இந்த நாகரிக உலகில்கூட இன்னும் தமிழ்நாட்டளவில் விரவிக் கிடக்கும் சாதீய உணர்வுகளையும், அதன் காரணமாக காதலில் விளையும் ஆணவப் படுகொலைகளையும் அப்பட்டமாக சுட்டிக் காட்டும் படம்.
அதிலும் நாம் சமீப காலங்களில் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஆணவக் கொலைக்கு ஆளான காதல்களைக் கோர்த்து ஒரு திரைக்கதையை எழுதி பரபரப்பாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ்.
நாயகனுக்கு ‘சங்கர்’ எனவும், நாயகிக்கு ‘திவ்யா’ எனவும் பெயர் வைத்திருப்பதிலும், முதல் காட்சியில் இதயத் துடிப்பு எகிற நாம் சமீபத்தில் பார்த்து பதைபதைத்த ஆணவப் படுகொலைக் காட்சியை ஒத்த முதல் காட்சியை பிரேமில் வைத்தும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் அவர்.
சமத்துவபுரவாசியாக நாயகன் பிருத்விராஜ், சாதிச்சங்க பிரமுகரின் தங்கையாக நாயகி வீணா. போதாதா..? முதல் காட்சியில் கொலை முயற்சியைப் பார்த்து விட்டதாலும், வீணா அண்ணனின் பின்னணியில் இருக்கும் சாதிச் சங்க நிகழ்வுகளைக் காட்டிவிடுவதாலும் காதலர்கள் இருவரும் சேரும் காட்சியில் எல்லாம் அடுத்து நடக்கப்போவதை நாம் நினைத்துப் பதற வைக்கிறது.
பிருத்விராஜ் நிறையவே தேறியிருக்கிறார். அவர் இயல்பாக இருந்தாலே இதைப்போன்ற விடலைக்கு அடுத்த பருவ இளைஞனின் நடவடிக்கைகளுக்கு அது பொருத்தமாக அமைந்து விடுகிறது.
வீணாவுக்கும் அவரது இளமையே கூடுதல் அழகைத் தருகிறது. அந்த இளமையும், அழகும் சேர்ந்து அவர் என்ன நடிததாலும் அதை நியாயப்படுத்தி விடுகிறது.
வில்லனாகவும், நாயகியின் அண்ணனாகவும் வரும் எம்.எஸ்.குமார் புதுமுகம் என்றாலும் பல படங்களில் நடித்துப் பண்பட்டவர் போல் காட்சிகளில் தெரிகிறார். சாதிவெறி பிடித்தவராக நடந்து கொண்டாலும் தங்கை மேலுள்ள பாசத்தில் தோற்றுவிடும் அண்ணனாக மிளிர்கிறார். ‘சம்பத்ராஜ்’, ‘ஆடுகளம் நரேன்’ ஏற்பதைப் போன்ற குணச்சித்திர வேடங்களில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
அமைதியாக அறிமுகம் ஆகி ஆவேசமாக முடியும் பாத்திரத்தில் வீணாவின் அண்ணியாக வரும் சூசன் மிரட்டுகிறார்.
இப்படி விரட்டி வேட்டையாடப்படும் காதலர்களுக்கு அடைக்கலம் தருவதாக நம்பவைக்கும் இடைத்தரகர்களையும் விட்டுவைக்கவில்லை இயக்குநர். அந்த வேடத்தில் வரும் ஏ.வெங்கடேஷ் வில்லனை விடவும் பயமுறுத்துகிறார். அவர் பணத்தாசையுடன் நிறுத்தியிருந்தால் இன்னும் வலுவாக இருந்திருக்கும். வீணாவின் மீதும் ஆசை வைப்பது கதையோட்டத்தில் நெருடல்.
உத்தமராசா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அதை இயல்பாகப் படமாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
காதலில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம். நாயகன் கல்லூரி மாணவராக இருக்க, நண்பர்களாக வருபவர்கள் படிக்காத வெட்டிகளாக வருவது காமெடிக்காக இருப்பதால், அதில் நம்பகத்தன்மை குறைவாக இருக்கிறது. காமெடிக் காட்சிகள் இன்னும் வலுவாக இருந்திருந்தால் கதையோட்டம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
புதிய முயற்சியாளர்கள் இதுபோல் நல்ல சமூகக் கருத்துகளுடன் களமிறங்கினால் தங்களை வளப்படுத்திக் கொள்ளவும், நல்ல சினிமாவுக்குப் பங்களிப்பாகவும் அமையும். அந்த வகையில்…
தொட்ரா – படைத்தவர்கள் பெருமை கொள்ளத்தக்க பதிவு..!