April 25, 2024
  • April 25, 2024
Breaking News
November 25, 2021

₹ 2000 படத்தின் திரைவிமர்சனம்

By 0 466 Views

2000 ரூபாய் என்றாலே இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். காரணம் திடீரென்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக எல்லோரும் அனுபவித்த துன்பம்தான்.

 
எனவே இந்தத் தலைப்பில் ஒரு படம் வந்து இருக்கிறது எனும்போது நமக்கு அந்த விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அதைவிட மக்களுக்கு முக்கியமானது.
 
வழக்கமாக நாம் கடைகளுக்கு செல்லும்போது ரூபாய் நோட்டுகள் கசங்கி இருந்தாலோ அவற்றில் எழுதி இருந்தாலோ அல்லது பின் அடித்த ஓட்டை இருந்தாலோ அவை செல்லாதவை என்கிற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. வியாபாரிகளும் அப்படிப்பட்ட ரூபாய் நோட்டுகளை செல்லாதவை என்றே வாங்க மறுத்து வருகிறார்கள்.
 
ஆனால் உண்மையில் ரிசர்வ் வங்கி சொல்வது என்னவென்றால் எந்த அளவு பாதிக்கப்பட்ட ரூபாய் நோட்டுமே செல்லத்தக்கது என்பதுதான். அவற்றை வாங்க யாரும் மறுக்க கூடாது என்பதுடன் எந்த காரணத்தாலும் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்ட  ரூபாய் நோட்டின் மதிப்பு குறையாது என்பதுதான் படம் சொல்லும் செய்தி.
 
அப்படி தன் மகளின் மருத்துவ செலவுக்காக ஏடிஎம் மையத்தில் இருந்து 2000 ரூபாயை ஒரு விவசாயி எடுக்க அதில் ஏதோ எழுதப்பட்டு இருந்ததில் செல்லாத நோட்டாக மருந்துக் கடைக்காரரால் அது நிராகரிக்கப்படுகிறது.
 
அதை வங்கியில் மாற்றிக் கொள்ள முடியும் என்று அவர் முயற்சி செய்ய அவர் சென்ற வங்கியும் அதை மாற்ற மறுக்கிறது. இதனால் உரிய நேரத்தில்  மருந்தை வாங்கிக் கொடுக்க இயலாமல் நோய்வாய்ப்பட்ட சிறுமி இருக்கிறாள். இதற்கான நீதி கேட்டு அவர் நீதிமன்றம் செல்ல, முடிவு என்ன ஆகிறது என்பதுதான் கதை.
 
முதல் காட்சியிலிருந்தே நீதிமன்றம் இடம் பெற்றுவிடுகிறது. நீதிமன்ற விசாரணையும் அது தொடர்பான விவாதங்களுமாகவே முழுப்படமும் போய் முடிகிறது.
 
மிகச் சமீபத்தில் இப்படி அதிகபட்ச நீதிமன்ற காட்சிகளுடன் வெளியான சூர்யாவின் ஜெய்பீம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்க இந்தப்படமும் அதை விட மக்களுக்கு முக்கியமான கருத்தைக் கடத்தும் நீதிமன்றப் படமாக அமைந்திருக்கிறது. 
 
வழக்கமாக நாம் பழகி வந்திருக்கும் படம் போல கதாநாயகன், கதாநாயகி என்று இல்லாமல் சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் வழியாகவே கதை சொல்லப்பட்டிருக்கிறது. கதாநாயகன் என்று ஒருவரை சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால் அது பாதிக்கப்பட்டவருக்காக வாதாடும் வழக்கறிஞர் பாரதி கிருஷ்ணகுமாரைத்தான் சொல்ல முடியும்.
 
பாதிக்கப்பட்டவருக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் ஏடிஎம் மையத்தின் காவலாளி முதல் வங்கி அதிகாரிகள் தொடங்கி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து ஒன்றிய நிதி அமைச்சகம் வரை விரியும் அவரது விரிவான விசாரணை அதிசயிக்க வைக்கிறது.
 
அந்தக் காட்சிகளில் அவர் வாயிலாக படத்தை எழுதி இயக்கியிருக்கும் ருத்ரன் வலிமையான சட்ட ரீதியான கருத்துகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
ஒரு வங்கிக்கும் அந்த வங்கி நிர்வகிக்கும் ஏடிஎம் மையங்களுக்கும் என்ன தொடர்பு… வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உள்ள தொடர்புகள் மற்றும் செயல்பாடுகள் என்ன… ரிசர்வ் வங்கிக்கும் மத்திய நிதி அமைச்சகத்துக்குமான தொடர்பு என்ன என்பது பற்றியெல்லாம் ஒரு விரிவான அலசலாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது. 
 
அவற்றைப் பற்றியெல்லாம் தெரியவரும்போது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது. அவை பற்றியெல்லாம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
 
இது நாம் பார்க்கும் வழக்கமான வணிகரீதியான சினிமாவாக இல்லாமல் சொல்ல வேண்டிய கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் எடுக்கப்பட்ட படமானதால் இதில் நடித்திருக்கும் பாத்திரங்கள் அனைவருமே அவரவர் பங்குக்கு இயல்பான நியாயத்தை செய்திருக்கிறார்கள்.
 
அவர்களில் அரசு தரப்பு வழக்கறிஞராக வரும் கராத்தே வெங்கடேஷ் மட்டும்தான் வழக்கமான சினிமாவில் அறிந்த முகமாக இருக்கிறார். 
 
தோழர் ஓவியா, தோழர் தியாகு இருவரும் நீதிபதிகளாக நடித்திருக்கிறார்கள்.
 
வணிக ரீதியிலான திரைக்கதை அமைந்திருந்தாலும் அதைக் காட்சிப்படுத்துவதில் பொருளாதாரப் பற்றாக்குறை இருப்பது படம் நெடுக தெரிகிறது. 
 
படத்தில் மேற்படி 2000 ரூபாய்க்கான மதிப்பு மறுக்கப்பட்டதன் விசாரணை ஒரு இழையாகவும் சாதி வெறியில் அமைந்த ஆணவக்கொலை பற்றிய விசாரணை இன்னொரு இழையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
 
மக்களுக்கான செய்தி சொல்லும் எந்தப் படைப்புமே மக்கள் விரும்பும் வகையில் அமைந்தால் மட்டுமே அந்தக் கருத்துகள் மக்களிடத்தில் சென்று சேரும். அந்த வகையில் மக்கள் விரும்பும் வண்ணம் இதன் திரைக்கதையும் காட்சிப்படுத்தலும் இருந்திருந்தால் இன்னும் படத்தை ரசித்து இருக்க முடியும்.
 
அந்த வகையில் திரைப்படமாக இல்லாமல் ஒரு பாடப்புத்தகத்தை வாசித்த அனுபவமே நமக்கு கிடைக்கிறது.
 
பிரமூஸ் தாஸின் ஒளிப்பதிவும் இனியவனின் இசையும் படத்தின் பட்ஜெட்டுக்குள் அடங்கி, அடக்கியே வாசித்திருக்கிறது. 
 
கருத்துக்கள் மட்டும் வேண்டுவோர் அதனை நூலகத்திற்கு சென்று பெற்றுவிட முடியும். அதற்காக திரையரங்குக்கு யாரும் வருவதில்லை. திரையரங்குக்கு வருவோர் வெறும் கருத்துக்களுக்காக மட்டும் வருவதில்லை.
 
இருந்தாலும் ஒரு கலைப்படைப்பு மக்களுக்காக படைக்கப்பட வேண்டும் என்று விரும்பி படத்தை தயாரித்திருக்கும் கோ. பச்சியப்பனுக்கும் பொதுமக்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய  செய்தியைச் சொன்ன இயக்குனர் ருத்ரனுக்கும் செவ்வணக்கத்துடன் நன்றி சொல்லலாம்..!