உடலில் சிறிய காயம் பட்டாலே அது ஆற நாட்கள் பல ஆகின்றன. காயம் ஆறினாலும் அதன் வடுக்கள் காலப்போக்கில் நிலைத்திருக்கின்றன. என்றால் ஒரு போரின் வடுக்களும், போர் தந்த அதிர்வுகளும் எத்தனைக் காலம் நிலைத்திருக்கும்..? அதைச் சொல்ல வருகிறது இந்தப்படம்.
இலங்கையில் நடைபெற்ற போர் எத்தனை அப்பாவித்தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதை உலகமே அறியும். அந்தப்போரில் பலர் சிறைப்பிடிக்கப்பட்டும், காணாமல் போயும் இருக்க, போரை அடுத்து ஈழம் எப்படி இருக்கிறது, தமிழர்களின் இன்றைய நிலை என்ன என்பதை எந்த சமரசமும் இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.
அதனூடே தமிழ் ஈழத்துக்கு போராடிய போராளிகளின் கடமை உணர்வு என்றைக்கும் நிலைத்திருக்கும் என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
எட்டு ஆண்டுகள் சிறை வாசத்துக்குப்பின் சொந்த வீட்டைத் தேடி முல்லைத்தீவு வருகிறார் நாயகன் போராளி அமுதனாக வரும் அரவிந்தன். ஆனால் அவரது வீடு அமையப்பெற்ற வட்டப்பிலை பகுதிகளில் எல்லாம் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க அங்கே நுழைய முடியாத நிலையில் சிறைக்குப் போனபோது ஆதரவின்றி விடப்பட்ட தன் மனைவியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.
அதன் விளைவாக அவருடன் போராளிகளாக செயல்பட்ட தோழரையும் தோழியையும் சந்தித்து ஆறுதல் பெறுகிறார். தொடர்ந்த தேடலின் முயற்சியில் மனைவியையும் மகளையும் சந்திக்கிறார்.
இந்தக் கதை ஒரு புறமாகவும், ஈழத்திலிருந்தபோது இயக்கப் பொறுப்பில் இருந்தவர் அதன் விளைவாக வெளிநாட்டுக்கு போய் பெரும் செல்வந்தராக மாறி தன்னுடைய மகளின் திருமணத்துக்காக இலங்கை வந்திருக்கும் கதையும் சொல்லப்படுகிறது. அவரும் தமிழர் தான் எனினும் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த அவரது வாரிசுகள் இங்கே இருக்கும் தொப்புள்கொடி உறவுகளை இகழ்ந்து பார்க்கும் நிலையில் இருப்பதையும் இயக்குனர் சுட்டிக் காட்டுகிறார்.
இந்நிலையில் அமுதனின் தோழி யாழினிக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வர இயக்கத்தின் பொறுப்பிலிருந்த வகையில் அந்த செல்வந்தரை சந்தித்து யாழினியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அமுதன் பொருள் உதவி கேட்க அவர் மறுக்கிறார். தொடர்ந்து செல்வந்தரின் மகள் கடத்தப்பட என்ன ஆகிறது என்பது மீதிக்கதை.
அமுதனாக வரும் அரவிந்தன் அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். கண்களில் தேடல் இருந்தாலும் அதை தாண்டிய ஒரு போராளியின் தீர்க்கம் உறைந்திருக்கிறது. தனக்கு எதிரே இருக்கும் அத்தனை பிரச்சினைகளையும் மிக சாதுரியமாக எதிர்கொண்டு அதில் இருந்து அவர் வெளியே வருவது மிகுந்த மன நிறைவைத் தருகிறது.
அவரது மனைவி ஆனந்தியாக வரும் நடிகையும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவரைத் தேடி அமுதன் கண்டுபிடிக்கும் இடத்தில் நம்மையும் அறியாமல் மனது நிறைந்து கண்ணீர் துளிர்க்கிறது. அவர்களின் மகளின் உடல்நிலை போரின் விளைவாக ஆரோக்கியக் குறைவுடன் இருப்பதும் நம் மனதை உறைய வைக்கிறது.
வழக்கமாக இதுபோன்ற படங்களில் தமிழர்களுக்கு எதிரானவர்களாக சிங்களவர்கள் மட்டுமே சித்தரிக்கப்படுவதிலிருந்து விலகி இந்தப் படத்தில் தமிழர்களுக்கு உள்ளேயே இருக்கும் பிரிவினையையும், அதன் விளைவையும், சுயநலத்தையும் சுட்டிக்காட்டி இருக்கும் இயக்குனரின் நியாயம் பாராட்ட வைக்கிறது.
அப்படிப்பட்டவர்கள் இணைந்து ஓரணியில் நின்று எதிர்கால இலங்கை தமிழர்களின் வாழ்வு வளம்பெறவும், அல்லல்கள் விலகவும் துணை நிற்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லி புதிய நம்பிக்கையை உணர்த்தியிருக்கிறது படம்.
படத்தில் பணியாற்றி இருக்கும் தொழில் நுட்ப கலைஞர்களில் சிங்களவர்களும் இருப்பது பாராட்டத்தக்க முயற்சி.
தேவையான இடங்களில் மட்டுமே கழுகுப் பார்வையில் இலங்கையையும், கடலையும் காட்சிப்படுத்தி இருக்கும் ஒளிப்பதிவாளரின் திறன் வியக்க வைக்கிறது. அந்தக இருளில் இரண்டு தென்னை மரங்களையும் வட்ட நிலவையும் கீழிருந்து அமுதனின் பார்வையில் காட்சிப்படுத்தி இருக்கும் அழகும் உணர்வும் ரசிக்க வைக்கிறது.
இசையும் உணர்வுகளை சொல்லி இருக்கிறது என்றாலும் இன்னும் கொஞ்சம் ஆழமாக இருந்திருக்கலாம்.
கடைசியில் எதிர்பாராமல் நிகழும் அமுதனின் முடிவும் படத்தில் ஒட்டாமல் தொக்கி நிற்பது ஒரு குறை.
உலகத் தமிழர்கள் நிதியளித்து உருவான பட்ஜெட் டுக்குள்ளான படமாக இருந்தாலும் கடத்தப்பட்ட பெண்ணை மீட்கும் காட்சி வணிக ரீதியான பிரமாண்டத்துடன் அமைந்துள்ளது.
போரின் விளைவாக மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு தமிழர் நம்பிக்கையுடன் சொல்லும் நந்திக்கடல் நம்பிக்கை சென்டிமென்ட் நெகிழ்ச்சியுடன் அமைந்துள்ளது.
இருந்தாலும் உள்ளது உள்ளபடி காட்டி துரோகத்தையும் சரிவர நிறுத்தி துலாக்கோல் பிடித்திருக்கும் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்பின் முயற்சியை கரவொலி எழுப்பி வரவேற்கலாம்.
சினம் கொள் – சீரிய முயற்சி..!
– வேணுஜி