செங்குன்றம் ஞாயிறு பகுதியில் வசிப்பவர் கணேசன் (எ) மின்ட் கணேசன் (48). இவர் கடந்த 25 வருடங்களாக சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார்.
அந்நியன் திரைப்படத்தில் மிகவும் சவாலான காட்சியில் நடித்து கோமா நிலைக்கு சென்று, பின்பு குணமடைந்தார். மேலும் எந்திரன், கில்லி, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு யசோதா என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகனும் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக தயாராகி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஸ்டண்ட் யூனியன் பிரச்னையில் கணேசன், அவரது மகன் உட்பட 10 பேர் நீக்கப்பட்டனர். அதன்பிறகு 8 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், கணேசன் மற்றும் அவரது மகன் மட்டும் ஸ்டண்ட் யூனியனில் சேர்த்து கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பலமுறை கணேசன் யூனியனில் முறையிட்டும் எந்த பதிலும் இல்லை. இதன் மூலம் கணேசனுக்கு படவாய்ப்புகள் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பிரச்னையை தீர்க்க பெப்சி தொழிற்சங்கத்தில் கணேசன் முறையிட்டார். அங்கும் கணேசனுக்கு எந்த பதிலும் வரவில்லை.
இதனால், மனமுடைந்த கணேசன் நேற்று மாலை பெப்சி அலுவலகத்தில் ஆர்.கே செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் இருக்கும்போது தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கினார்.
அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.