April 25, 2024
  • April 25, 2024
Breaking News
January 14, 2022

கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்பட விமர்சனம்

By 0 378 Views

பொங்கலுக்கு ஒரு கிராமத்துப் படம் வராவிட்டால் எப்படி என்று வந்திருக்கும் படம். 

இதில் கொம்பு வச்ச சிங்கமாக சசிகுமார். அப்படித்தான் நினைக்கிறோம். மற்றபடி தலைப்புக்கான அர்த்தம் புரியவே இல்லை என்பதுதான் உண்மை.

நட்பு, காதல், பழி வாங்கல், கொலை அதனுடன் சாதி அல்லது அரசியல்… இதுதான் சசிகுமார் பட பார்முலாவாக இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதில் சம்பந்தமில்லாமல் துருத்தலாக பெரியாரிஸமும் உள்ளே வந்திருக்கிறது.

இது சாதிப்படமில்லை என்பதற்காக பெரியாரை வலுக்கட்டாயமாக உள்ளே கொண்டுவந்தாலும் படத்துக்குள் சாதியும், மதமும் தங்கள் கடமையைச் செவ்வனே செய்து விடுகின்றன.

‘மண்ணு தின்ற நாளிலிருந்து… ‘ அதாவது குழந்தைப் பருவத்தில் இருந்து சசிகுமாரும் ஐந்து நண்பர்களும் நட்புடன் வாழ, தங்கள் கிராமத்துக்குள் சாதி, மதம் நுழையக் கூடாதென்று அவர்கள் பெரியாரிஸ்டுகளாகவும் கொள்கையுடன் இருக்க, ஆனால் அவர் மறுத்த அரசியல் சார்பாக மூவர் முவராகப் பிரிந்து தங்கள் ஊரில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேலை செய்யப்போய் கட்சிகளுக்கான பகையில் ஒரு பக்கத்து நண்பன் கொல்லப்படுகிறார். 

இரண்டு நட்பு அணிகளும் எதிரிகளாக ஆகின்றனர். அது சாதிப்பிரச்சினையாகவும் ஆக பழிக்குப் பழியாக நண்பன் இறந்த அடுத்த வருட நினைவு நாளில் எதிர் நட்பு அணியில் இருக்கும் இன்னொரு நண்பனைக் கொல்கிறார்கள்.

இரண்டு கொலைகள் தொடர்பாகவும் சசிகுமார் கைது செய்யப்படுகிறார். மூன்றாவது வருடம் யார் கொலையாகப் போகிறார் என்று ஊரே பம்மிப் பதுங்கிக் கிடக்க, ஊரும், உறவுகளும் நட்பையும், சாதியையும் சந்தேகப் பட, இதன் பின்னணியில் இருக்கும் வில்லனை சசிகுமார் கண்டுபிடிக்கும் கதை.

வில்லன்களாக ஹரீஷ் பெராடி, தயாரிப்பாளர் இந்தர் குமார், அருள்தாஸ் ஆகியோர் அடையாளப் படுத்தப்பட, உண்மையான வில்லன் யார் என்பது சஸ்பென்ஸ். 

தன் வழக்கப்படியே சலூனிலிருந்து திரும்பியது போல வாரிய தலை கலையாமல், ட்ரிம் பண்ணிய தாடி குறையாமல் நீட்டாக வருகிறார் சசிகுமார். எப்படி வந்திருக்க வேண்டியவர் இப்படி ஆகி விட்டாரே என்று கவலையாகத்தான் இருக்கிறது. ஆனால், ஹீரோவுக்கு பெரிய ஹோப் இல்லாத இந்தக் கதையில் நடிக்க ஒத்துக்கொண்ட அவரைப் பாராட்டியாக வேண்டும். 

நாயகியாக மடோனா செபாஸ்டியன். மடோனா கதைக்குள் வந்து விட்டதாலேயே இந்த பாத்திரத்துக்கு அதிக வலு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ரொம்பவும் பாவம். ரொம்ப யூஷுவலான ஹீரோயினாகத்தான் இதில் அவர் வருகிறார்.

சசிகுமாரின் நண்பர்களாக வரும் ஐவரில் சூரி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார் – அங்கங்கே சிரிக்கவும் வைக்கிறார். மற்ற நண்பர்களுக்கு எல்லாம் இரண்டு வரி டயலாக் இருந்தால் பெரிய விஷயம். அதுவும் ஐவரில் ஒருவராக வரும் அபி சரவணன் எல்லாக் காட்சிகளிலும் பேசாமல் வந்து போகிறார். கிளைமாக்சில் அவரை வைத்து ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்திருப்பதால் அதற்கு ‘ மௌனமாக ‘ ஒத்துக் கொண்டார் போலிருக்கிறது.

சசிகுமாரின் தந்தையாக மறைந்த இயக்குனர் மகேந்திரன் நடித்திருக்கிறார். சொல்லிக் கொள்ளத்தக்க பவர்ஃபுல்லான வேடம் அவருக்கு.

மற்றபடி திரை கொள்ளாத அளவுக்கு கிராமத்துக்  குடும்பங்களின் பாத்திரங்களை படைத்து அத்தனை பேரையும் வைத்து நியாயமாக இயக்கியிருக்கிறார் எஸ்.ஆர். பிரபாகரன். ஆனால் சஸ்பென்ஸ் மிகுந்த இந்த கதை எதை நோக்கி செல்கிறது என்பது கடைசிவரை சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது.

நட்பில் ஆரம்பிக்கும் கதை சம்பந்தமில்லாமல் ஈழப் போராளிகளின் தொடர்பில் வருகிறது. அந்த தொடர்பில் சாதி பேதமற்ற சூழல் கொண்ட கதையாக உருவெடுத்து, பகையான குடும்பங்களுக்குள் காதல் முளைக்க, காதலில் பிரச்சனை வரும் என்று பார்த்தால் அதில் வராமல் அரசியல் தொடர்புக்குள் நுழைந்து அதன் விளைவாக நட்புக்குள் விரிசல் விழுந்து, சாதி மதம் நுழைந்து ரெண்டு தலை விழுந்து எப்படி எப்படியோ பயணப்பட்டு முடிகிறது படம்.

லட்சணமான நடிகை ஸ்ரீ பிரியங்காவுக்கு இதிலும் ஒரு துக்கடா வேடம்.

சமுத்திரக்கனியும் சங்கிலி முருகனும் தலா ஒரு காட்சியில் வந்து தலை காட்டி விட்டுப் போயிருக்கிறார்கள்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் பிரேம் பிசகாத நேர்த்தி தெரிய… திபு நினன் தாமஸ் இசையும் தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறது.

கொம்பு வச்ச சிங்கம்டா – நட்புக்குள்ள பங்கம்டா..!