April 27, 2024
  • April 27, 2024
Breaking News
November 26, 2021

மாநாடு திரைப்பட விமர்சனம்

By 0 418 Views

வழக்கமாக ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பிரேஷன் பெற்று (!) தமிழ் படங்களை எடுப்பவரான வெங்கட்பிரபு இந்தப் படத்திலும் ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார்.

புத்திசாலி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று முன்பே புரிந்து வைத்துக் கொண்டு அதை விட புத்திசாலித்தனமாக யோசித்து ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ மட்டுமல்லாமல் மேலும் இந்த படத்தின் கதையை ஒத்த படங்களின் லிஸ்ட்டை முழுவதும் சொல்லி “இந்தப் படங்களைப் போலவே என் வாழ்க்கையில் நடக்கிறது…” என்று படத்தின் நாயகன் சிம்பு சொல்வதாக வைத்துப் புதிரை அவிழ்த்து விட்டார்.

அதனால் யாரும் அந்தப் படத்தை காப்பி எடுத்து இந்த படத்தை எடுத்து விட்டார் என்று சொல்வதற்கு வழியில்லாமல் போய்விட்டது.

அதைவிட பெரிய விஷயம் ‘டைம் லூப்’ என்று சொல்லப்படும் அறிவியல் புனைவை இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே காணமுடிந்ததை மாற்றி தமிழிலும் இப்படி ஒரு முயற்சியை முன்வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.

டைம் லூப் என்றால் என்னவென்றே தெரியாத தமிழ்ப்பட ரசிகர்களிடத்தில் அப்படி ஒரு புனைவைக் கொண்டுவருவது எத்தனை பெரிய ஆபத்தான விஷயம் என்பது ஒருபுறமிருக்க அந்த சிக்கலான முயற்சியில் சிம்புவை நடிக்க வைத்து படத்தை முடிப்பது என்பது அதைவிட ஆபத்தான விஷயம் அல்லவா..?

இந்த இரண்டு ஆபத்துகளையும் சர்வசாதாரணமாகக் கடந்து ரசித்துப் பார்க்கக்கூடிய ஒரு பக்காவான கமர்ஷியல் படமாக கொடுத்திருப்பது வெங்கட்பிரபுவின் சாதனை என்று சொல்லலாம்.

கதை என்றால் சின்னஞ்சிறு லைன்தான். தோழியின் கல்யாணத்தில் கலந்து கொள்ள துபாயில் இருந்து வரும் ‘அப்துல் காலிக்’ என்கிற சிம்பு, அந்தத் திருமணத்திலிருந்து தோழியைக் கடத்தி அவள் விரும்பிய இன்னொரு நண்பனுக்குத் திருமணம் முடித்து வைக்க நினைக்கிறார். அப்படிப் போகும் வழியில் ஒரு பிரச்சனையில் சிக்கி மாநில முதல்வரை கொல்ல நேர்வது வரை போகிறது. அதன் விளைவாக சிம்புவும் கொல்லப்படுகிறார்.

இதுதான் கதை. ஆனால் இத்துடன் கதை முடியவில்லை. சிம்பு இறக்க, மீண்டும் ஆரம்பித்த இடத்திலிருந்து கதை தொடங்குகிறது. மீண்டும் மீண்டும் இப்படியே சிம்புவின் ஒரு நாளைய வாழ்வில் ஏற்பட்டுக்கொண்டே இருக்க, இதன் மர்ம முடிச்சை அவிழ்த்து தானும் கொல்லப் படாமல் தப்பித்துத் தமிழக முதல்வரையும் கொல்லப்படாமல் காக்கிறார் சிம்பு. அது எப்படி என்கிற சிக்கலான புனைவை சாதுரியமாக கடந்து ரசிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

கடைசியாக சிம்புவை விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஸ்மார்ட்டாகப் பார்த்தது அதற்குப் பின் உருண்டு திரண்டு எப்படி எப்படியோ மாறி என்னென்னவோ நடித்துத் தன் திறமைகளை வீணடித்துக் கொண்டு இருந்தவருக்கு மீண்டும் ஒரு  ‘புதிய லுக்’ கொடுத்திருக்கிறது இந்தப் படம்.

100 கிலோவுக்கு மேல் வீங்கித் தெரிந்த சிம்பு இந்த படத்தில் 60 கிலோவுக்குக் குறைந்து ஸ்லிம்மாகத் தோன்றியிருப்பதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அதே ஆச்சரியம் படத்தில் அவரது நண்பராக வரும் பிரேம்ஜிக்கும் வர, “ஆளே மாறிட்ட… என்னடா பண்ணினே..?” என்று கேட்கிறார். அதற்கு சிம்பு, “எதுவும் பண்ணலை… அதான்..!” என்கிறார்.

இந்த ஒற்றை பதிலில் குறும்பான பல Beep விஷயங்கள் நமக்கு புரிய அதை ரசிக்கிறோம். அந்த ரசனை படத்தின் இறுதி வரை தொடர்வது படத்தை பல லாஜிக் மீறல்களில் இருந்தும் காப்பாற்றியிருக்கிறது.

வழக்கமான கமர்ஷியல் ஹீரோவுக்கான அலட்டல்கள் எதுவும் இன்றி இயல்பான கேரக்டரில் சிம்புவைப் பார்ப்பதற்குப் பிடிக்கிறது. ஆள் இளைத்தாலும் ஆற்றலில் இளைக்கவில்லை என்பதைக் கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் நண்பர்கள் கொல்லப்பட அவர் துடிக்கும் துடிப்பு உணர்த்துகிறது.

இரண்டு வருடங்கள் நீடித்த படம் ஆகையால் சிம்பு அங்கங்கே இரண்டு வித தோற்றங்களில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா சிம்புவின் நடிப்பை எல்லாம் அப்படியே ஒரு ஸ்வீட் பீடா போல் மடித்து வாயில் போட்டு மென்று துப்பி விடுகிறார். அப்படி ஒரு அசாத்தியமான நடிப்பு எஸ்.ஜே.சூர்யாவுடையது.

அவரது நடிப்பு ரொம்பவே ஓவர்தான் என்றாலும் அந்தக் கதைக்கு அப்படி கேரக்டரைத் தூக்கிப் பிடித்தால்தான் ரசிக்க முடியும் என்பதால் அதை உணர்ந்து அற்புதமாகச் செய்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அசுரத்தனமான நடிப்பு அவருடையது.

நியாயப்படி பார்த்தால் எஸ்.ஜே. சூர்யா படத்தில் சிம்பு நடித்து இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

சிம்புவுக்கு நாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் அத்தனை அழகு. நடிக்கத் தெரியாத அவரது நடிப்பும் கூட ரசிக்க வைப்பது அப்பாவித்தனம் மிக்க அவரது அழகால்தான்.

பிரியாணி வாங்கினால் ரைத்தா கூடவே வருவது போல வெங்கட்பிரபு இயக்கினால் அந்தப் படத்தில் பிரேம்ஜி வராமல் இருக்க மாட்டார் – இதிலும் அப்படியே. ஆனால் அவருக்காகத்தான் மணப்பெண்ணைக் கடத்துகிறார்கள் என்பது ரொம்பவே ஓவர்.

இன்னொரு நண்பராக வரும் கருணாகரன் எல்லாப் படங்களையும் போலவே அதிர்ச்சியுடன் முழிக்கிறார். 

தன் மகன் விஜய்யை தமிழக முதல்வர் ஆக்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரை இந்தப் படத்தில் தமிழக முதல்வராக்கி இருப்பதும் வெங்கட்பிரபுவின் குறும்புகளில் ஒன்று. ஆனால் அந்தக் கேரக்டரைப் புரிந்துகொண்டு மிகச்சரியாக நடித்திருக்கிறார் எஸ்ஏசி. அவரது பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தும் வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் என்பது மட்டும் சவசவக்கிறது.

படத்தில் எத்தனை முறை சிம்பு வந்த காட்சியிலேயே வந்து இருப்பார் என்பது போட்டி வைத்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவில் இருக்கிறது இருந்தாலும் முதல் பாதியில் ஏற்படும் அலுப்பு பின்பாதியில் ஏற்பட்டுவிடாமல் மிக கவனமாக எடிட்டர் கே.எல்.பிரவீன் உதவியுடன் ஜெட் வேகத்தில் நகர்த்தி இருக்கிறார் வெங்கட்பிரபு.

அதில் மிகப்பெரிய பங்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனுக்கும் இருக்கிறது. ரொம்ப காலம் கழித்து யுவனின் பின்னணி இசை பிளந்து கட்டி இருக்கிறது. இந்த இசையைக் கழித்துவிட்டு படத்தைப் பார்த்தால் கண்டிப்பாக இவ்வளவு ‘கிரிப்’ இருக்காது…

‘டைம் லூப்’ என்றால் என்ன, அது எப்படி ஏற்படுகிறது என்றெல்லாம் புரியாத நம் தமிழ் பட ரசிகர்களுக்குப் புரிய வைக்கிறேன் பேர்வழி என்று கொஞ்சம் மெனக்கெட்டு இருப்பதுதான் படத்தின் பலவீனமான பகுதி. அதைச் சொல்லாமல் இருந்தாலும் இந்த அளவுக்கு ரசித்திருக்க முடியும்.

ஒரு பக்கம் அறிவியல் ரீதியாக புரிய வைக்க முயன்று இன்னொரு பக்கம் ஆன்மிக வழியில் அதைக் கொண்டு செல்வதும் அபத்தமான கற்பனை. 

மதநல்லிணக்கம் என்கிற போர்வையில் இந்து கோவிலுக்குள் முஸ்லிமான சிம்பு பிறந்தார் என்பதை எல்லாம் சொல்வதும் வலிந்து திணித்த வறட்சியான கற்பனை. அதனாலேயே இந்துக் கடவுளும் அல்லாஹ்வும் சேர்ந்து ஒரு மதத்தின் பெயரால் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்று சிம்புவை வைத்து ‘டைம் லூப்’ செய்கிறார்களாம். ஓ ஜீசஸ்..!

மற்றபடி இந்தியாவில் நடக்கும் பயங்கரவாதங்களுக்கெல்லாம் இஸ்லாமியர்கள்தான் காரணம் என்பது போன்ற தோற்றத்தை அரசுகள்  ஏற்படுத்துவதை படம் மென்மையாக ஆனால், வன்மையாகக் கண்டிக்கிறது. தேவையற்ற மத மோதல்கள் நிகழ்ந்து விடக்கூடாது இருப்பது போதாதென்று இஸ்லாமியர்கள் மேல் மேலும் மேலும் பழி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்தப் பிரச்சினையை நல்லவிதமாக முடிக்க நினைக்கிறார் சிம்பு என்பது ஏற்கத்தக்கதுதான்.

ஆனால் அதை சொல்ல வரும்போது “எனக்கு இதுதான் முக்கியம். மற்றபடி சிஎம் சாவது பற்றிக் கவலை இல்லை…” என்பது போன்ற தொனியில் அவர் பேசும் வசனங்கள் அதிர்ச்சியாக இருக்கிறது. அப்துல் காலிக் அப்படிப் பேசுவதே இஸ்லாமியர்கள் மீதான மரியாதையைக் குறைக்கிறது என்று உணரவில்லையா இயக்குநர்..?

அதேபோல் சிம்பு டைம் லூப்புக்குள் சிக்கிக் கொள்வதை நியாயப்படுத்த ஒட்டாவிட்டாலும் சில லாஜிக் கதைகள் சொல்கிறார்கள். ஆனால் எஸ்.ஜே.சூர்யாவும் அந்த லூப்புக்குள் ஏன் எப்படி சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு எந்தவிதமான லாஜிக்கும் வைக்கப்படவில்லை.

இந்தத் தவறுகளை எல்லாம் நம்மை கவனிக்காமல் கடக்க வைத்திருப்பது பரபரப்பான திரைக்கதையும், ரசிக்கத்தக்க காட்சியமைப்புகளும், அதை உந்தும் பின்னணி இசையும்தான்.

குறிப்பாக இரண்டாம்பாதியில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் டானா கட்டிப் பேசும் காட்சிகளில் தியேட்டர் கைத்தட்டலில் அதிர்கிறது.

கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் ‘ இவர்கள் ‘ வந்து விடுவார்கள் என்று கணிக்க இயலாமல் ‘வாரிசு அரசியலை ‘ வைத்து லந்து பண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் நாங்கள் எல்லோரையும்தான் லந்து பண்ணுகிறோம் என்கிற அளவில் கடந்த பேனர் ஆட்சியையும் உள்ளே வைத்து நக்கல் செய்திருப்பதும் தன் புத்திசாலித்தனம் என்று இயக்குநர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

மாநாடு – ஓவர் லோடு..!

– வேணுஜி