கமல் படம், ரஜினி படம் என்றால் கமல் மற்றும் ரஜினிதான் முதலில் நினைவுக்கு வருவார்கள். அதை யார் இயக்குகிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான்.
ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்த அளவில் இது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாகத்தான் தோன்றுகிறது. அதில் கமல் நடித்திருக்கிறார் என்பதுதான் உண்மை.
அதற்குக் காரணம் கமல் படத்தின் குறியீடுகள் குறைந்தும் லோகேஷ் கனகராஜ் படங்களின் குறியீடுகள் அதிகரித்தும் இருப்பதுதான். அதென்ன லோகேஷ் கனகராஜ் பட குறியீடுகள் என்கிறீர்களா..? பிரியாணி, ஜெயில், கொசு மருந்து அடிக்கும் துப்பாக்கி மற்றும் இரவு காட்சிகள். இவைதான் அந்தக் குறியீடுகள்.
அதேபோல் மாஸ்டர் படத்தில் விஜய்யை தண்ணி அடித்து மயங்கி விழுந்து கிடக்கும் பேராசிரியராக காண்பித்தது போல் இந்தப்படத்தில் கமலையும் அப்படி போதை ஆசாமியாகத்தான் ஆரம்பத்தில் காட்டுகிறார் லோகேஷ் கனகராஜ். தண்ணி அடித்துக்கொண்டு தம் மடித்துக்கொண்டு, விலைமாது வீட்டுக்கு போய் வரும் கமலைப் பார்க்கும் போது நமக்கு ‘பக்’கென்று இருக்கிறது. ஆனால் பின்னால் அதெல்லாம் மாறிப் போகிறது என்பது வேறு விஷயம்.
ஆரம்பத்தில் கமல் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். அதன் பின்னணியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை சாம்ராஜ்யம் இருக்கவே, அதை போலீஸ் நேரடியாக துப்பறியாமல் பகத் பாசில் தலைமையில் தன்னிச்சையாக இயங்கும் அமைப்பை துப்பறிய நியமிக்கிறது. எந்த சட்ட திட்டங்களுக்கும் வழக்கமான போலீஸ் நடைமுறைகளுக்கும் உட்படாத பகத் பாசில் டீம் தன்னிச்சைப்படி துப்பறிந்து கமல் உயிரோடு இருப்பதைக் கண்டு பிடிக்கிறது. அதற்கு பின் என்ன ஆனது என்பது நாம் யூகிக்க கூடிய கதைதான்.
தன் தோற்றத்திலோ, வயதிலோ எந்த பாசாங்கும், பகட்டும் வைத்துக்கொள்ளாமல் அறுபத்தி ஏழு வயது முதியவராகவே கமல் இதில் வருகிறார். அந்த வயதிலும் அவர் நடனமாடுகிறார், சண்டை போடுகிறார் என்று நினைக்கவே வியப்பாகவே இருக்கிறது. அவர் வரும் ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் ‘அன்பறிவ் ‘ பறக்கிறது.
மகனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பதற்காக அவர் அப்படி அதிரடியாக நடந்து கொள்கிறார் என்று பார்த்தால் அதற்கு அவர் தரும் சமுதாய நலன் சார்ந்த விளக்கம் அருமை. அவரது பேரக் குழந்தையை வில்லன்கள் கொல்லக்கூடும் என்று பகத் பாசில் தகவல் கொடுத்து அவரை எச்சரிக்கையாக இருக்கச் சொல்ல, “எனக்கு உதவி செய்யரீங்கன்னு தெரிஞ்சா நீங்கதான் எச்சரிக்கையா இருக்கணும்…” என்று பதிலுக்கு சொல்லும் இடம் அசத்தல். அதை இன்றைய அரசியல் நையாண்டியாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.
தானே ஒரு பெரிய ஸ்டாராக இருக்க, தனக்கு ஈடாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிப்பதற்கான இட ஒதுக்கீடு அளித்திருக்கும் கமலின் பெருந்தன்மையும் வியக்கவைக்கிறது. இன்னும் கேட்டால் முன்பாதிப் படம் முழுவதும் பகத் பாசிலே ஆக்கிரமித்து இருக்கிறார்.
கமலுக்கு அடுத்து நம்மை கவர்வது பகத் தான். அந்தக் கண்களில் எப்போது கொடூரம் வரும், எப்போது காதல் வரும், எப்போது அப்பாவித்தனம் வரும் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவில் அத்தனை மாற்றங்களையும் பார்வையிலேயே உணர்த்தி விடுகிறார் பகத். மனைவியை வில்லன் பிடித்து விட்டார் என்று தெரிந்து அவர் சாலையில் ஓடும் இடம் ஹாலிவுட் படம் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது.
எந்தக் கேரக்டர் ஆனாலும் ஏற்று நடிக்க தயங்காத விஜய்சேதுபதிக்கு இதில் போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவனாக கொடூரமான வேடம். தன் தடிமனான உடம்பை அந்த பாத்திரத்தின்
கொடூரம் தெரிவதற்காக அப்படியே வெளிக்காட்டி நடித்திருக்கும் அவரது அர்ப்பணிப்பு அருமை. சட்டை இல்லாமல் அவர் தெருவில் நடந்து வரும் காட்சியில் கொஞ்சம்கூட அசிங்கமோ வெட்கமோ படாமல் அவலட்சணமாக அவர் நடித்திருப்பது அபாரம். அதுவும் போதை மருந்து எடுத்துக் கொண்டு அவர் அடிக்கும் ஒவ்வொரு அடியும் இடி என விழுவதை நம்ப முடிகிறது.
விஜய்க்கு வில்லன் ஆனாலும் சரி கமலுக்கு வில்லன் ஆனாலும் சரி ஒரு இரும்பின் துணைகொண்டு மட்டுமே அவரை வீழ்த்த முடிகிறது என்பது வில்லத்தனத்தின் உச்சம். அவருக்கு மூன்று ஜோடிகள் என்பது ரொம்ப ஓவர். ஒரு போதை சாம்ராஜ்யத்தின் தலைவனாகவும் தாதாவாகவும் இருந்து கொண்டு, அத்தனை பெரிய குடும்பத்தைக் கட்டி மேய்ப்பது காமெடியாகத்தான் இருக்க வேண்டும்.
காயத்ரிக்கு சிறிய வேடம் என்றாலும் பகத் பாசிலின் காதலியாகவும் மனைவியாகவும் வந்து ரசிக்க வைக்கிறார். அவர் விஜய் சேதுபதியின் ஃபேவரிட் நடிகை என்பதால் வில்லன் ஆனாலும் அவர் மடியில் அமர்ந்துகொண்டு நடிக்க சம்மதித்தார் போலிருக்கிறது.
நரேனும் அவருக்குரிய பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்களும் துணைப் பாத்திரங்களும் வந்து போகின்றன. அத்தனை பேரையும் கட்டி ஆண்டு ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது அசுரத்தனமான சாதனைதான். அதில் லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம்.
கமல் வீட்டு பணிப் பெண்ணாக வரும் அந்த நடிகை ஒருகட்டத்தில் வீறுகொண்டு வில்லன் கோஷ்டியை பந்தாடுவது தியேட்டரில் அதகளம் ஏற்படுத்துகிறது. அதற்கு அச்சாரமாக முதல் காட்சியிலேயே கீழே விழும் ‘ கப் ‘பை அவர் லபக்கென்று கேட்ச் பிடிப்பது லாஜிக் சேர்க்கிறது.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து பரிச்சயமாகி விட்டன. பின்னணி இசை அங்கங்கே பொருத்தமாகவும் அங்கங்கே பொருத்தம் இல்லாமலும் ஒலித்தாலும் படம் முழுவதும் இடிமுழங்க உதவியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் ஒளிப்பதிவாளர்கள் என்றால் இரவில் கண்விழிக்க வேண்டி இருக்கும். இந்தப்படத்திலும் பெரும்பாலும் இரவில் படமாக்கியிருப்பது மட்டுமல்லாமல் ஆட்களும் கார்களும் சாரி சாரியாக வந்து கொண்டிருக்க அத்தனை விஷயங்களையும் பிரேமுக்கு கொண்டுவந்து ரசிக்க வைத்திருப்பதில் ஒளிப்பதிவாளர் மிரள வைக்கிறார்.
ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்ற படத்தில் ரொம்பவே மெனக்கெடுகிறார் கமல். அந்த குழந்தை யார் என்பது அடுத்த பாகத்தில் தெரிய வரலாம்.
அத்துடன் இந்த வில்லன்களுக்கெல்லாம் மகா வில்லனாக போதை மருந்து சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக ஒருவரை அடையாளம் காட்டுகிறார்கள். அந்த ஒருவர் சொந்த.வாழ்வில் சுத்தபத்தமாக வாழ்ந்து வரும் சூர்யா தான்.
ஏன் அத்தனை பெரிய போதை மருந்து சாம்ராஜ்யத்தின் தலைவனாக அவரை தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் நாம் அடுத்த பாகத்தில்தான் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
விக்ரம் – வித்தகம்..!
– வேணுஜி