இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘கூகை திரைப்பட இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ’96’ படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், நடிகர்கள் பகவதி பெருமாள், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி,
“இங்கு நிறைய உதவி இயக்குநர்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஒருவரிடத்தில் நீங்கள் கதை சொல்வது மிகவும் முக்கியம். கேட்கும் நபருக்கு புரியாவிட்டாலும் கூட, அவர்களுக்கு புரியும் படியாக நீங்கள் கதை சொல்ல வேண்டும். இந்த “96” திரைப்படத்திற்குள் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவும் வருவதற்குக் காரணம் இயக்குநர் பிரேம் எங்களிடம் கதை சொன்ன விதம் தான். அதே போல நமக்கு ஒரு விசயம் கிடைக்காமல் போனால், அடுத்தவர் மீது பழிபோடுவதைத் தவிர்க்க வேண்டும். நாம் நினைத்ததை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். “செக்கச் சிவந்த வானம்” படத்தில் நடிக்கும் போது, மணி சாரிடம் இந்த பண்பை நான் பார்த்து வியந்தேன்” என்று பேசினார்.
மேலும், இயக்குநர் பா.இரஞ்சித்துடன் எப்போது இணைவீர்கள்? என்ற கேள்விக்கு,
“ரஞ்சித் எனக்கு நல்ல நண்பர். நட்பு வேறு தொழில் வேறு. இருவருக்குமே அதற்கான நேரம் அமைய வேண்டும். அவருடைய “காலா” பார்த்துவிட்டு அன்றே அவரிடம் பேசினேன். அவரால் மட்டும் தான் அப்படி படம் எடுக்க முடியும். அதே போல “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தையும் பார்த்துவிட்டு பாராட்டினேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நானும் ஜாதி ஒழிப்பு பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று பதிலளித்தார்.