தலைப்பே நம்மை பெரிதாக ஈர்க்க அத்துடன் நாகேஷின் பேரன் (ஆனந்தபாபுவின் மூத்த மகன்) பிஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதுடன் சூப்பர் சிங்கர் வர்ஷா அவருடன் நடிக்கும் படம் என்பதாலும் நிறைய எதிர்பார்ப்புகளைச் சுமந்து இருக்கிறது இந்த படம்.
ஆஞ்சநேயர் வேடம் அணிந்து அருளாசி தருவதையே தங்கள் வாழ்வியலாக கொண்டு வாழும் சிலரை பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு வானரனாக அறிமுகமாகிறார் இந்த பட நாயகன் பிஜேஷ் நாகேஷ்.
அப்பாவியாக இருக்கும் அவரது ஒரே நோக்கம் தன்னுடைய ஐந்து வயது மகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதுதான். அவளைத் தவிர அவருக்கு இவ்வுலகில் வேறு எந்த சொந்தமும் இல்லை.
தண்டைப் போலவே கலைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த நாயகி அக்ஷயா பலராலும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான நிலையில் அவரை காதல் மனைவியாக கரம் பிடித்து ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகிறார். ஆனால் பிரசவத்திலேயே அக்ஷயா இறந்து போக இப்போது இருக்கும் ஒரே சொந்தம் ஐந்து வயது மகள் வர்ஷா மட்டும்தான்.
அந்த ஒரே உறவையும் காலம் பறித்துக் கொண்டு போக ஒரு சந்தர்ப்பம் வர மகளை மீட்டு எடுத்தாரா பிஜேஷ் என்பதுதான் மீதிக் கதை.
இந்தப் படத்துக்காகவே படைக்கப்பட்டாரோ அல்லது அவருக்காகவே இந்த வேடம் படைக்கப்பட்டதோ என்கிற அளவில் வானரன் வேடத்திறகு 100% பொருத்தமாக இருக்கிறார் பிஜேஷ் நாகேஷ்.
அந்த அப்பாவித்தனமான பார்வையும் அப்பழுக்கில்லாத அன்பும், “இனிமேல் நல்லவனாக இருக்க மாட்டேன்..!” என்று சொல்லும்போது அதைக் கெட்டவனாக சொல்லக்கூட தெரியாத அளவுக்கு அக்மார்க் நல்லவனாக இருக்கிறார் பிஜேஷ்.
அவருக்கேற்ற ஜோடியாக அக்ஷயாவும் பொருத்தமாக இருக்கிறார். ஆனால் அவர்களது காதல் வாழ்க்கை ஈசல் வாழ்க்கையாக முடிவதுதான் பரிதாபம்..!
சூப்பர் சிங்கர் புகழ் பேபி வர்ஷாவை திரையில் இருந்து அப்படியே எடுத்து கொஞ்சலாம் போல் இருக்கிறது. “டாக்டர் ஆகி உனக்கு ஊசி போட போகிறேன்…” என்று அந்த மழலை சொல்லும்போது நாம் எத்தனை ஊசி வேண்டுமானாலும் அவளிடம் போட்டுக் கொள்ளலாம் போல் தான் இருக்கிறது.
அந்தத் துள்ளலான நடிப்பும் மழலை பேச்சும் எவர் மனதையும் கவர்ந்து விடும். ஆனால் அவருக்கு நேரும் பாதிப்புதான் பரிதாபம்.
கிளைமாக்ஸில் மட்டும் வரும் ஆதேஷ் பாலா நெகிழ வைத்து விடுகிறார்.
ஒவ்வொரு காட்சியில் மட்டும் வந்தாலும் லொள்ளு சபா ஜீவாவும், தீபா சஙகரும் அடையாளம் தெரிகிறார்கள்.
இவர்களுடன் நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன் நடித்திருக்கிறார்கள்.
அந்த நாமக்கல் விஜயகாந்த் அப்படியே கேப்டன் வேடத்திலும் குரலிலும் அசத்துகிறார். அவருடன் ஜூனியர் டி.ஆரின் அலப்பறையம் இருக்கிறது.
நிரன் சந்தர் ஒளிப்பதிவு பட்ஜெட்டிலும் பளிச்சென்று இருக்கிறது. ஷாஜகான் இசையில் பாடல்களும் அப்படியே..!
ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
சிறிய முதலீட்டில் சீரிய முயற்சி என்கிற அளவில் இந்தப் படத்தை பாராட்ட முடியும். ஆனால் லாஜிக் குறைபாடுகளை அவரால் நிச்சயம் தவிர்த்து இருக்க முடியும்.
குறிப்பாக நாமக்கல் விஜயகாந்த் ஒரு நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டு பிஜேஷிடம் நான்கு லட்சம் பணம் தருவதாக வாக்களிக்கிறார். பிறகு அந்தப் பணம் பற்றி படத்தில் பேச்சு இல்லை. அதேபோல் களவு போன அவரது நான்கு லட்சத்தை திருடன் இடமிருந்து மீட்டு விட்டதாக போலீஸ் சொல்கிறது. ஆனால் பிஜேஷ் அங்கே போனவுடன்தான் திருடன் பையில் இருக்கும் பணத்தையே போலீசார் பார்க்கிறார்கள்.
இதையெல்லாம் ஸ்கிரிப்ட் அளவில்லையே சரிபார்த்து படப்பிடிப்புக்கு போயிருக்க முடியும்.
இதையெல்லாம் தாண்டி ஒரு சிறுகதை படித்த உணர்வை தருகிறது இந்தப் படம்.
வானரன் – (மனிதத்தில்) வாவ்… நரன்..!
– வேணுஜி