ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாவதாக சொல்லப்பட்ட சிம்புவின் மாநாடு படம் அப்போது வெளியாகவில்லை. நவம்பர் 25-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் நாளை வெளியாக இருந்த மாநாடு படம் மறுபடியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி இன்று மாலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்.
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்…என்று கூறியிருக்கிறார்.
விசாரித்த வகையில் படத் தயாரிப்புச் செலவுக்கு வாங்கிய பணத்தை செட்டில்மென்ட் செய்வதில் சிக்கல் இருப்பதால் பட வெளியீட்டுக்கு தடை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இது சமீபத்திய எல்லா பெரிய படங்களுக்கும் வெளியீட்டு நேரத்தில் ஏற்படும் சிக்கல்தான்.
ஆனால் ஒரு பெரிய படம் வெளியாகும் நேரத்தில் சிக்கல் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்தமாக சினிமா தொழிலை நம்பி இருப்பவர்களை பாதிக்கும் என்பதால் சம்பந்தப்பட்டவர்களுடன் நல்லிதயம் கொண்டவர் களும் பிரச்சனையை தீர்க்க கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்.
அந்த வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் சிம்புவும் டி ராஜேந்தரும் கூட கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதில் சுமுக முடிவு ஏற்படும் பட்சத்தில் நாளை காலை மாநாடு வெளியாவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்க தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டபடி படம் நாளை வெளியாகும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
அப்படியே வெளியாகும் என்று நாமும் நம்புவோம்.