October 19, 2021
  • October 19, 2021
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய வகையறா விமல்
March 4, 2021

வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய வகையறா விமல்

By 0 256 Views

நடிகர் விமலுக்கும் தியேட்டர் அதிபர் திருநாவுக்கரசு என்பவருக்கும்  நடந்த பண பரிமாற்றம் குறித்து சில ஊடகங்களில் செய்தி வர அதற்கு விமல் அளித்த மறுப்பு:

“என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே ஆகும். மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் (PRO) பிரியாவிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்…”

இப்படி ஒரு அறிக்கையை விமல் அளித்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே திருநாவுக்கரசுவிடம் இருந்து இன்னொரு அறிக்கை வெளிவந்தது அதில் அவர் கூறியிருப்பதாவது…

“நடிகர் விமலால் நான் மோசம் செய்யப்பட்டது குறித்து திமுக தலைவருக்கு நான் கடிதம் அனுப்பி அது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது.

இந்நிலையில் அதனை மறுக்கும் விதமாக நடிகர் விமல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்னுடன் எந்தவித பணபரிவர்தனையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

2016 ஆம் ஆண்டு ” மன்னர் வகையறா ” படத்தின் படப்பிடிப்பு பட்டுக்கோட்டையில் நடந்த சமயத்தில் தயாரிப்பு பணிகளை தயாரிப்பு மேலாளர் திரு.சேது என்பவரும், விமலின் உதவியாளர் திரு.சாரதி என்பவரும் மேற்கொண்டனர்.

விமல் கேட்டுகொண்டதற்காக கடனாக அவருக்கு நான் பணம் கொடுத்ததை இருவரும் நன்கு அறிவார்கள். விமலின் வேண்டுகோள்படி சாரதி என்னுடைய திரையரங்கிற்கு வந்து பணம் பெற்று செல்வார். சில சமயங்களில் நான் விமலிடமே நேரடியாக பணத்தை கொடுத்திருக்கிறேன். விமல் மீதிருந்த நம்பிக்கையால் என்னுடைய டைரியில் கையொப்பம் வாங்கி கொண்டு பணத்தை கொடுத்தேன். 

திரு.சாரதி மற்றும் திரு.விமல் இருவருமே என் டைரியில் கையொப்பமிட்டுள்ளார்கள். என்னுடைய டைரியை எந்த விசாரணைக்கும் காட்டுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். முழு பூசணிக்காயை ஒரு பருக்கை சோற்றில் மறைக்க முயல்வது போல என்னிடம் பணம் வாங்கியதை மறைக்கவும், என்னை ஏமாற்றவும் விமல் முயற்சிக்கிறார். இது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. 

விமலுக்கு கடனாக பணம் கொடுத்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவரை நான் காப்பாற்றினேன். விமல் தங்கியிருந்த பட்டுக்கோட்டை பண்ணை வீட்டில் கதாநாயகியுடன் அடிதடி மோதல் நடந்து அதன் பிறகு கதாநாயகி விமலுடன் நடிக்க முடியாது என்று கூறியதை நான் வெளியில் சொன்னால் விமலுக்கு தான் அசிங்கம். 

பத்தொன்பது நாள் படத்தில் நடித்த கதாநாயகி அந்த சம்பவத்திற்கு பிறகு விமலுடன் நடிக்க முன்வரவில்லை. இதனால் வேறுவழியின்றி 1.8 கோடி செலவு செய்து எடுத்த படத்தை தூக்கி போட்டுவிட்டு, கதாநாயகியாக ” கயல் ” ஆனந்தியை ஒப்பந்தம் செய்து மறுபடியும் அதே காட்சிகளை, அதே வசனத்தோடு எடுத்தனர். இது தான் “மன்னர் வகையறா” படத்தின் பட்ஜெட் எகிறியதற்கு காரணம்

இதையெல்லாம் நான் வெளியில் சொன்னால் விமலின் மானம் கப்பல் ஏறிவிடும் என்பதால் அவரின் நலன் கருதி அமைதி காக்கிறேன். ஆனால் விமல் என் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என்பது காமெடியாக உள்ளது.

2016 ஆம் ஆண்டு அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய போது, என் குடும்பத்தாரும், நண்பர்களும் வழக்கு தொடுக்க சொன்னபோது, நட்பின் காரணமாக நான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக விமலை அணுகி பணத்தை திருப்பித் தரும்படி கேட்டேன். அவரும் பட வெளியீடு சமயத்தில் தன்னை சந்தித்து பணம் பெற்று கொள்ளும்படி கூறினார். 

“மன்னர் வகையறா ” படம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சமயத்தில் அவரை சந்தித்தேன். ஜனவரி 23 ஆம் தேதி ரூ.35 லட்சம் தருவதாகவும், பின்னர் பிப்ரவரி 7 ஆம் தேதி ரூ.45 லட்சம் தருவதாகவும், அதனை நீங்களே என்னுடைய வங்கி கிளைக்கு சென்று RTGS செய்து கொள்ளுங்கள் என்று கூறி காசோலைகளையும், RTGS செய்வதற்கான வங்கி படிவங்களையும் வழங்கினார்.

ஆனால் 23 ஆம் தேதி நான் வங்கிக்கு சென்ற போது விமல் கணக்கில் பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். விமலை தொடர்பு கொண்ட போது ஒரு வாரம் கழித்து வங்கிக்கு செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் மறுபடியும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

மனம் தளராமல் மறுபடியும் விமலை தொடர்பு கொண்ட போது ” களவாணி -2 ” படப்பிடிப்பில் இருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தவுடன் அழைப்பதாகவும் கூறினார். ஆனால் விமலிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை.

இந்த அறிக்கையோடு விமல் பணம் பெறும் போது கையெழுத்திட்ட டைரியின் பக்கத்தையும், RTGS செய்வதற்காக விமல் கொடுத்த ஆவணங்களையும் இணைத்துள்ளேன். எந்த விசாரணைக்கும் டைரியுடன் ஆஜராக நான் தயார். விசாரணையை சந்திக்க விமல் தயாரா?”