இதுவரை நாம் தயாரிப்பாளராக மட்டுமே அறிந்து வைத்திருக்கும் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ எஸ். சஷிகாந்த் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராகி இருக்கும் படம்.
மாதவன், சித்தார்த், நயன்தாரா – இந்த மூன்று பேரைச் சுற்றி நடக்கும் உணர்ச்சி மயமான திரில்லர் படம் இது.
தண்ணீரில் இருந்து பெறப்படும் சக்தியில் இயங்கும் என்ஜின் மூலம் வாகனத்துக்கு ஆகும் எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்க முடியும் என்ற ப்ராஜெக்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு அதற்கான அனுமதியைப் பெற படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார் விஞ்ஞானி மாதவன்.
அதற்காக பல லட்சங்கள் செலவு செய்த நிலையில், பணம் கொடுத்த உள்ளூர் தாதா அவருக்கு படத்தை திருப்பித் தர கொடுத்திருக்கும் கெடு இரண்டு நாட்கள்.
இன்னொரு பக்கம் இந்தியா அறிந்த கிரிக்கெட் வீரரான சித்தார்த், சமீப கால சொதப்பல்களால் இந்தியாவில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். அது தொடர்பான சர்ச்சையின் முடிவில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கிறது – அடுத்த இரண்டு நாட்களில் அவரது திறமையை உலகுக்கு அவர் அறிவிக்க வேண்டும்.
மாதவனின் மனைவியான நயன்தாராவுக்கு வேறு ஒரு பிரச்சனை. 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கருத்தரிக்கும் வாய்ப்பு ஒரு முறை தவறிப்போக, அடுத்து ஒரே ஒரு வாய்ப்பு என்கிற நிலையில் அதற்கு உண்டான பணத்தை தேற்றும் முயற்சியில் இருக்கிறார். அதற்கும் இரண்டு நாட்கள்தான் அவகாசம்.
இந்த மூவருக்குள் என்ன தொடர்பு என்றால் நயன்தாராவின் தந்தைதான் கிரிக்கெட் வீரர் சித்தார்த்தின் குருநாதர். அத்துடன் நயனும் சித்துவும் சிறுவயதிலிருந்தே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் – ஆனால் 12 வருடங்களுக்கு இருவரிடமும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இருக்க, நயன் மட்டும் சித்தார்த்தின் வளர்ச்சியையும் வெற்றியையும் வெளியில் இருந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த மூவருக்கும் அந்த இரண்டு நாட்கள் கற்றுக் கொடுத்தது என்ன, அவர்கள் பெற்றது என்ன என்பதை எல்லாம் அடுத்து என்ன நடக்குமோ என்ற த்ரில்லர் ஜேனரில் சொல்லி இருக்கிறார் சஷிகாந்த்.
மனைவிக்குக் குழந்தை பாக்கியம் தரும் தகுதி இல்லாதவர், எந்த வேலைக்கும் போகாமல் ப்ராஜெக்ட்டுக்காக அலைந்து கொண்டிருப்பதில் மனைவியின் சம்பளத்தில் காலத்தை ஓட்டுபவர், ஊரெல்லாம் உதவாக்கரையாகப் பார்த்தும் தன்னை நம்பி வந்த ஒற்றை ஜீவனான நயன்தாராவே, கையாலாகதவன் என்று சொல்லிவிட்ட நிலையில் மாதவன் எடுத்த அதிரடி முடிவுதான் படத்தின் இரண்டாம் பாதி.
பல்வேறு வகையான பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் மாதவன் இந்த படத்தில் ஏற்றிருக்கும் வேடம் கண்டிப்பாக வித்தியாசமானது. புத்திசாலியாக இருந்தும் வாழ்க்கையில் முழுவதும் தோற்றுப்போன ஒரு மனிதனின் மனோபாவத்தை இதை விட அற்புதமாக யாராலும் வெளிப்படுத்த முடியாது.
தன் முகத்தைக் கண்ணாடியிலேயே வெறுப்பு கலந்த ஆர்வத்துடன் அவர் பார்த்துக் கொள்ளும் பார்வையில் அற்புதம்.
மற்றவர்களுக்கெல்லாம் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. ஆனால் சித்தார்த்தைப் பொறுத்தவரையில் அது அவரது உயிர். ஆனால் அதை அவரது மனைவி உள்ளிட்டு அவரைச் சுற்றி இருக்கும் யாருமே புரிந்து கொள்ளாத நிலையில், தன்னை நிரூபிக்க போராடும் சித்தார்த்தின் பாத்திரமும் நடிப்பும் கூட பாராட்டத் தகுந்தவை.
மூன்றாவது முகமாக நயன்தாரா. குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஊரார் குழந்தைகளை தன் குழந்தையாக நினைத்து நடந்தாலும் ஆசிரியப் பணி அதற்கும் முட்டுக்கட்டை போட, அதற்கு வரும் சோதனையும், அதில் அவர் படும் வேதனையும் இன்னொரு ரகம்.
இவர்கள் மூவரில் மாதவனும், நயன்தாராவும் கணவன் மனைவியாக வாழும் வாழ்க்கையில் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒவ்வொன்றும் ஆழக்கடலில் தேடி எடுத்த முத்து.
இப்படியான நடிப்பில் படத்தின் வசனங்கள் மட்டும் ஆங்கிலத்தில் இருந்திருந்தால் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வையே நாம் பெற்று இருக்கக்கூடும்.
ஆனால் இவர்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் தன்னை நிரூபிக்க தான் ஒருவன் மட்டுமே போராடும் சித்தார்த், கிரிக்கெட் வீரனான தன்னைப் போர் வீரனுடன் ஒப்பிட்டு “எதிரியுடன் போரிடுவது தன்னைக் காக்கவா, தாய் நாட்டைக் காக்கவா..?” என்று எழுப்பும் கேள்வி மில்லியன் டாலருக்கு நிகரானது.
சித்தார்த்தின் மனைவியாக வரும் மீராஜாஸ்மினும், தந்தையாக வரும் மோகன் ராமனும் கூட இயல்பு தாண்டாத நடிப்பில் வியக்க வைக்கிறார்கள்.
சித்தார்த்தின் மகனாக வரும் அந்தச் சிறுவன் வரும் காட்சியில் எல்லாம் அதிசயிக்க வைக்கிறான்.
இப்படிப்பட்ட படைப்பாக்கம் எல்லாம் சிறந்த இயக்குநருக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் தன் முதல் படத்திலேயே முதல் வரிசை இயக்குனர்கள் பட்டியலில் வந்து உட்கார்ந்து விட்டார் சஷிகாந்த்.
அறிவியல், மருத்துவம், விளையாட்டு என்று மூன்று துறைகளையும் ஆழ்ந்து கற்றறிந்து அவர் இந்த படத்துக்காக எழுதி இருக்கும் ஸ்கிரிப்ட், மிகக் கனமானது. அதிலும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து அவர் தரும் தகவல்கள் எல்லாம் வாய் பிளக்க வைக்கின்றன.
இந்த இரண்டு டெஸ்ட் பேப்பர்களையும் சர்வ சாதாரணமாக முடித்து அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்று விடுகிறார் அவர்.
தானே இயக்குனராக அறிமுகமாகும் நிலையில் இந்த படத்தில் சக்தி ஸ்ரீ கோபாலனை இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தி இருக்கும் சஷிகாந்தின் தைரியம் பாராட்டத்தக்கது. அவரது நம்பிக்கையை பொய்யாக்காமல் பாடகி சக்தியும், இசையமைப்பில் தன் சக்தியைக் காட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விராஜ் சின் கோஹில் திறமையை தனியாகப் பாராட்டியே ஆக வேண்டும். அதுவும் கிரிக்கெட் மைதானத்தில் நாம் கிரிக்கெட்டை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோமோ அதே கோணங்களில் அதைப் பார்த்து ரசிக்க வைத்திருக்கிறார்.
படத் தொகுப்பாளர் கோட்டியின் கட்டிங்ஸ் வேற லெவல்
படத்தின் லாஜிக் குறைபாடு என்று ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்றால் இன்றைய ஐபிஎல் மேனியாவில் சேப்பாக்கம் மைதானம் முழுதும் டெஸ்ட் மேட்சுக்காக கூட்டம் நிரம்பி வழிவதைச் சொல்லலாம்.
உணர்வுபூர்வமாகச் செல்லும் கதையானதால் தியேட்டர்களில் இந்தப் படத்தை எல்லோரும் ரசித்து பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதையும் முன்பே முடிவு செய்து ஓடிடியில் ரிலீஸ் செய்து தயாரிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் சஷி.
டெஸ்ட் என்று பெயர் வைத்து விட்டதால் டெஸ்ட் மேட்ச்சைப் போலவே படம் நகர்ந்தாலும், இரண்டாவது இன்னிங்சின் பரபரப்பு பின் பாதியில் பற்றி கொண்டு ஒரு அழுத்தத்துடன் முடிகிறது படம்.
அதில் மேடி மீது நமக்கு ஏற்படும் பரிதாபம்தான் படத்துக்குக் கிடைத்த வெற்றிக் கோப்பை.
டெஸ்ட் – தி பெஸ்ட்..!
– வேணுஜி