November 22, 2024
  • November 22, 2024
Breaking News
June 18, 2018

மத்திய அமைச்சரைத் தொடர்ந்து மாநில அமைச்சர் இல்ல நிகழ்வில் எஸ்.வி.சேகர்

By 0 967 Views

பெண் பத்திரிகயாளர்களைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டதற்காக ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கண்டனத்துக்கு ஆளான எஸ்.வி.சேகரைப் பற்றிப் போலீஸில் புகார் செய்யப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் சில நாள்கள் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தார்.

அதன்பின் சென்னைக்கு வந்தவர் பல இடங்களில் தலைகாட்டி வருகிறார். இருந்தும் அவரைப் போலீஸ் இன்னும் கைது செய்யாமலிருப்பதற்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

சில வாரங்களுக்கு முன் எஸ்.வி.சேகர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம் சர்ச்சைக்கு உள்ளானது.

எஸ்.வி.சேகர் இதுவரை கைதாகாதது குறித்து பல அமைச்சர்களிடம் விளக்கம் கேட்டும் அதுபற்றி இதுவரை நடவடிக்கை இல்லாத நிலையில் நேற்று இரவு நடைபெற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் அருண்குமார்-திவ்யா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழாவில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டதாக இன்று அவரே வெளியிட்ட புகைப்படம் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

இந்நிலையில் போலீசார் அவர் மீது எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து வருகிற 20-ந்தேதி எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, நெல்லையில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் எதிர்வரும் 12ம்தேதி நெல்லை நீதிமன்றத்தில் அவரை ஆஜராகச் சொல்லி உத்தரவிட்டுள்ள நீதிபதி, அப்படி அவர் ஆஜராகவில்லையென்றால் பிரிவாரண்டு பிறப்பிக்கப்படுமெனவும் உத்தவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

எஸ்.வி.சேகர் கைதுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு 50 நாள்களுக்கு மேலாவதை வலைதளங்களில் பொதுமக்கள் மீம்ஸ் மூலம் கிண்டல் செய்து வருகின்றனர்.