June 17, 2026
  • June 17, 2026
Breaking News
June 8, 2026

இரட்டையர் திரைப்பட விமர்சனம்

By 0 78 Views
ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஒரு தாயையும், அவளது இரட்டைச் சகோதரிகளான மகள்களையும் மையமாகக் கொண்டு, உளவியல் சிக்கல்களை குடும்ப பின்னணியுடன் இணைத்து சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் ஜெகதீஷ் தம்பையா.எஸ்.
 
ஒரு கார் விபத்தில் தந்தை இறந்து போக, அவரது மகள்களான இரட்டைச் சகோதரிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.
 
அவர்களின் தாயின் முகமும் சிதைந்து அது சம்பந்தமான அறுவை சிகிச்சை நிலையில் ஏற்படும் மர்மங்களும், இறந்துவிட்டதாக நம்பப்படும் சகோதரியின் இருப்பை மற்றொரு சகோதரி தொடர்ந்து உணர்வதும் அதன் முடிவு என்ன என்பதுமாக கதை நகர்கிறது.
 
முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக மாறிவிடுகிறது. 
 
அதிலும் கிளைமாக்ஸில் வரும் திருப்பம் பார்வையாளர்களை மேலும் ஆச்சரியப்படுத்துகிறது. 
 
இரட்டைச் சகோதரிகளின் தாயாக நடித்திருக்கும் அபிநயா தனது கதாபாத்திரத்தில் இயல்பான மற்றும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 
தன்னையே தன் குஞ்சுகளுக்கு உணவாக்கும் சிலந்தியின் கதையை சொல்லும் தாய்ப்பாசம் சிலிர்க்க வைப்பதுடன் அபிநயாவின் நடிப்பு நேர்த்தியான படமாக உணர வைக்கிறது.
 
இரட்டைச் சிறுமிகளாக நடித்திருக்கும் அனுமிதா, அனுஷிதாவின் நடிப்பும் கவர்கின்றது.
 
இவர்களுடன் துணைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா மற்றும் மறைந்த வெங்கட் சுபா ஆகியோரும் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
 
ஒரு உளவியல் திரில்லருக்கான சுவாரசியத்தை கொண்டிருக்கும் இந்த படத்தில் எதிர்பாராத கிளைமாக்ஸ்சும்  படத்தின் பலமாக அமைந்திருக்கிறது.
 
அத்துடன் சலிப்பு தட்டாத வகையில் தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்து படத்தின் நீளத்தை குறைத்து இருக்கும் உத்தியும் பாராட்ட வைக்கிறது.
 
முகமது அமீனின் ஒளிப்பதிவும், ஜிகேவி யின் இசையும் படத்தின் த்ரில்லுக்குப் பங்களித்திருக்கின்றன.
 
முன்பாதியில் படம் மெதுவாக நகர்வதை தவிர்த்து இன்னும் துரிதப்படுத்தி இருக்கலாம்.
 
பெரிய பட்ஜெட்டையோ ஸ்டார்களையோ நம்பாமல் கதையை மட்டுமே நம்பி சிறிய பட்ஜெட்டில் சிறிய முயற்சியை கொண்டிருக்கும் இது போன்ற படங்களை வரவேற்கலாம்.
 
திரில்லர் பிரியர்களுக்கு இந்த படம் திருப்தியை தரும்.
 
இரட்டையர் – ஏமாற்றவில்லை..!
 
– வேணுஜி