March 18, 2025
  • March 18, 2025
Breaking News
April 28, 2018

பிரதமர் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் – நாராயணசாமி

By 0 1060 Views

தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று கூறிய தீர்ப்பு பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்த கருத்துகளிலிருந்து…

“இங்கு சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை சபாநாயகர் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே பிரச்சினையில் இரண்டு விதமான தீர்ப்பு வந்திருப்பதற்கு மக்கள் மன்றம்தான் பதில் சொல்ல வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக புதுவை மாநில கொறடா மத்திய அரசு மீது உச்ச நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்த முரணான தீர்ப்பு பற்றி நாங்கள் வலியுறுத்துவோம்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என்று புதுவையிலும் நாங்கள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம். பிரதமர் மோடி புதுவை வந்த போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நானும், அமைச்சர்களும் கடிதம் கொடுத்துள்ளோம். சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

பிரதமர் நினைத்திருந்தால் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். ஆனால் காலம் தாழ்த்தி வருகிறார்..!”