தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர்.
இவர்களைதவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், இரண்டுதுணை தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார் சுயேச்சையாக போட்டியிடும் சிங்காரவேலன்.
வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வரும் இவர் எனக்கு ஓட்டளிப்பதற்கு உங்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன். அனைவரது நலனுக்காக போராடுவேன். முதல்முறையாக போட்டியிடும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தியுள்ளதாம்.
அதற்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுவது தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக நிழல் பட்ஜெட் ஒன்றை வரும் வெள்ளிக்கிழமை வெளியிட இருப்பதாக சிங்காரவேலன் அறிவித்து உள்ளதுதான்.
இது தேர்தல் களத்தில் கடும் அதிர்வலையையும், தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது
நிழல் பட்ஜெட் தேர்தல் அறிக்கையில் என்னதான் இருக்கிறது என விசாரித்தபோது இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எந்த அணியும் இது போன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில்லை என்கிற வடிவத்தில் இருக்கும்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி அளவிற்கு வருமானம் கிடைக்ககூடிய திட்ட வரைவு அறிக்கையாக அது இருக்கும்.
அறிக்கை வெளியான பின்பு வாக்காளர்களின் கவனமும் சிங்காரவேலன் பக்கம் திரும்பும் சாதாரண வேட்பாளராக இரண்டு அணிகளாலும் அலட்சியமாக பார்க்கப்பட்டவர் முதல் சுற்றில் வெற்றிபெறும் வேட்பாளராக முந்துவது நிச்சயம் என்கிறது சிங்காரவேலன் ஆதரவு வட்டாரம்.
தேர்தல்கள நிலவரம் பற்றி மூத்த தயாரிப்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது “சிங்காரவேலன் ஆர்வக்கோளாறில் போட்டியிடுவதாகவே நினைத்தோம். எங்களிடம் வாக்கு கேட்க வந்தபோது அவரது அணுகுமுறை, ஆக்கபூர்வமான திட்டங்கள் அதனை அமுல்படுத்த நிதி வரவுக்கான திட்டமிடல் ஆகியவற்றை கேட்டபோது எங்களுக்கு பிரமிப்பு உண்டானது.
‘இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த..? ‘ என கேட்க வேண்டியதாயிற்று. புதிய இளைஞர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தருவதில் தவறில்லை…” என்று சொல்லி இருக்கின்றனர்.
என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..!