March 29, 2024
  • March 29, 2024
Breaking News
January 15, 2022

என்ன சொல்லப் போகிறாய் திரைப்பட விமர்சனம்

By 0 399 Views

சிறிது நாட்களுக்கு முன் நடந்த இந்த படத்தின் முன்னோட்ட விழாவில் 40 டைரக்டர்களிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவத்தை சொல்லி எல்லோரிடமும் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார் இந்த படத்தின் நாயகன் அஸ்வின் ( குமார் லஷ்மிகாந்தன்)

அவர் சொல்ல வந்தது இந்தப் படத்தின் கதை மட்டும்தான் தூங்காமல் கேட்டது என்பதைத்தான்.

ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் நமக்கு தோன்றியது அஸ்வின் எவ்வளவு நாகரிகமானவர் என்று. காரணம் இந்தப்படமும் நம்மைத் தூங்க வைத்ததுதான். அப்படி சொல்லி விடக்கூடாது என்றுதான் அவ்வளவு நாகரிகமாக தூங்காமல் கேட்ட கதை என்று சொன்னார் போலிருக்கிறது. அல்லது இயக்குநர் ஹரிஹரன் கதை சொல்லும்போதே பிளாஸ்க், பாப்கார்ன் சகிதம் போயிருக்கக் கூடும்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் ‘தம்பி ‘ அஜித்துக்கும் சிம்ரனுக்கும் இருக்கும் காதல் இழையைத் தனியாக பிரித்து எடுத்தால் இந்தப் படத்தின் லைன் வந்துவிடும். ஆனால் வாலியில் இருந்த சுவாரஸ்யத்தைக் குறைத்து எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு ஜவ்வாக இழுத்து சொல்லப்பட்டிருக்கிறது இந்த படத்தின் திரைக்கதை.

அஸ்வினுக்கும் அவந்திகா மிஸ்ராவிற்கும் நிச்சயதார்த்தம் நடக்கும் நிகழ்வில் இருந்து தொடங்குகிறது கதை. பார்வைக்கு அஸ்வினின் அக்கா போன்றே இருக்கும் அவந்திகா கண்டிப்பாக அவரது ஜோடியாக மாட்டார் என்பது முதல் பார்வையிலேயே நமக்குப் புரிந்து விடுகிறது.

அவந்திகா எழுத்தாளராம். அதுவும் காதலை சப்ஜாடாகப் புட்டுப்புட்டு வைக்கும் அளவுக்கு எழுதி வாசகர்களை ஈர்த்தவர் என்கிறார்கள். காதலின் எல்லா நிலைகளும் தனக்கு தெரியும் என்று அவரும் நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இதுவரை காதலித்தது இல்லையாம்… (ஏதாவது புரிந்தால் சரி…)

அப்படிப்பட்ட அவர் அஸ்வினிடம், “நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா..?” என்று கேட்கிறார். இல்லை என்கிற உண்மையைச் சொல்லாமல் காதலித்து இருப்பதாக ஒரு ‘கதை விடுகிறார்’ அஸ்வின். அது பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் ( வாலியில் ஜோதிகா போர்ஷன்) சொல்ல, அந்த காதலியை நான் பார்க்க வேண்டும் என்கிறார் அவந்திகா – அவருடைய அடுத்த கதைக்கான தகவல்களைத் திரட்டவாம்… வேலி ஓணானை லெக்கின்ஸில் விட்டுக் கொண்டது போல்… 

அதற்காக அலைந்து திரிந்து நண்பன் (காமெடியன்) புகழ் உதவியுடன் தேஜு அஸ்வினியைப் பிடித்து நடிக்கச் சொல்லிக் கேட்கிறார். ஏற்கனவே நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் தேஜுவும் அவரது வீட்டில் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதால் இப்படி ஒரு காதல் இருப்பதாக நாடகமாட நினைத்து அதற்கு ஒத்துக் கொள்கிறார்.

ஆனால் இந்த ஒரு நாள் நாடகம் பலநாட்கள் நீண்டுகொண்டே போக அஸ்வினுக்கும் தேஜுவுக்கும் காதல் மலர்ந்து விடுகிறது. ஆனால் நிச்சயதார்த்தமே ஆகிவிட்ட அஸ்வினைக் காதலிப்பதற்கு தேஜு உடன்படவில்லை. அஸ்வினும் ஒருபக்கம் அவந்திகாவுடனான கல்யாண வேலைகளை செய்துகொண்டே இன்னொரு பக்கம் தேஜுவை விரட்டி விரட்டி காதலித்து கொண்டிருக்கிறார்.

முடிவு என்ன ஆகியிருக்கும் என்பது ஆவரேஜ் ரசிகனும் கண்டு பிடித்துவிடக்கூடிய ஆறி அவலாய்ப்போன சங்கதிதான்.

ரோஜாக் கூட்டம் படத்தில் ஸ்ரீகாந்தை பார்த்தது போல் இருக்கிறது இந்தப் படத்தில் அஸ்வினைப் பார்ப்பதற்கு. மாடுலேஷனும் கிட்டத்தட்ட ஸ்ரீகாந்த் மாதிரியே. நடிப்பிலும் இன்னும் நிறைய தூரம் போகவேண்டும் அஸ்வின் – அதுவும் ஸ்ரீ காந்த் மாதிரியே…

ஓங்குதாங்காக இருக்கும் அவந்திகாவை நம்மால் எழுத்தாளராக உணர முடியவில்லை. இவர் கண்ணெதிரேயே அஸ்வினும் தேஜூவும் கண்களால் பேசிக் கொண்டும், முகபாவங்களை மாற்றிக் கொண்டும் இருக்க ஒரு எழுத்தாளருக்கு இதெல்லாம் புரியாத விஷயமா என்ன..? ரொம்பவும் கிளிஷே கொண்ட டிராமா…

படத்தின் ஆகப்பெரிய ஆறுதல் தேஜு அஸ்வினி தான். பெரிய அழகி இல்லை என்றாலும் ‘போட்டோஜெனிக் பியூட்டி’ என்பார்களே… அப்படி சினிமாவுக்கு ஏற்ற முகவெட்டுடன் அப்படி ஒரு அற்புத முகக் குறிகளுடன் காட்சிக்கு காட்சி அசத்தியிருக்கிறார். 

இப்படி ஒரு முகத்தைதான் தேடிக் கொண்டிருந்தேன் என்று ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனும் தேஜூவின் முகத்துக்கு கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட குளோஸ் அப்புகளை வைத்து ரசித்து ரசித்து அவரைப் படமாக்கி இருக்கிறார். தேஜுவின் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களும் அபாரம்.

அவந்திகாவின் அப்பாவாக வரும் சுப்பு பஞ்சுவை விளம்பர ஷூட் என்று சொல்லிக் கூட்டி வந்தார்களோ என்னவோ, எந்நேரமும் சிரித்துக் கொண்டே இருக்கிறார். அவர் என்ன பிசினஸ் செய்கிறார் என்பதே தெரியவில்லை. ஆனால் மூணே பேர் கொண்ட குடும்பத்துக்கு அம்பானியை விட பெரிய வீட்டில் குடியிருக்கிறார். அத்தனை பெரிய வீட்டில் வளர்ந்த ஒரு வசதியான பெண், தமிழில் எழுதிக் குவித்துக் கொண்டிருப்பது சர்க்கரைப் பொங்கலுக்கு சால்னா தொட்டுக் கொள்வது போல் ஒட்டாமல் இருக்கிறது.

புகழுக்கு மெயின் காமெடியன் வேடம். அவர் நடத்தும் ‘பப்’பில் அவரும், அவரிடம் வேலை செய்யும் சாமிநாதனும் அடிக்கும் லூட்டிகள் கொஞ்சம் கலகலப்பை கூட்டுகின்றன.

அஸ்வினும் அவந்திகாவும் – அஸ்வினும் தேஜூவும் பேச ஆரம்பித்தால் வால்யூம் வால்யூமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பாலகுமாரன் எழுதிய வசனங்களை புத்தகமாக போட்டால் ஒரு 500 பக்கங்களுக்கு மேல் வரும்.

தேஜுவைத்தான் காதலிக்கிறேன் என்று பளிச்சென்று சொல்லிவிட்டு விஷயத்தை முடிப்பதில் அஸ்வினுக்கு என்ன தயக்கம் என்பதே புரியவில்லை. இரண்டு குடும்பத்தினரும் அவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள்.

ஆனால் இவரோ தொடர்ந்து கல்யாண வேலைகளைப் பார்த்துக்கொண்டு அவந்திகாவையும் நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கிறார். ஒரு கட்டத்தில் நாமே எழுந்து ” இவனை நம்பாதே…” என்று கத்த வேண்டும் போல் தோன்றுகிறது.

படத்தின் ஆகப் பெரும் பலம் ரிச்சர்ட் நாதனின் அற்புதமான ஒளிப்பதிவு. அவருடைய life-time படம் இது என்றே கூறமுடியும். விவேக் மெர்வினின் இசையும் பெரும் ஆறுதல் அளிக்கிறது. இவற்றால் மட்டுமே இது ஒரு நியாயமான படம் போல் உணர வைக்கிறது.

இந்த இரண்டு விஷயங்கள் மட்டும் கைகொடுக்காமல் போயிருந்தால் எடைக்குக் கூட போட்டிருக்க முடியாத அளவு வீக்கான ஸ்கிரிப்ட் இது.

என்ன சொல்லப் போகிறாய் – என்னத்தைச் சொல்ல..?
 
– வேணுஜி