September 19, 2024
  • September 19, 2024
Breaking News
August 7, 2024

வீராயி மக்கள் திரைப்பட விமர்சனம்

By 0 227 Views

‘உடன்பிறப்புகளுக்குள் பிரிவு வருவதும் பின்பு அவர்கள் உறவாடுவதும் உலக வழக்கம். ஆனால் பிரிந்த உறவுகளைச் சேர்ப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல..!’ என்பதை மண் மணத்தோடு இன்னொரு முறை சொல்லி நம்மை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா.

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் நந்தாவே படத்தின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு ஹீரோவுக்குரிய அறிமுகம் ஆட்டம், பாட்டு என்றெல்லாம் இல்லாமல் சராசரி குடும்ப உறுப்பினராக அவர் வருவது இயல்பாக இருக்கிறது.

அறந்தாங்கியில் நடக்கிற கதையில் வேல.ராமமூர்த்தியும், மாரிமுத்துவும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகளாக இருந்தாலும்  பகை பூண்டு நாளொரு சண்டையும் பொழுதொரு வம்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இருவரின் பிள்ளைகளுக்கும் எந்த உறவும் இல்லாமல் அவர்களும் விரோதிகளைப் போல பகைமை பாராட்டி வர, மூத்தவர் வேல ராமமூர்த்தியின் இளைய மகனாக வரும் சுரேஷ் நந்தா தலையெடுத்து இந்தப் பிரச்சனைகளை எல்லாம் எப்படி தீர்த்து உறவுகளை மீண்டும் மலரச் செய்கிறார் என்பதுதான் கதை.

வேல ராமமூர்த்தி வழக்கம் போன்ற மிடுக்குடன் கோபப் பார்வையில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறார். எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் அவர்தான் என்று சுரேஷ் நந்தா நினைப்பது போலவே நாமும் நினைத்தாலும் அப்படி அல்ல என்பது பின் பாதியில் புரிகிறது.

அசால்டான நடிப்புக்கு சொந்தக்காரரான மாரிமுத்துவைப் பார்க்கும் போது இப்படி ஒரு இயல்பான நடிகரை இழந்து விட்டதற்காக வருத்தப்பட வேண்டி இருக்கிறது. 

நடித்துக் கொட்டி விட வேண்டும் என்றெல்லாம் ஆர்வப்படாமல் இயல்பாக நடித்திருப்பது நாயகன் சுரேஷ் நந்தாவுக்கு நேர்மறை பலனைத் தந்திருக்கிறது.

நண்பனின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க பக்கத்து ஊருக்கு செல்லும் போது தனக்கு ஒரு அத்தை இருப்பது அவருக்குத் தெரிய வர, அந்த கனத்துடனே தன் வீட்டுக்கு வந்து ஒவ்வொருவரையும் அவர் எதிர்கொள்வது சிறந்த நடிப்புக்கு சான்று.

அத்தை மகளைப் பார்த்த கணத்திலேயே அவளைக் கைப் பிடித்து விட வேண்டும் என்று காதலிக்கத் தொடங்குவதும் அவள் படிக்கும் பள்ளிக்குக் காவடி எடுப்பதுமாக காதலிலும் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார். சித்தப்பாவின் மகனைக் கொல்ல தன் தம்பியே கொலையாளிகளை வாடகைக்கு அமர்த்தினாலும் அத்தனை பேரையும் தூக்கிப் போட்டு மிதித்து இருவருக்கும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளும் போது பாசத்திலும் சிறந்து விளங்குகிறார் சுரேஷ் நந்தா. 

அவருக்கு ஏற்ற ஜோடியாக தெரிகிறார் நந்தனா. கதைப்படி அவர் எட்டாவது படிக்கிறார் என்றாலும் அவரது பாட்டியின் கூற்றுப்படி மூன்றாவது வருடமாக எட்டாவது வகுப்பை படிப்பதால் பருவம் சரியாகத்தான் இருக்கிறது என்பது புரிகிறது. 

கதாநாயகிக்கு உரிய எந்த பாசாங்கும் இல்லாமல் நந்தனாவும் இயல்பாகவே தெரிவது அந்த பாத்திரத்துக்கு பலம் சேர்க்கிறது.

சுரேஷ் நந்தாவின் அத்தையாக வரும் தீபா ஷங்கர் நடிப்பு குறித்து சொல்ல வேண்டியதில்லை. அண்ணனின் பாசத்துக்காக எங்கும் அவரைப் பார்க்க பாவமாக இருக்கிறது.

மாரிமுத்துவின் மனைவியாக வரும் செந்தியின் வாயை அடக்கவே முடியாது என்பது புரிகிறது. வேல ராமமூர்த்தியின் மனைவியாக வரும் ரமா வழக்கம் போல் அதீத மேக்கப் போட்டுக் கொண்டு இயல்புக்கு அந்நியமாகத் தெரிகிறார்.

பிற பாத்திரங்களை ஏற்று நடித்திருப்பவர்களும் இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் தீபன் சக்கரவர்த்தியின் இசைதான். மண் மணம் மாறாமல் அங்கங்கே இசைஞானியை நினைக்க வைக்கும் அவரே படத்தின் உணர்ச்சியை அருமையாகக் கடத்தி இருக்கிறார்.

எம். சீனிவாசனின் ஒளிப்பதிவும் நன்று. இயக்குனர் நாகராஜ் கருப்பையாவின் கைகோர்த்து இந்த கூட்டணி நாம் இழந்து போன வாழ்க்கையை கண்முன் கொண்டு வருவதில் மிகப்பெரிய உழைப்பைைக் கொட்டி இருக்கிறது.

கோர்வையாக இல்லாமல் துண்டு துண்டாக காட்சிகள் வருவது மட்டும்தான் குறை. குடும்பம் பிரிவதற்கும் ஒன்று கூடுவதற்கும் வலுவான காரணங்கள் படத்தில் இல்லை. 

இதையெல்லாம் சரி செய்திருந்தால் ஒரு பாரதிராஜா படத்தைப் பார்த்த நிறைவு ஏற்பட்டிருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. 

ஆனாலும் மனித உறவுகளின் மனங்களை உரசிப் பார்ப்பதில் இந்தப் படம் கவனிக்க வைத்திருக்கிறது. 

எல்லோருக்கும் கிடைத்திருப்பது ஒற்றைப் பிறப்புதான். அந்த பிறப்பில் சகோதரர்களுக்குள் எந்தப் பிரிவினையும் வைத்துக்கொள்ளாமல் ஒற்றுமையாக வாழ்ந்து விடுவதே சிறப்பு என்ற உயரிய கருத்தைச் சொல்லி இருப்பதைப் பாராட்டலாம்.

வீராயி மக்கள் – பாசப் போராட்டம்..!