இயற்கை வேளாண் துறையில் முக்கியமாக அறியப்படும் ஓரு பெயர் ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் இவர் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து அவற்றை இயற்கை முறை விவசாயத்தில் பெருக்கி பிற விவசாயிகளும் பயன் பெறும் விதத்தில் பயிற்சியும் அளித்து வருபவர்.
ஆனால், சமூகம் போலவே இயற்கையும் அவரை வஞ்சித்துவிட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் புற்றுநோயுடன் போராடி வருகிறார். உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் ஆதரவால் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ புற்றுநோய் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு உதவி செய்ததுடன் இவர் பற்றிய நெகிழ்ச்சிக் கட்டுரை ஒன்றை நடிகர் கார்த்டி சமீபத்தில் வெளியிட்டது பலரது நெஞ்சங்களைக் கரைத்தது.
இந்நிலையில் அவரைப் பற்றி அறிந்த சிவகார்த்திகேயன் அவரது சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக அறிவிக்க, அவரை நேரில் பார்த்து நன்றி சொல்ல ஆவல் கொண்டார் ஜெயராமன். விஷயம் தெரிந்து நேரில் ஓடிவந்த சிவகார்த்திகேயன் “நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை..!” என்றிருக்கிறார். நெகிழ்ந்திருக்கிறார் நெல் ஜெயராமன்.
நல்லவர்களின் நேசமே நல்லவர்களை வாழ வைக்கும்..!