பெண்களைப் பெற்றவர்களுக்கு பாடம் சொல்லும் படம். பெண்ணைப் பெற்றோமா கல்யாண வயது வரை வளர்த்தோமா யாருக்காவது திருமணம் முடித்துவிட்டு நம் கடமையை முடித்தோமா என்றெல்லாம் இல்லாமல் பெண் குழந்தைகளை கவனமாக வளர்த்து அவர்கள் வாழ்க்கையை திட்டமிடுங்கள் என்று அறிவுரை சொல்கிறது படம்.
பல படங்கள் இயக்கிய அனுபவம் பெற்ற எஸ். பி.பகவதிபாலா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் பட்ஜெட்டும் குறுகிப் போக, அனைவரும் புது முகங்கள் என்பதும் நெருக்கடி கொடுக்க… ஆனால்… தான் சொல்ல வந்ததை மட்டும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் அவர்.
பட ஆரம்பம் ஹீரோவின் மேல் அமைகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக சார்ஜ் எடுக்க வரும் தில் நட்ராஜ், ரொம்பவும் முரட்டுத்தனம் காட்டுபவராக இருக்கிறார். அவர் மீது இரண்டு கொலைகள் செய்ததாக சந்தேகம் ஏற்பட, அது பற்றி நண்பர்கள் துருவித் துருவி கேட்கும் போது, அதற்கான பிளாஷ்பேக்கை சொல்வதாக கதை விரிகிறது.
போலீஸ்கான பயிற்சியில் இருக்கும்போது நாயகி ஷிவானியை சந்தித்து காதல் கொள்கிறார் அவர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் முடிந்து விட, ஷிவானியின் வாழ்க்கையில் ஏதோ ஒரு ரகசியம் இருப்பது நமக்கு தெரிவிக்கப்படுகிறது.
அதன் விளைவாக இருவரையும் ஒரு வன்முறை கும்பல் தாக்க, குற்றுயிரும் கொலை உயிருமாக மீட்கப்படும் தில் நடராஜ், மனைவி ஷிவானி இறந்து விட்டதாக நம்புகிறார்.
அதற்குப் பழிவாங்கத்தான் அப்படி நடந்து கொள்வதாக அவர் சொல்ல, அவரே எதிர்பாராமல் வேறு வழியில் கதை வேகம் எடுக்கிறது.
தில் நடராஜ் என்று எப்படித்தான் அவருக்கு பெயர் வைத்தார்களோ..? அவ்வளவு தில்லாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடித்திருக்கிறார். ஹீரோவாக வேண்டும் என்பதற்காக எந்த விதமான பயிற்சியும் மேற்கொள்ளாமல் தனக்கு என்ன வருகிறதோ அதை வைத்து படத்தில் தில்லாக நடித்து முடித்திருக்கிறார்.
ஆரம்பக் காட்சிகளில் ஷிவானியை பார்க்கும் போது நமக்கு ஏமாற்றம் அளித்தாலும் படம் போகப் போக அவரது முகமும் நடிப்பும் பழக்கப்பட்டு விடுகிறது. அதுவும் கடைசி கடைசியாக அவரது முகவெட்டு நன்றாக இருப்பதாகவே தோனறுகிறது.
கதையையும் கூட அவரே முடித்து வைப்பதால் நாயகனிடம் தொடங்கிய கதை நாயகியிடம் வந்து முடிகிறது.
படத்தை இயக்கியிருக்கும் பகவதி பாலாவே படத்தின் வில்லனாகவும் நடித்து ஸ்கோர் செய்கிறார்.
எல்லோரும் புதுமுகங்களாக இருக்க ஒரு கட்டத்தில் நாம் மேடை நாடகம் பார்க்கும் அனுபவத்தைப் பெறுகிறோம்.
அதிலிருந்து நம்மை மீட்க செந்தில், இமான் அண்ணாச்சி, திருச்சி சாதனா என்று அறிந்த முகங்கள் முயற்சி செய்கிறார்கள்.
மகி பாலாவின் ஒளிப்பதிவும், ஜான் பீட்டரின் இசையும் பட்ஜெட்டில் பதுங்கிக் கொள்கின்றன.
ஆனாலும் இன்றைக்கு இருக்கும் சினிமா சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை முடித்து தியேட்டரில் வெளியிட்டு இருக்கும் இந்த புதிய குழுவின் தன்னம்பிக்கையைப் பாராட்டலாம்.
பலே முயற்சி… தேவை இன்னும் பயிற்சி..!
சிவ சம்போ – மகளிர் ஸ்பெஷல்..!
– வேணுஜி