வெப் சீரிஸ்களை வழங்குவதில் Z5 எப்போதுமே முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 27 முதல் Z5 தளத்தில் வெளியாகவிருக்கிறது சமுத்திரக்கனி, ஷிவதா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தத் ‘தடயம்’ வெப் சீரிஸ்.
மற்ற சீரிஸ்களும் இதற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெரும்பாலும் மற்ற தொடர்கள் கற்பனையில் அமைந்தவையாக இருக்க, இந்த வெப் தொடர் ஆந்திர தமிழக எல்லை பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதுதான்.
90களின் இறுதி காலகட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில் இருக்கும் தமிழக கிராமம் ஒன்றில் தொடர்ச்சியாக நடைபெற்ற 60க்கும் மேற்பட்ட கொலைகளைத் தமிழக போலீஸ் துப்பறிந்ததை விவரிக்கிறது இந்தத் தொடர்.
முதலில் சப் இன்ஸ்பெக்டர் சமுத்திரகனி துப்பறியும் ஒரு கணவன், மனைவியின் கொடூரக் கொலை இடம்பெற, அந்தக் கொலையை விசாரிக்கும் அவருக்கு சில தடயங்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில் அதே போன்று மற்றொரு தம்பதி கொலை செய்யப்படுகிறார்கள். தொடர் கொலைகளாக இவை அமையவே இதை ஒரு சாதாரண வழக்காக கருதாமல் இன்ஸ்பெக்டர் ஷிவதா தலைமையில் இந்தக் கொலைகளை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது.
சமுத்திரக்கனி மீது நம்பிக்கை வைக்க முடியாத காரணத்தால் அந்தக் குழுவில் அவர் இடம் பெறாத நிலையில், இன்ஸ்பெக்டர் ஷிவதா அவரைப் பற்றி அறிந்து தன் குழுவில் அவரைச் சேர்த்துக் கொள்கிறார்.
சமுத்திரக்கனி அந்த குழுவில் ஈடுபட்டது எவ்வளவு பெரிய உண்மையை உலகிற்கு சொன்னது என்கிற அளவில் இதேபோன்று 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது அவரது விசாரணையில் தெரிய வருகிறது.
அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனி சேகரித்து வைத்திருக்கும் தடயங்களில் முக்கியமானது இந்த கொலைகள் பணத்தையோ நகையையோ கொள்ளையடிக்க நடத்தப்பட்டவை அல்ல என்பதும், ஆணின் அரைஞாண் கயிறு மற்றும் பெண்ணின் தாலிச்சங்கிலி இவற்றிற்காக தான் இந்த கொலைகள் நடந்திருக்கின்றன என்பதுதான். இந்த தடயத்தைக் கொண்டு இந்தப் படுபாதக கொலைகளை செய்தவர்கள் யார், எதற்காக இந்த கொலைகள் செய்யப்பட்டன என்று கண்டுபிடிப்பதுதான் இந்த தொடரின் முழு கதை.
இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் என்பதால் அந்த பதை பதைப்புடனேயே தொடரை பார்க்க நேர்கிறது.
முதல் எபிசோடிலேயே பதற வைக்கும் கொலையை காட்டி நம்மை இந்த திகில் அனுபவத்துக்கு தயார் செய்து விடுகிறார் இயக்குனர் நவீன்குமார் பழனிவேல்.
ஆனால் இது போன்ற கதைகளில் கொலையாளிகள் யார் என்கிற முடிச்சு முடிவில்தான் அவிழ்க்கப்படும். அதை மாற்றி இதில் வித்தியாசமாக இரண்டாவது எபிசோடிலேயே கொலையாளிகள் யார் என்பதை நமக்குத் தெரிவித்து விடுகிறார்.
ஆனால் இவர்களை காவல்துறை எப்படி கண்டுபிடித்தது என்கிற விஷயத்தைதான் முன்னிலைப்படுத்தி சஸ்பென்சுடன் நமக்கு சொல்கிறார்.
நாயகன் சமுத்திரகனி இதுவரை படங்களில் ஏகப்பட்ட முறை காக்கி சட்டையை அணிந்து காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரது உயரத்துக்கு ஏற்ற மிடுக்குடன் புஜங்களை உயர்த்தி இரு கைகளை விரித்து கம்பீரமாக பல படங்களில் அவர் வந்ததைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் அவற்றையெல்லாம் அப்படியே மறந்து விட்டு இன்னொரு புதிய முகத்தை இந்தத் தொடரில் அவர் நமக்கு காட்டுகிறார்.

புத்திசாலித்தனத்தில் கூர்மையானவராக இருந்தாலும் நடவடிக்கைகளில் மந்தமான ஆசாமி என்கிற புதிய கதாபாத்திரத்தில் அவர் தோன்றியிருப்பது நமக்கு மட்டுமல்லாமல் அவருக்கும் புதிய அனுபவம்தான்.
அந்த கேரக்டரைசேஷனை தொடர் முழுவதிலும் நூல் பிடித்த மாதிரி உணர்ந்து நடித்திருப்பது அவரது நடிப்பின் புதிய பரிமாணம். அவரது விசாரணை முறையும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது.
அழகுப் பதுமையாக இருக்கும் ஷிவதாவுக்கு காக்கிச்சட்டை போட்டு விட்டார்களே என்று கவலையாக இருந்தாலும் அவர் இல்லை என்றால் இந்த ரத்தக் கதைக்களம் வளம் பெற்றிருக்காது என்பது புரிகிறது.
ஷிவதாவும் அளவாக நடித்து, தன் பாத்திரத்திற்கு நியாயம் செய்கிறார்.
வில்லன் ராஜ் வித்தியாசமான உடல் மொழி மற்றும் கொடூர பார்வை மூலம் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவரது தம்பியாக நடித்திருக்கும் பிரேமும் அண்ணனின் கொடூரத்துக்கு தப்பாத தம்பியாக வந்து நம்மை பயமுறுத்துகிறார்.
அதேபோல் மூணாறு ரமேஷுக்கும் போலீசாக நடிக்க சொல்லித் தரத் தேவையில்லை. இதில் உயர் காவல்துறை அதிகாரியாக வரும் அவர் தனது பாத்திரத்தை ஊதித் தள்ளி விட்டுப் போகிறார்.
இவர்களுடன் சுந்தரபாண்டியன், கொற்றவை, விஷாகன், புலிபாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்னா, தயாளன் உள்ளிட்டவர்கள் தங்கள் பாத்திரங்களை சிறப்பான பங்களிப்பு மூலம் வெளிக்காட்டி இருக்கிறார்கள்.
நமது பதட்டத்தை அதிகரிப்பதில் கே.கே-வின் ஒளிப்பதிவும், விபின் பாஸ்கரின் இசையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினேஷ் குமாரின் படத்தொகுப்பும் அதற்கு உறுதுணை செய்கிறது.
1999ல் நடக்கும் கதைக்கான களத்தை உருவாக்குவதில் ஆர் டைரக்டர் மணிகண்டன் சந்திரசேகர் இன்னும் கூட கவனமாக இருந்திருக்கலாம். பல இடங்களில் இயல்பை மீறிய செயற்கைத் தனம் தெரிகிறது.
எழுதி இயக்கியிருக்கும் நவீன்குமார் பழனிவேல், வழக்கமான துப்பறியும் விசாரணைக் கதையை நாம் அறிந்து வைத்திருக்கும் பாணியில் சொல்லாமல் இது ஒரு உண்மைக் கதையாகவும் ஆனதால் அதன் தன்மையிலேயே இயக்கியிருப்பது புதிய அனுபவத்தை தருகிறது.
தவிர்க்காமல் பார்க்க வேண்டிய வெப் தொடர்களில் ஒன்று இந்தத் ‘தடயம்..!’
– வேணுஜி