‘தண்ணி வண்டி ‘ என்றால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. நேரடியான பொருள் குடிநீரை விநியோகிக்கும் வண்டி என்பது. இன்னொரு பொருள் ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால் தண்ணி வண்டி என்றதும் நமக்கு இந்த இரண்டாவது பொருள் தான் நினைவுக்கு வந்து போகும். நம் வழக்கம் அப்படி.
படத்தில் சொல்லும் தண்ணி வண்டிக்கு இரண்டு பொருளும் உண்டு. மதுரையில் வண்டியில் தண்ணீர் விநியோகிக்கும் நாயகன் உமாபதி கையில் காசு புழங்கினால் நண்பன் பால சரவணனுடன் சேர்ந்து தண்ணி பார்ட்டியில் இறங்குவார்.
ஒரு கட்டத்தில் அங்கு பொறுப்பேற்கும் புதிய வருவாய்துறை அதிகாரிக்கும் உமாபதிக்கும் ஒரு சிக்கல் வர, யார் அதில் வெல்வார்கள் என்பது தெரிந்த சங்கதிதானே..?
குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி படத்திலும் அவரது மகனாகவே வருகிறார். புலிக்குட்டியாக காதல், காமெடி, ஆக்ஷன் அனைத்திலும் அவர் அமர்க்களப் படுத்துகிறார்.
அவர் வயதுக்குரிய டிரெண்ட் செட்டரான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதே அவரது உயர்வுக்கு வழி வகுக்கும்.
நாயகியாக வரும் சம்ஸ்கிருதிக்கு லட்சணமான முகம். ஆனால், உமாபதியைக் காதலிப்பதை தவிர வேறு எந்த வேலையும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.
தேவ தர்ஷினியும், வித்யூலேகாவும் தங்களால் முடிந்தவரை காமெடி செய்திருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பளிச்சென்று இடம் பிடிப்பவர் படத்தின் வில்லியான வினிதாதான். ஆரம்பத்தில் பொறுப்பான அரசு அதிகாரியாக வந்து பின்னால் காமப்பித்து பிடித்தவராக காண்பிக்கப்படுகிறார்.
இப்படி ஒரு குணம் கொண்டவராக இருந்திருந்தால் இந்த உயரத்துக்கு வரும் வழியிலேயே பிரச்சனைகளில் மாட்டி இருப்பார் என்று தோன்றுகிறது.
ஏகப்பட்ட சிக்கல்கள் கொண்ட கதை குழப்பத்தையே தருகிறது. இயக்குநர் மாணிக்க வித்யா திரைக்கதையில் கவனம் செலுத்தி அதைச் சீர் செய்து இருக்கலாம். இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் இந்த கதையை சரியாக சொல்லி விட்டால் அவர்களுக்குப் பரிசு தர முடியும்.
இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதைத் தந்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் எஸ்.என்.வெங்கட்டும் இசையமைப்பாளர் மோசசும்.
குழப்பங்கள் தவிர்த்து இன்னும் சுவாரசியம் கூட்டி இருந்தால் தண்ணி வண்டியின் தள்ளாட்டத்தைத் தவிர்த்திருக்க இயலும்.
Related