காதல் படுத்தும் பாடு, காதலிக்கு வேறு இடத்தில் கல்யாணம் ஆகியும் காதலர்களைத் துரத்துகிறது.
கிர்த்தி சனோன் மீதான காதலுக்காக குணம் மாறி, கொள்கை மாறி உயர் படிப்பெல்லாம் படித்தும் காதல் கை கூடாமல் போகும் தனுஷ் இந்திய விமானப்படையில் பைலட் ஆகிறார்.
அங்கே அவர் செய்த சிறு பிழை அவரை மீண்டும் தன்னை நிரூபிக்க வைக்க, அந்தப் புள்ளியில் கடந்த காலக் காதல் மீண்டும் துரத்துகிறது. என்ன செய்தார் அவர் என்பதுதான் கதை.
தனுஷின் வழக்கப்படியே அடாவடி கல்லூரி மாணவன், அழகான காதலன், கைகூடாத இளைஞன், பொறுப்பான அதிகாரி என பலநிலைகளில் பயணப்படும் வேடம்.
இது ஒன்றும் புதிதில்லையே எனும்படியாக அத்தனை நிலைகளையும் வெற்றிகரமாக நடிப்பில் கடக்கிறார் அவர். குறிப்பாகக் காதல் தோல்வியை, மீண்டும் குறுக்கிடும் காதலை அவர் எதிர்கொள்ளும் வேளைகளில் வெளிப்படுத்தும் உணர்வுகள் அபாரம்.
ஆனால் அவரும் சரி, சிம்புவும் சரி தவிர்க்க வேண்டிய விஷயம் உடல் மொழிகளில் ரஜினியைப் பின்பற்றுவது.
தனுஷ் நடிப்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் அவருக்கு ஜோடியாக வரும் கிர்த்தி சனோன், நடிப்பில் தனுஷுக்கே சவால் விடுகிறார்.
கடந்த கால படங்களில் நிறைய பேதை நாயகிகளை பார்த்திருக்கிறோம். இதில்தான் முதன் முதலாக போதை நாயகியைப் பார்க்க நேர்கிறது.
தனுஷின் அப்பாவாக வரும் பிரகாஷ் ராஜ் வழக்கம்போல் நடிப்பில் எல்லைகளைத் தாண்டுகிறார். காதலை எதிர்ப்பதையே வேலையாகக் கொண்ட கிர்த்தி சனோனின் தந்தையாக வரும் போட்டா ராய் சவுத்ரி, தனுஷ் வாழ்வில் உயர தன்னையும் அறியாமல் தூண்டுகிறார்.
ஏ ஆர் ரகுமானின் இசையை சொல்லியாக வேண்டும். ஆனால் இந்திக்கு ஒரு மாதிரியாகவும் தமிழுக்கு வேறு மாதிரியாகவும் இசைக்கும் வல்லமை பெற்ற அவர் இதில் இந்தி ரசிகர்களை கவனத்தில் கொண்டு இசைத்திருக்கிறார்.
துஷார் காந்தி ராயின் ஒளிப்பதிவில் குறை கண்டுபிடிக்க நேரவில்லை.
இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கும், தனுஷுக்கும் அப்படி என்ன பூர்வ ஜென்ம பந்தமோ தெரியவில்லை… ராஞ்ச்சனா இந்திப் படத்தின் மூலம் தனுஷின் நடிப்பு எல்லையை இந்தியா முழுமைக்கும் இழுத்து விட்டவர், இப்போதும் தனுஷின் நடிப்புத் திறமையை இந்தியாவெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறார்.
இந்திய ராணுவம் என்று வந்துவிட்டதனால் போர்க்கள பின்னணி இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற அளவில் அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டும் கொஞ்சம் படத்துடன் ஒட்டாமல் பயணிக்கின்றன – கூடவே கொஞ்சம் லாஜிக்கும் இடிக்கிறது.
ஆனால் காதல் உலகமயமானது என்பதைச் சொல்வதில் இன்னொரு மைல் கல்லை தொட்டிருக்கிறார் இயக்குநர்.
தேரே இஷ்க் மே – காதல் ஒரு போர்க்களம்..!
– வேணுஜி