சமீபத்திய ட்ரெண்டான ஒன்றுக்கு மேற்பட்ட கொலைகளும் அது தொடர்பான விசாரணையும், உண்மை தெரியும்போது நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சியும்தான் இந்தப் படத்திலும் கதை.
மாஸ்க் அணிந்த நபரால் எழுத்தாளர் ஒருவர் கொலை செய்யப்பட, விசாரணை அதிகாரி அர்ஜுன் அது பற்றி துப்பு துலக்குகிறார்.
நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஆசிரியையாக வருகிறார். அவருக்கும் பிரவீன் ராஜாவுக்கும் ஏற்படும் தொடர்பு அவர்களைக் காதலில் தள்ளுகிறது.
மேற்படி வேறுபட்டுச் செல்லும் இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு பிரவீன் ராஜா குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் நிகழ்ந்த சிறப்புத் திறன் கொண்ட சிறுமியின் மரணத்தால் ஏற்படுகிறது.
அதன் பிறகு பரபரவென்று நிகழும் திரைக்கதை கொலையாளி யார், கொலைகளுக்கான காரணம் என்ன என்பதையெல்லாம் விளக்குகிறது.
எத்தனை வயதானாலும் அர்ஜுனின் கம்பீரம் மட்டும் குறையவில்லை. உடற்கட்டையும் பேணி வளர்க்கும் அவரது சண்டையின் வேகமும் குறைவில்லை. ஆக்ஷன் கிங் என்கிற பட்டம் அவரைத் தவிர வேறு யாருக்கும் பொருத்தமானதல்ல.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார். சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளிடம் அவர் காட்டும் அன்பு நெகிழ வைக்கிறது.
சிறப்புத் திறன் கொண்ட சிறுமியாக நடித்திருக்கும் அனிகாவின் நடிப்பு அபாரம். அவரை அப்படி நடிக்க வைத்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள்.
நாயகியின் காதலராக இருப்பதாலேயே அவர் நாயகனாகி விட மாட்டார் என்பதற்கு பிரவீன் ராஜா ஒரு உதாரணம்.
இவர்களுடன் நடித்திருக்கும் லோகு.என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் உள்ளிட்டோர் கதையை நகர்த்திச் செல்ல உதவுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு கண்ணுக்குத் தெரியாத நாயகனாகி இருக்கிறார். இந்த பரபரப்பான திரில்லருக்கு இவரது பங்களிப்பு பேருதவி புரிகிறது.
இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நயம்.
எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் லக்ஷ்மணன் விறுவிறுப்பான ஒரு திரில்லரை கொடுத்திருப்பது நிஜம். ஆனால் சிறப்புத் திறன் கொண்ட சிறுமி தன்னால் முடிந்த அளவில் தன் பிரச்சனையை எடுத்துச் சொல்லியும் அவளது தாயாரும் சரி, ஆசிரியை ஐஸ்வர்யா ராஜேசும் சரி அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்பது மிகப்பெரிய சறுக்கல். படம் பார்க்கும் நமக்கே அது புரிந்து விடுகிறது.
அத்துடன் அவளை பரிசோதிக்கும் மருத்துவர் கூட எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதைவிட சறுக்கல்.
இதையெல்லாம் கவனித்து சரி பண்ணி இருந்தால் இந்த படம் முழுமையாக ரசிக்கப் பட்டிருக்கும்.
தீயவர் குலை நடுங்க – கையில் சட்டத்தை எடுங்க..!
– வேணுஜி