்டால் என்ன பேசுகிறார் என்பதே தெரியாது என்ற நிலையில் தங்களிடம் உள்ள பணத்தைப் பற்றி அவர் ஊராரிடம் உளறிக் கொட்டி விடக்கூடாது என்று அவரை சரக்கு அடிக்காமல் பார்த்துக் கொள்வதே அந்தக் குடும்பத்தின் தலையாக பிரச்சனையாகி விடுகிறது. 

வழக்கமாக பேசினாலே சிரிப்பு வரும் பிரசன்னா பாலச்சந்திரன் இதில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார்.

இவர்களது மனைவியராக நடித்திருக்கும் செந்திகுமாரி, வினோதினி, மோகனா. ஆர் நடுத்தர வர்கத்து பெண்களின் குண நலன்களை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். 

அதிலும் செந்தி கையில் முழு பணமும் இருக்க அதை பொறுக்க மாட்டாத வினோதினி, மோகனாவை தூண்டிவிட்டு பணத்தை மூன்று பங்காக பிரிப்பதெல்லாம் அந்த ரகம்தான்.

அதிலிருந்து அவர்களுக்குள் இருந்த நட்பு பகையாகி விடுவது அவர்களுடைய அன்புக்கு கண் பட்டது போல் ஆகிவிடுகிறது.

இந்த நடுத்தர வயது மனிதர்களுக்குள் ஒரே ஒரு இளம் ஜோடியாக உள்ளே வரும் ஆட்டோ டிரைவர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் – ஜனனியின் காதல் ரசிக்க வைக்கிறது. பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் மருந்தாக அவர்களது காதல் அமைவதும் கச்சிதம்.

பணத்தை ஆட்டையை போடும் சிறுவர்களான சஞ்சய், கோகுல், நிகில் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத் லோகித்ஷவா ஆரம்பத்தில் உருமும் உருமல் கடைசியில் ஏதோ செய்து விடுவார் என்று பயமுறுத்துகிறது. அதேபோல் கவுன்சிலர் சத்யாவின் அறிமுகத்தில் இருந்த வேகம் குறைந்த கடைசியில் காமெடி பீஸ் ஆகிவிட்டார்.

ரொம்ப காலம் கழித்து ஜேம்ஸ் வசந்தன் இசையில் வந்திருக்கும் படம். அவர் வெளியில் பேசுகிற அளவுக்கு பாடல்கள் பெரிதாக இல்லாமல் படத்துக்கு பொருத்தமாக ஒலிக்கிறது.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் மைதீன், இயக்குனர் வி சேகரை இந்த படத்தின் மூலம் நமக்கு நினைவுபடுத்துகிறார். நடுத்தர வர்க்க குடும்ப பிரச்சினைகளை இயல்பாகவும் நகைச்சுவையாகவும் கொடுத்திருக்கும் அவர் அதே நேரத்தில் பணம் என்கிற சாத்தான் உள்ளே வந்து விட்டால் எல்லோருடைய மனதும் எப்படி நரகமாகி விடுகிறது என்பதையும் நயமாக சொல்லியிருக்கிறார்.

இரண்டாவது பாதி ஏக பில்டப்புகளுடன் சென்று கடைசியில் ஒரு காட்சியில் பொசுக்கென்று முடிந்து விடுவது ஏமாற்றம் அளிக்கிறது. சரத்தின் வில்லத்தனமோ, நடுத்தர வர்க்க நாயகர்கள் மனம் திருந்திய நல்ல குணமோ வெளியே தெரியாமல் எதற்காக சட்டென்று படத்தை முடித்தார்கள் என்று தெரியவில்லை. 

அத்துடன் அந்த பணத்தை ஆட்டையை போடுவதற்கு சரத்தின் மகனே முயன்ற விஷயங்கள் எல்லாம் வெளியே வராமலேயே போய் விட்டன. 

ஆல் பாஸ் – எல்லோரும் நல்லவரே..!

– வேணுஜி