பயணியர் தங்கும் விடுதியில் இருக்கும் ஒரு படுக்கை எத்தனை பேரை… அவர்களின் எத்தனை உணர்ச்சிகளைப் பார்த்திருக்கும்..? அப்படி ஊட்டியில் இருக்கும் ஒரு விடுதியில் இருக்கும் Bed, தான் பார்த்த கதைகளிலேயே ஒரு சுவாரசியமான கதையை சொல்கிறது.
அதன்படி ஸ்ரீகாந்த் ப்ளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் என நான்கு நண்பர்கள் வார விடுமுறைகளை ‘ குடி’யும் கும்மாளமுமாக கழிக்கிறார்கள். எப்போதும் இப்படியே வார இறுதிகள் கழிவதை மாற்ற நினைத்து ஒரு பாலியல் தொழிலாளியை அழைத்துக் கொண்டு ஏன் ஊட்டிக்கு போகக்கூடாது என்று திட்டமிட்டு அதன்படியே சிருஷ்டி டாங்கே’வை அழைத்துப் போகின்றனர்.
போன இடத்தில் இரண்டு இரவுகள் எதுவும் நடக்காமல் குடியினால் விரயமாக, மூன்றாவது நாள் காலை சிருஷ்டி டாங்கேவும் நால்வரில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். எனவே போலிஸ் தலையிட அதன் பிறகு என்ன ஆனது என்பது மீதிக் கதை.
ஸ்ரீகாந்துக்கு இலகுவான வேடம். நான்கு இளைஞர்களில் அவரை மட்டுமே ஐடி துறையில் வேலை பார்ப்பவர் என்று நம்மால் நம்ப முடிகிறது. அவர் ஒரு ஹீரோ என்பதால் அவருக்கு என்று தனி அறிமுகம் மற்றும் சண்டைக் காட்சிகளை இணைத்துத் தருகிறார்கள். அத்துடன் சிருஷ்டி டாங்கே உடனான ஒரு காதலும் வருகிறது.
களையும், கன்னக்குழியும் ஒருங்கே அமையப்பெற்ற சிருஷ்டியான சிருஷ்டி டாங்கேவின் வனப்புக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். ஒரு ஹீரோயின் மெட்டீரியலான அவர் எப்படி ஒரு பாலியல் தொழிலாளியாக நடிக்க ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை.
அதுவும் நான்கு இளைஞர்களுடன் அவர் மன மகிழ்ச்சியுடன் கிளம்பும்போது இது ஏதோ தவறான புரிதல் என்றுதான் நாம் சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் நல்லவேளை, அவருக்கு அரைகுறை ஆடை எல்லாம் கொடுத்து அசிங்கப்படுத்தாமல் நாகரீகமாக விட்டு விட்டார்கள்.
பிளாக் பாண்டி விஜே பப்பு போன்றோர் சபலி லிஸ்ட்களாக வருகிறார்கள். அவர்களுக்கு என்ன வருமோ அதை குறைவில்லாமல் செய்தும் இருக்கிறார்கள்.
வழக்கமாக மீட்டருக்கு மேல் நடிக்கும் வழக்கமுள்ள வில்லன் ஜான் விஜய் இதில் இன்ஸ்பெக்டராக வருவதுடன் வழக்கை எடுத்தோமா விசாரித்தோமா என்கிற அளவடன் நிறுத்திக் கொள்வது நியாயமாக இருக்கிறது. எஸ்ஐயாக வரும் தேவி பிரியாவும் அப்படியே.
ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் இசையமைத்திருக்கும் தாஜ்நூர் தன் பங்கை கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார். பாடல்களும் கேட்கும் அளவில் இருக்கின்றன.
ஊட்டியின் இயற்கை வனப்புக்கு குறை வைக்காமல் வண்ணமயமாக படத்தைத் தந்திருக்கிறது கோகுலின் ஒளிப்பதிவு.
இயக்குனர் எஸ்.மணிபாரதி பாலியல் தொழிலாளிகளை கையாண்டிருக்கும் விதமே அலாதியாக இருக்கிறது. அது ஒரு கௌரவமான வேலை போலவே இதற்கெல்லாம் ஏஜெண்டாக இருப்பவர் ரெஸ்டாரண்டில் அமர்ந்து கொண்டு எல்லோருடனும் டிரான்ஸ்பரண்டாக பிசினஸ் பேசிக் கொண்டிருக்கிறார்.
கூகுளில் கால் கேர்ள்ஸ் என்று போட்டாலே எல்லோருடைய எண்களும் கிடைத்து விடுகின்றன.
பாலியல் தொழிலாளிகளும் வீட்டிலும் நடுத்தெருவிலுமாக நின்று கொண்டு “இன்றைக்கு நான் பிசி… வர முடியாது..!” என்று சர்வ சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிருஷ்டி டாங்கேவின் அம்மாவாக வரும் திவ்யா, மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்புவதில் எந்த விதமான தயக்கமும் காட்டாமல் சிருஷ்டியை மாப்பிள்ளை உடன் ஹனிமூன் அனுப்புகிற ஜோரில் அனுப்பி வைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது.
ஆனாலும் கொஞ்சம் காமம், கொஞ்சம் காதல், கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் திரில் என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் கலந்து ஒரு கதையை சொல்லி இருப்பதால் தொய்வில்லாமல் ஓடி முடிகிறது படம்.
தி பெட் – படுக்க விடவில்லை..!
– வேணுஜி