ஒரு அரக்கனின் மனதில் தாய்ப்பாசத்தை ஊட்டி அவனுக்கு அன்பின் வலியை உணர்த்தும் படம்.
இங்கு எடுக்கும் பல படங்களும் ஆங்கிலம், கொரியன் அல்லது இரானிய படங்களின் அப்பட்டமான காப்பிதான் என்றிருக்க, சிலர் மட்டுமே இங்கிருந்து உருவான கதை என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். அப்படி கொரிய மொழிப்படம் ஒன்றின் எடுத்தாளல் இது என்பதைச் சொல்லியே படத்தைத் தொடங்கும் இயக்குநர் ஹரிகுமாரின் மனசாட்சிக்கு முதலில் வந்தனம் சொல்லி விடலாம்.
கோயம்பேடு சந்தையில் தொடங்கும் படத்தில் காய் கனிகளைத் தாண்டி முக்கியமான தொழிலாக இருப்பது கந்து வட்டி என்கிற பணம் விளையும் தொழில்தான் என்று சொல்லியே படத்தை ஆரம்பிக்கிறார்கள். வியாபாரத்துக்காக பணம் தேவைப்படும் வியாபாரிகள் பணத்தை வட்டிக்கு வாங்கிவிட்டு ஒழுங்காக திருப்பிக் கொடுக்காவிட்டால் அதற்கென்றே அரக்கனாக வளர்க்கப்பட்ட அடியாளான பிரபுதேவா நேரில் சென்று… அடித்துப் பிடுங்குவார்.
இரக்கம் என்பது துளியும் இல்லாத அவரது அறிமுகம் அவர்மீது வெறுப்பை உமிழ வைக்கிறது. அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தையும் ரெடி பண்ணிவிட்ட பரணியை மருத்துவமனை புகுந்து அவர் அம்மா கண்முன்னேயே வட்டிக்கு வட்டி கேட்டு அடித்துத் துவைக்கும் பிரபுதேவாவை யாரும் சபிக்கவே செய்வார்கள். அப்படி சபித்தால்தான் அந்தக் கேரக்டர் நியாயம் பெறும்.
அந்த அரக்கனை ஒருபக்கம் அந்த ஏரியா டான்சர் ஆன சம்யுக்தா ஹெக்டே காதலித்து துரத்த… இன்னொரு பக்கம் ” நான்தான் உன் அம்மா…” என்று ஈஸ்வரி ராவ் பாசத்தைக் காட்டித் துரத்துகிறார்.
அந்த அம்மாவுக்கும் அதே கதிதான். மார்கெட்டில் வைத்து ஈஸ்வரி ராவுக்கு நாலு அறை விடுகிறார் பாருங்கள் பிரபு தேவா. அவரைப் பெற்ற வலியைவிட அது அந்தத் தாய்க்கு பெரிய வேதனையைத் தந்திருக்கும்.
அப்படிப்பட்ட கல் நெஞ்சனைக் கரைத்து தாய்ப்பாசத்துக்குள் கொண்டு வரும் தாயின் நோக்கம்தான் மீதிக் கதை.
சிரித்தால் குழந்தையாகவும் முறைத்தால் கொடூரமாகவும் தோன்றும் முகம் பிரபுதேவாவுக்கு. ஆனால் இதில் அவருக்கு சிரிக்கவே வாய்ப்பு தரப்படவில்லை என்பதுதான் கொடூரம்.
அந்த கொடிய முகத்துடனான அவரது பாடி லாங்குவேஜ் அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறது. தன் கண் முன்னே ஒரு குழந்தையை பிரசவிக்க ஒரு பெண் எத்தனை வேதனைப்படுகிறார் என்பதை கண்ணுற்று தாயின் பெருமையை அவர் உணரும் கட்டத்தில் அற்புதமாக செய்திருக்கிறார் நடனப் புயல். ஆனால், அவர் நடனமும் ஆடவில்லை என்பது இன்னொரு சோகம்.
இப்படி ஒரு நாயகியாக நடித்ததற்கே சம்யுக்தா ஹெக்டேவைப் பாராட்டலாம். அவரது அறிமுகக் காட்சியே பிரபுதேவாவின் இச்சையைத் தீர்த்து அதற்கு ரேட்டும் வாங்கிக் கொண்டு போவதுதான். பப்பில் ஆடும்போதும், பிரபு தேவாவைக் காதலிக்க ஆடும்போதும் வில்லாக வளைகிறார். அந்த நளினங்களுக்கே சொத்துள்ளவர்கள் மிஸ்.ஹெக்டேவுக்கு ஹெக்டேர் கணக்கில் நிலம் எழுதி வைக்கலாம்.
பிரபு தேவாவின் அம்மாவாக கிளைம் பண்ணிக்கொண்டு வரும் ஈஸ்வரி ராவ் இத்தனை இளமையுடன் இருக்கிறாரே என்று பார்த்தால் நல்லவேளை அவரது 15 வயதிலேயே பிரபுதேவா பிறந்து விட்டதாக லாஜிக் சொல்லப்படுகிறது.
இருந்தாலும் ஒரு சீனில் நரை முடியும், இன்னொன்றில் இல்லாமலும் வருவதை கவனித்து தவிர்த்திருக்கலாம்.
முன்பாதியில் யோகிபாபு வந்து படத்தின் வறட்சியை முடிந்த அளவில் தணித்திருக்கிறார்.
ஹீரோவும், இயக்குனரும் மாஸ்டர் கிளாஸ் நடன மாஸ்டர்களாக இருக்க, படத்தில் நடனத்துக்கு இன்னும் ஒதுக்கீடு கொடுத்திருக்கலாம்.
சி.சத்யாவின் இசையில் அமைந்த தாய்ப்பாசப் பாடல் உருக்குகிறது. பின்னணி இசையிலும் பின்னி எடுத்திருக்கிறார். விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் தெரியும் நிறத்தில் படத்தின் தன்மை உணரவைக்கப் படுகிறது. பரபரப்பான மார்க்கெட்டில் அனாயசமாக படம்பிடித்து பாராட்ட வைக்கிறார். அந்தக் காட்சிகளில் இயக்குனரின் சாமர்த்தியமும் தெரிகிறது.
முன்பாதியில் மெதுவாக நகரும் திரைக் கதை தாய்ப்பாசம் தொட்டதும் ஜிவ்வென்று கிளம்பி அதன் பின்னணி தெரியும் நேரம் விறுவிறுப்பு பெறுகிறது.
இதெல்லாம் கோயம்பேடு மார்க்கெட்டிலா நடக்கிறது என்று வியாபாரிகள் போர்க்கொடி தூக்காத அளவில் சரிதான்.
தேள் – ஒரு தாயின் சபதம்.!
– வேணுஜி