ஆர்.கண்ணன் தயாரிப்பு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தள்ளிப்போகாதே ‘. இந்தப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். பூமராங் படத்துக்குப் பின் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் இது.
அதர்வாவுக்கு ஜோடியாக இதில் பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளை முன்வைத்து காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய கலைஞராகவும் நடித்துள்ளார்கள். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் வரும் 14ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் ஆர்.கண்ணன் பேசும் போது, “விண்ணைத்தாண்டி வருவாயா, 96, மௌனராகம் ஆகிய படங்களைப் போல ஆபாசம் துளியும் இல்லாமல் எடுக்கப்பட்ட காதல் படம் இது… அந்தப்படங்களைப் போலவே அனுபவத்தைத் தரும்..!” என்றார்.
அதர்வா பேசும் போது, “இந்த திரைப்படம் ஒரு ஆண்டு முன்பே வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. இடையில் லாக்டவும் வரவே திரையரங்கில் வெளியாகுமா அல்லது ஓ.டி.டியில் வெளியாகுமா என்ற குழப்பத்திலேயே அனைவரும் இருந்ததாக தெரிவித்தார்.
மேலும் திரையரங்கில் ஒரு படம் வெளியாவது அந்த நடிகருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், அந்த வகையில் தற்போது தானும் மகிழ்ச்சியில் உள்ளதாகக் கூறியவர், ” இயக்குனர் கண்ணன் ஒரு வினாடியைக் கூட வீணாக்காதவர் என்பதைச் சொல்லி அதற்கு ஒரு உதாரணத்தையும் கூறினார்.
” படத்தில் நான் தாடியோடு வரும் நிகழ்கால காட்சிகள் வரும். அதற்காக என்னைத் தாடி வளர்க்கச் சொன்னார் கண்ணன். நானும் அதற்கு மூன்று வாரங்கள் ஆகும் என்றேன் . மூன்று வாரததில் தாடி வளர்ந்து அவரிடம் காட்ட பேசியபோது ஒரு ஷூட்டிங்கில் இருந்தார்.
நான் இல்லாத காட்சிகளைப் படமாகுகிரீர்களா என்று நான் கேட்டபோது ” இல்லை. அடுத்த படத்தை ஷூட் பண்ணி முடிக்கப் போகிறேன் …” என்றார்.
அதற்குப்பின் இந்த லாக்டவுனில் இன்னும் இரண்டு படங்கள் முடித்து இப்போது மூன்று படங்களை முடித்துவிட்டார். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக நேரத்தை வீணாக்காமல் படம் எடுக்கக் கூடியவர்..!” என்றார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது, “மணிரத்னமும் நானும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். அப்போது பல கதைகளை விவாதித்து இருக்கிறோம். ஆனால் அவர் இயக்குனராக அறிமுகமானது கன்னடத்தில். அந்தப் படத்தை பார்த்து நான் அசந்து போனேன்.
பிறகு அவரைக் கூப்பிட்டு தமிழில் படம் பண்ண வைத்தேன். அவரிடம் உதவியாளராக இருந்த கண்ணனும் மிகுந்த திறமைசாலியாக இருந்தார். கண்ணனிடம் அவரது முதல் படமான ‘ ஜெயம் கொண்டான் ‘ படத்தின் கதையை கேட்டபோது அவரைப்பற்றி மணிரத்னத்திடம் விசாரித்தேன்.
“நல்ல உழைப்பாளி. கண்டிப்பாக வாய்ப்பு தாருங்கள் …”என்றார். பயிற்சி பெற்ற அவரிடமே பாராட்டு வாங்கிய கண்ணன் சொன்னது போலவே ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த திட்டமிட்டு எடுத்து எங்களுக்கு வெற்றி படமாக கொடுத்தார். அவர் இன்னும் பல சாதனைகளைச் செய்ய வேண்டும்..!” என்று வாழ்த்தினார்.
நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய நண்டு ஜெகன் அதற்கிடையே தனக்கும் கண்ணன் படங்களில் வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மைக்கை பிடித்த கண்ணன் “ஜெகன் மீது எப்போதுமே எனக்கு நல்ல நம்பிக்கை உண்டு அவருக்கான வேடங்கள் அமையும் போது அவரை கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன்..” என்றார்.
நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் ஜெகனின் கோரிக்கையை அப்போதே நிறைவேற்றிய கண்ணனின் நல்ல மனதை பர பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
நல்ல மனம் வாழ்க..!