அமீர் நாயகனாகும் படம் – அத்துடன் ‘உயிர் தமிழுக்கு’ என்பதுதான் டைட்டில் என்றதும் தமிழ் மொழிக்காக அமீர் உயிரைக் கொடுக்கும் கதை என்றெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
உண்மையில் தமிழ் என்பது நாயகி சாந்தினி ஸ்ரீதரனின் பெயர். அவரைக் கண்டதும் காதல் கொண்ட கேபிள் டிவி ஆபரேட்டர் அமீருக்கு என்ன விலை கொடுத்தாவது சாந்தினியின் காதலைப் பெறுவது லட்சியமாகிறது.
சாந்தினி ஸ்ரீதரன் இயல்பிலேயே (தமிழ்) நாடறிந்த அரசியல்வாதி ஆனந்தராஜின் மகளாக இருப்பதுடன் அப்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இருப்பதால் அவரது கவனத்தைக் கவர அவரது பக்கத்து வார்டில் தானும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் அமீர். அப்படி சாந்தினியின் காதலைப் பெற அவர் தேர்ந்தெடுக்கும் குறுக்கு வழிதான் அரசியல்.
ஆனால், அரசியலே கனிகிற அளவில் காதல் அவ்வளவு எளிதில் கனிகிற விஷயமா என்ன..? அதற்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட ஒரு கட்டத்தில் அமீர் மீது சாந்தினிக்குத் தீர்க்கவே முடியாத கோபம் எழ முடிவு என்ன ஆனது என்பதுதான் கிளைமாக்ஸ்.
அமீரின் இமேஜ்க்கு முற்றிலும் புதிதான வேடம் இதில் அவருக்கு. கிட்டத்தட்ட சத்யராஜ் ஏற்கத் தோதான வேடம். ஆனால் அல்வா மன்னனான சத்யராஜுக்கு அப்படிப் பட்ட வேடம் பொருத்தமானதுதான். ஆனால், அமீரின் இமேஜ் அப்படிப்பட்டதல்ல.
இருந்தாலும் ஆரம்பத்தில் தடுமாறி பின்னர் சுதாரித்து அந்த வேடத்தில் நாம் ஐக்கியம் ஆகிறோம். அமாவாசை போன்றெல்லாம் கீழ் இருந்து மேலே எறி வராமல் பூரண சந்திர பௌர்ணமியாகவே அமீர் பளப்பளவென்று உயரத்துக்கு போய்க் கொண்டே இருக்கிறார்.
இதில் எம்ஜிஆரின் ரசிகராக வேறு வருகிறார் அவர்.
தமிழ் என்று வந்துவிடும் இடங்களில் எல்லாம் அதைக் காதலியாக உருவகப்படுத்தி தமிழில் பொளந்து கட்டும் அமீரைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அதில் ரசிக்கவும் வைத்திருக்கிறது அவரது நடிப்பு.
தமிழில் அவர் பொளந்து கட்டும் போதெல்லாம் உடன் இருக்கும் அல்லக்கையான இமான் அண்ணாச்சி திடுக்கிட்டுப் போவதும் அமீரின் அந்த அற்புத தமிழுக்குக் காரணம் பின்புலத்தில் நின்று வசனங்களாக எழுதிக் கொடுககும் தமிழாசிரியர்தான் என்று அறிந்து பொருமுவதுமாக ஏக லக… லக..!
அமீரால் முன்மொழியப்படும் அழகியாக சாந்தினி ஸ்ரீதரன் இருப்பதை நாம் வழிமொழிந்துதான் ஆக வேண்டும்.
இந்தப் படம் கிடைத்த சந்தோஷத்தாலோ என்னவோ பாதிப் படம் வரை ஸ்லிம்மாக இருப்பவர் அதன் பின் கும்மென்று பூரித்திருக்கிறார்.
ஆனந்த ராஜ் நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. அவருக்கு மட்டும் யார் வசனம் எழுதினாலும் அவரது மாடுலேஷனில் பேசக் கேட்கும் போது நம்மால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால், அவர் பிணமாகும் போது நமக்கே பகீர் எனறு இருக்கிறது
இமான் அண்ணாச்சி, ராஜ் கபூர், மாரிமுத்து, சரவண சக்தி, கஞ்சா கருப்பு என்று படத்தில் வரும் அனைத்து அரசியல்வாதிகளுமே கலகலப்பு பேர் வழிகளாக இருக்க படம் முழுவதும் ஒரே ரகளைதான்.
வித்யாசாகரின் பின்னணி இசை விறுவிறுப்பாக இருக்கிறது. பாடல்களுக்கான இசையில் அவரது சிக்னேச்சர் மிஸ்ஸிங்.
இந்த மீடியம் பட்ஜெட் படத்தை பிரம்மாண்டமாக காட்டி இருப்பதில் தேவராஜின் ஒளிப்பதிவு முக்கியத்துவம் வகிக்கிறது.
காட்சிகளிலும் வசனங்களிலும் சமகால அரசியலைக் கலந்து கலகலப்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா. அதுவும் பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டு இருப்பதும், ஆனால் அவற்றை நாம் சரியாக கணித்து சிரிக்க முடிவதும் நல்ல காமெடி கெமிஸ்ட்ரி.
எம்ஜிஆர் இமேஜை சினிமாவில் பயன்படுத்துவதெல்லாம் சத்யராஜ் காலத்தோடு முடிந்து போக, இன்னும் ஏன் அமீர் அதைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.
ஆனாலும் படம் முழுக்க அமீரே நிறைந்து, தன் சீரியஸ் முகத்தின் மேலே ஒரு காமெடி முகமூடியை இதில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
அதைப் பார்த்து நாம் சிரிக்க முடிவது அவருக்கு நடிப்பில் கிடைத்திருக்கும் வெற்றி.
உயிர் தமிழுக்கு – உணர்வோ காதலுக்கு..!
– வேணுஜி