இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான PVR சினிமாஸ் உத்தண்டியில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை உருவாக்கியிருக்கிறது. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் PLAY HOUSE என்ற ஒரு திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம். இந்த பிவிஆர் திரையரங்கை நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா தம்பதியினர் ரிப்பன் கத்தரித்து, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திரையரங்கை திறந்து வைத்து அவர்கள் பேசியதாவது:
பிவிஆர் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கம். அவர்கள் சென்னையில் திறந்திருக்கும் 6வது மல்ட்டிபிளெக்ஸ் இது என்பது சிறப்பான அம்சம். சென்னையின் சத்யம் திரையரங்கம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரையரங்கு. சத்யம் திரையரங்கையும் பிவிஆர் தான் வாங்கி, நிர்வகிக்கிறது என்பதால் பிவிஆர் இன்னும் மனதுக்கு நெருக்கம்.
ஏற்கனவே கேம் ஓவர் திரைப்படத்தை இங்கு பார்த்தேன். மிகச்சிறந்த ஒளி, ஒலி வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இருக்கைகளும் மிகவும் வசதியாக இருக்கிறது. உலகிலேயே இந்தியர்கள் போல சினிமா விரும்பிகளை எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியா மாதிரி சினிமாவை கொண்டாடும் ஒரு நாடு உலகிலேயே இல்லை. வெளிநாடுகளில் கூட இந்தியா அளவுக்கு வசதிகளை தரும் திரையரங்குகள் அதிகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களை மதித்து புதுப்புது அம்சங்களை பிவிஆர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
சிங்கிள் திரையரங்குகள் பலவும் மூடப்பட்டு, திருமண மண்டபங்களாக மாறி வரும் நிலையில் பிவிஆர் போன்றோர் தொடர்ந்து பெரிய பெரிய மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளை துவக்குவது சினிமாவுக்கு ஊக்கம் அளிக்கிறது.
10 திரைகள் இருக்கிறது, பெரிய படங்களுக்கு மட்டும் திரையரங்குகளை ஒதுக்காமல் சின்ன படங்களுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால், தொடர்ந்து இங்கு தான் படங்களை பார்ப்போம் என்றார் நடிகர் பிரசன்னா.
நான், பிரசன்னா இருவருமே சினிமா பைத்தியம், எந்த ஒரு படத்தையும் முதல் நாளே பார்த்து விடும் அளவுக்கு சினிமா எங்களுக்கு பிடிக்கும். நகருக்குள் இருந்து வெளியே ஈசிஆருக்கு குடிபெயர்ந்தபோது, ஒவ்வொரு சினிமா பார்க்கவும் 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே என்ற ஒரு வருத்தம் இருந்தது.
நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு அருகிலேயே PVR திரையரங்கை திறந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சென்னையிலேயே எங்கும் இல்லாமல் முதன்முறையாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக PLAY HOUSE என்ற திரையரங்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை பார்க்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்றார் நடிகை சினேகா.