நம்மில் பலருக்கும் அரசு மருத்துவமனைகள் குறித்த மனக்கசப்புகள் உண்டு. எப்போதாவது அங்கு போக நேரும் போது மருத்துவமனை ஊழியர்கள் சுயலாபத்துக்காக செய்யும் சில விஷயங்கள் நம்மை எரிச்சல் ஊட்டுவது வாடிக்கைதான்.
அதிலும் இந்தப் படத்தில் ஒரு படி மேலே போய் அப்படி சுயலாபத்துக்காக செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கொலை செய்வது வரை போகிறார்கள் என்கிற ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரிஷ்.
செவித்திறன் பேச்சுத்திறனில் மாற்றுத் திறனாளியாக இருக்கும் அருள்நிதி பாசமான அப்பா பாரதிராஜாவுடனும் பல உறவுகள் கொண்ட குடும்பத்துடனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். சொந்த அக்கா மகள் ஆத்மிகாவையே திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் அவரை காதலித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விபத்தில் பாரதிராஜா சிக்கிவிட அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் அரசு பொது மருத்துவமனையில் முகாம் இடுகிறது.
அங்கே மேற்படி சமூக விரோத செயல்களைச் செய்யும் பணியாளர்கள் நால்வரிடம் எதிர்பாராத விதமாக அருள்நிதி பகைத்துக் கொள்ள நேர ஏற்கனவே கொலை பாதகர்களான அவர்கள், அருள்நிதி குடும்பத்திற்கு என்ன விதமான தொல்லைகளைக் கொடுத்தார்கள் – அதிலிருந்து மாற்றுத்திறனாளியான அருள்நிதியால் மீள முடிந்ததா என்பதுதான் கதை.
ஏற்கனவே பிருந்தாவனம் படத்தில் அருள்நிதி ஏற்றிருந்த பாத்திரம்தான் இது. ஆனால் இந்தப் படத்தில் அதுவே கதைக்கு அடிநாதமாக இல்லாமல் இப்படி ஒரு ஹீரோ என்ற அளவில் மட்டும் உதவுகிறது. மற்றபடி வில்லன்களிடம் ஒரு ஹீரோ எதையெல்லாம் சந்திப்பாரோ அதை எல்லாம் சந்திக்கிறார் அருள்நிதி.
பாரதிராஜாவுக்கும் எளிதாக ஊதித் தள்ளக் கூடிய பாத்திரம்தான். ஆனால் அப்பாவுக்கும் மகனுக்குமான அன்புதான் கதை எனும் போது அவர்கள் எப்படி அன்பால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான காட்சிகள் எதுவும் வலுவாக இல்லை.
அருள் நிதியைக் காதலிக்கும் ஆத்மிகாவுக்கு முதல் பாதிப் படத்தில் மட்டுமே வேலை இருக்கிறது இரண்டாவது பாதியில் அவரைப் பார்க்கவே முடியவில்லை.
அந்த நான்கு வில்லன்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. அதுதான் படத்தின் பலமும் கூட. அதிலும் லிஃப்ட் ஆபரேட்டராக மனோபாலா திடத்தில் வரும் அஸ்ரஃப் நம்மை ரொம்பவே மிரட்டி விடுகிறார்.
அவருடன் வரும் ஜீவா, மகேந்திரன், ஹரீஷ் மூவரும் கூட அவரவர் வழியில் மிரட்டுகிறார்கள். ஆனால் அவர்களின் நோக்கம்தான் என்ன என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு பெண்ணையும் அவர்கள் பார்க்கும் காமப் பார்வை அச்சுறுத்துகிறது ஆனால் படம் முழுவதும் எந்தப் பெண்ணையும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கவில்லை (என்பது ஆறுதல்). மாறாக அவர்களிடம் உரசினால் கொலை செய்து விடுகிறார்கள்.
அதுவும் அதற்கென்று ஒரு ஊசி மருந்தை வைத்துக் கொண்டு வேண்டாதவர்கள் அத்தனை பேரையும் அந்த ஊசியை போட்டு கொல்வது – அதுவும் பொது மருத்துவமனையில் எனும் போது அபாயகரமான விஷயமாக இருக்கிறது.
ரொம்பவும் லாஜிக் பார்க்காமல் படத்தைப் பார்த்தால், ஒரு ஃபேமிலி திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறது படம் என்பது உண்மை
அதுவும் மேற்படி மரண ஊசி பாரதிராஜாவுக்கு செலுத்தப்படும் போது நாம் ரொம்பவே பதறிப் போய் விடுகிறோம். பாரதிராஜாவும் வயிற்று வலியால் துடிக்க மருத்துவர்களோ சர்வ சாதாரணமாக “சாப்பிடாமல் மாத்திரை போட்டால் இப்படித்தான்…” என்று கடந்து போகும் போது நமக்கு மிகவும் பதற்றமாக இருக்கிறது.
ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் இருந்து அவராகவே வெளியேறி ஒரு பேருந்து நிறுத்தத்தில் படுத்துக்கொண்டு அருள்நிதியிடம், “நாம வீட்டுக்கே போயிடலாம் பா..!” என்று கெஞ்சும் போது ஒரு குழந்தையைப் போன்ற பரிதாபம் அவர் மேல் நமக்கு ஏற்படுகிறது.
ஏழை மக்கள் பெரிதும் நம்பி இருக்கும் அரசு மருத்துவமனை பற்றிய ஒரு பயத்தை படம் ஏற்படுத்துகிறது. அதைத் தவிர்த்து இதை ஒரு தனியார் மருத்துவமனையாக சித்தரித்து இருந்தால் அந்த பயத்தைப் போக்கியிருக்கலாம்.
சாம் சி.எஸ் இன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. படத்தின் கதையை விட அவரது பின்னணி இசை தான் அதிகமாக மிரட்டுகிறது. ஒளிப்பதிவாளர் மருத்துவமனை முழுவதும் ஒரு சுற்று சுற்றி வந்திருக்கிறார்.
படத்தின் ஆகப்பெரிய பலம் சண்டை காட்சிகள் ஒவ்வொரு சண்டையும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு அருமையாக சண்டை போடும் அருள்நிதி முழுக்க ஒரு ஆக்ஷன் கதையில் நடித்தால் அவருக்கு இன்னும் பெயர் கிடைக்கும்.
திருவின் குரல் – தந்தையைக் காத்த தனயன்..!