ஒரு வெளிநாட்டுக்காரரிடம் நம்ம ஊர் ஃபுல் மீல்ஸை வைத்தால் அவர் எப்படி சாப்பிடுவார்..? ரசத்தை முதலில் ஊற்றி சாப்பிட்டு விட்டு பிறகு மோர்சாதம், சாம்பார் சாதம் என்று சாப்பிடக்கூடும் இல்லையா..? அப்படிதான் ஆகிறது நம்ம ஊருக்குக் கதை எழுதும்போது ஹாலிவுட் ஸ்டைலில் திரைக்கதை எழுதினால்.
அப்படி நியூயார்க் பிலிம் அகாடமியில் பயின்று அமெரிக்கப் படங்கள் போல புதுமாதிரி கதை சொல்லலில் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா.
எங்கோ ஆரம்பிக்கிற கதையில் நாயகன் சிபி புவனசந்திரன், எரிகின்ற காருக்குள் இருந்து தப்பித்துப் போகிறான். வளர்ந்து வரும் டவுன்ஷிப்பில் சாந்தினி கொலை செய்யப்பட்டுக் கிடக்க, போலீஸ் ஒருபக்கமும், பத்திரிகையாளர்கள் இருவர் ஒருபக்கமுமாக இந்தக் கேஸை பார்க்க, எதிர்வீட்டிலிருக்கும் நாயகன் சிபி, சாந்தினியின் கணவர் ஜெயப்பிரகாஷ் இவர்கள் மீது சந்தேகப் பார்வை படிகிறது. இதில் ஜெயப்பிரகாஷுடன் சம்பந்தப்பட்ட கேங்க்ஸ்டர் குரு சோமசுந்தரம் வெளியே வர, அவரை வைத்து போதைமருந்துக் கும்பலின் முகம் தெரியாத தலைவனைப் பிடிக்க நினைக்கிறார்கள் பத்திரிகையாளர்களான விசாகன் சூலூர் வணங்காமுடியும், அனிஷா ஆம்புரூஸும்.
ஏதாவது புரிகிறதா..? அது அவர்களுக்கே புரியாமல்தான் இரண்டு மணிநேரம், 50 நிமிடங்கள் நம்மை வாணலியில் போட்டுப் புரட்டி வறுக்கிறார்கள்.
படத்தின் வியக்க வைக்கும் அம்சம் ஒரு சில முகங்கள் தவிர எல்லோருமே புதுமுகங்களாக இருந்தும் நேர்த்தியான நடிப்பைத் தந்திருப்பது – அல்லது இயக்குநர் அவர்களை சரியாக வேலை வாங்கியிருப்பது.
அவர்களில் மையப்பாத்திரம் ஏற்றிருக்கும் குரு சோமசுந்தரம் மிரட்டாமல் பயமுறுத்துகிறார். இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க துணிவு வேண்டும். வாலிப வயதில் சக மாணவர்களால் பரிகசிக்கப்படும் தாழ்வு மனப்பான்மை கொண்ட பாத்திரத்தில் பாதி மறை கழன்றவராகவும், சைக்கோவாகவும் வேறு பரிமாணத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
அவரை அடுத்து புதுமுகம் சிபியும், சாந்தினியும் கவர்கிறார்கள். அவர்களுக்கிடையேயான கள்ளக்காதலில் ஒரு நியாயமான காதலும் இருப்பது நெகிழ்வாகவும் இருக்கிறது.
கொலை, போதை மருந்து கும்பல் சம்பந்தப்பட்ட கேஸில் நம்ம ஊரில் பத்திரிகையாளர்கள் இவ்வளவு புலன் விசாரணையில் இறங்க முடியுமா, அதற்கு போலீஸும் ஒத்துழைக்குமா..? அதுவும் ஹாலிவுட் ஸ்டைல்..?
குரு சோமசுந்தரத்துக்கும், ஜான் விஜய்க்குமான ‘ரிவஞ்ச்’சில் பல உயிர்கள் சர்வசாதாரணமாக பலியாவது சோகம்.
சாம் சி.எஸ்ஸின் இசையும் புதுமாதிரியாக இருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே புதிய அனுபவத்தைத் தருவதை மறுப்பதற்கில்லை.
குரு சோமசுந்தரத்தின் உண்மைச் சொரூபங்கள் தெரிய வரும் இரண்டு கட்டங்கள் படத்தில் எதிர்பாராத சுவாரஸ்யத்தைத் தருகின்றன. ஆனால், இப்படியான சுவாரஸ்யத்துக்காக இரண்டே முக்கால் மணிநேரம் நாம் தியேட்டரின் இருக்கையைப் படுக்கையாக மாற்ற வேண்டியிருப்பது ‘டூ மச்’ கொடுமை.
இந்தப் படத்தின் மையப்புள்ளியைத் தொட்டு சமீபத்தில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்திருப்பது படத்துக்கு எப்படியும் உதவப் போவதில்லை என்பதும் சோகம்தான்.
வஞ்சகர் உலகம் – ரசிகனை விட்டு விலகி நிற்கும் புதுமைகளும் ஒரு விதத்தில் ‘வஞ்சகமே..!’