தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் விற்பனையில் பணம் பெற்றுக்கொண்டு அவற்றை அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதிலிருந்து…
“கொடுமையான புற்றுநோய் வருவதற்கு குட்கா தொடர்பான போதைப்பொருட்களே காரணம். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், இப்போது நடைபெறும் அ.தி. மு.க. ஆட்சியிலும் தடைச்செய்யப்பட்ட குட்கா நாடு முழுவதும் பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு துணை நின்ற அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறையின் தலைமை பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் மாநகர கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு தொடர்ந்து மாமூல் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று ஏற்கனவே ஆதாரங்களுடன் ஆங்கில பத்திரிகையில் செய்திகள் வெளியாகின.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் குட்கா விவகாரத்தில் விசாரணை நடத்தினால் நிச்சயமாக உண்மைகள் வெளிவராது என்பதால், தி.மு.க. சார்பில் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மூலம் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். எங்களுடைய சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடி, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று இன்றைக்கு ஒரு தெளிவான தீர்ப்பு வந்திருக்கிறது.
இந்த தீர்ப்பை தி.மு.க. சார்பில் நான் மனதார வரவேற்கிறேன். அதேநேரத்தில், இந்த வழக்கு சி.பி.ஐ. அமைப்பால் சுதந்திரமாக விசாரிக்கப்பட்டு, உண்மை நிலவரங்கள் வெளிவர வேண்டுமென்றால், அவர்கள் அனைவரும் முறையாக தண்டிக்கப்பட வேண்டுமென்றால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கின்ற அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் காவல்துறை டி.ஜி.பி.க்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக வருமான வரித்துறை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், அவருக்கு காலநீட்டிப்பு கொடுத்ததோடு, பதவி உயர்வும் கொடுத்து, அவரை டி.ஜி.பி.யாக நியமித்து இருப்பதே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். நியாயமாக, அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் லோக் ஆயுக்தா சட்டத்தையும் கொண்டு வரவிருக்கிறோம். எனவே, குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்போம்..!”